“குமரப்பா பண்படுவதற்காக என்னிடம் வரவில்லை…பக்குவப்பட்ட பின் தான் என்னிடம் வந்திருக்கிறார்”
தேசத் தந்தை காந்தி
தமிழகத்தில் பிறந்த ஒரு குழந்தை, ஒரு நூற்றாண்டிற்குப் பிறகு உலகில் மாற்றுப் பொருளியலைத் தேடும் அறிஞர்களுக்கெல்லாம் ஆதார ஊற்றாக இருப்பது நமக்கெல்லாம் பெருமை அல்லவா? அந்த மாமகனை அறியாத நமக்கெல்லாம் சிறுமை அல்லவா?, இங்கிலாந்தின் சூமேக்கரும், அமெரிக்காவின் மாரக் கின்லேவும், ஏன் நமது அமர்த்தியா சென்னும் வழிமொழியும் அந்தப் பொருளியல் மேதை தஞ்சாவூரில் பிறந்த ஜோசப் கொரில்லியன்ஸ் குமரப்பா என்ற ஜே.சி. குமரப்பா.
தஞ்சையில் வாழ்ந்துவந்த ஒரு கிறித்துவக் குடும்பத்தில் 1892ஆம் ஆண்டு சனவரி மாதம் 4ஆம் நாள் ஒன்பதாவது பிள்ளையாகப் பிறந்தார். இவரது பாட்டனார் மதுரையில் தேவாலயத்தில் பாதிரியாராக இருந்தவர். அரசுப் பணியின் காரணமாக குடும்பம் தஞ்சைக்கு இடம்பெயர்ந்தது. தஞ்சை, சென்னை என்று கல்வியைப் பெற்று தனது 21ஆம் அகவையிலேயே இலண்டன் சென்று கணக்கியலில் பணியாற்றத் தொடங்கினார். இவரது தந்தை தனது அனைத்துச் சொத்துகளையும் விற்று பிள்ளைகளை நன்கு படிக்க வைத்துள்ளார். குமரப்பாவின் பெற்றோர் இட்ட பெயர் ஜோசப் செல்லத்துரை கொர்னீலியஸ், அவரது நண்பர்களும் உறவினர்களும் ‘செல்லா’ என்றே செல்லமாக அழைப்பர். ஆனால் அவர் பின்னர் தனது மரபு வழித் தமிழ்ப் பெயரான குமரப்பா என்றே அழைத்துக் கொண்டார். அவ்வாறே புகழும் பெற்றார்.
புத்திய (modern) பொருளியலின் தந்தை என்று அழைப்படும் ஆடம்சுமித் கட்டுப்பாடற்ற பொருளியலை உலகிற்குப் பரிந்துரைத்தார். தொழில்புரட்சியும் அதன் பின்னணியில் உருவான முதலீட்டுக் குவியலும் அதை விரும்பி ஏற்றன. பின்னர் காரல் மார்க்சு கட்டற்ற முதலம் (capital) அதன் பெருக்கம் இதனால் ஏற்பட்ட சுரண்டல் இவற்றை கணக்கில் கொண்டு புதிய பொதுவுடமை நெறிமைகளை உருவாக்கினார்.
ஆடம்சுமித் மறைந்து ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் பிறந்த குமரப்பா, பொருளியலில் ஆழமான நெறிமைகளை உலகச் சிந்தனையாளர்கள் வியக்கும் அளவிற்கு வகுத்துக் கொடுத்துள்ளார். இன்று மிகவும் பேசப்பட்டு வருகின்ற நீடித்த மேம்பாடு (sustaiable development) என்பது பற்றியும் திணையியல் பொருளியல் (ecological economy) பற்றியும் மிக நுட்பமான வரையரைகளைக் கூறியுள்ளார்.
குமரப்பாவின் காலத்தில் இரண்டு பெரும் பொருளியல் சிந்தனைப் பள்ளிகளான முதலாளியம், சமத்துவத்தை உறுதி செய்ய வேண்டும் என்று பேசிய பொதுவுடமை ஆகியவை விளங்கின.
ஆனால் இவையிரண்டும் பொருளாக்க முறை பற்றி கவலை கொள்ளவில்லை. (தொழில்) நுட்பவியல் முன்னேற்றங்களால் பெருகும் பொருளாக்கம் சிக்கல்களுக்கெல்லாம் தீர்வாகிவிடும் என்று கருதினர். அதாவது பொருளாக்கத்தில் முதலீடு + மூலப்பொருள் + உழைப்பு என்ற மூன்றை மட்டுமே கருத்தில் கொண்டனர். ஆனால் வரையறுக்கப்பட்ட இயற்கை வளங்களைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. அத்துடன் பொருளாக்க முறை (mode of production) பற்றியும் அவர்கள் கவலைப்படவில்லை. ஆனால் குமரப்பா அந்த இரண்டு கூறுகளையும் கணக்கில் கொண்டார். இயற்கை வளங்கள் தொடர்ந்து கிடைப்பதரிது என்றும் பெருமளவு பொருளாக்கம் தவறு, பெருமளவு மக்களால் பொருளாக்கம் நடக்க வேண்டும் என்று கூறினார்.‘
வணிகத்திலுள்ள தன்னலப்பண்பு என்ற ‘அருவக் கை’ (invisible hand) பொதுமக்களின் நலனுக்காக செயலாற்றுகிறது’ போன்ற ஆடம்சுமித் சிந்தனைகளில் இருந்து குமரப்பா முரண்பட்டார். அவர் மக்களிடம் உள்ள அறப்பண்புகளை முன்னிறுத்தினார். அவற்றை விரிவான முறையில் பெரிதாக்க வேண்டும் என்றார். ரிக்கார்டோ என்ற பொருளியல் அறிஞரின் சிந்தனைகள் அன்று ஆடம்சுமித்தைப்போலவே புகழ்பெற்று இருந்தன. அவர் உழைப்பு என்பதும் பொருளைப்போல வாங்கவும் விற்கவும் கூடிய ஒன்றுதான் என்றார். சந்தையின் போக்கை வைத்து உழைப்பை கூட்டிக்கொள்ளவோ குறைத்துக்கொள்ளவோ முடியும் என்றார். இதன் அடிப்படையில் அவர் பிரிட்டானிய நாடாளுமன்றத்தில் உழைப்பாளிகளின் குழந்தைகளுக்கு நாட்பராமரிப்பு நடுவங்களை (daycare centres) அமைப்பதை எதிர்த்து வாக்களித்தார். மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதற்கான வழியைத் தடுப்பது இதுவாகும் என்றார்!
அதாவது பட்டாளி வகுப்பு அதிகமாகிவிடும் என்பது அவரது கவலை. இவரது கருத்துக்களுக்கு மாற்றான சிந்தைனைகளும் உருவாயின, குராபோட்கின், லியோ டால்ஸ்டாய் ஆகிய அறிஞர்களின் வன்முறையற்ற பொருளியல், குமரப்பாவின் சிந்தனையில் தாக்கத்தை ஏற்படுத்தின. காந்தியடிகளுக்கு டால்ஸ்டாயின் தாக்கம் அதிகம் உண்டு. அவருடனான கடிதப் போக்குவரத்து அவரது பெயரில் உருவாக்கிய பண்ணை போன்றவை குறிப்பிடத்தக்கன. காந்தியடிகள் உணவுக்கான உழைப்பு (Bread labour) என்று பொருளாக்க முறையை வரையறுத்தார். குராபோட்கின் கூற்றுப்படி நலவாழ்க்கை எனப்படும் உடலியல், அறவியல், அழகியல் தேவைகள் ஒருவருக்கு நிறைவு செய்யப்படும்போது அவரது உழைப்பு உச்ச அளவாக இருக்கும். எனவே ஒரு குமுகம் (Community) அனைவரது நலத்தையும் முன்னிறுத்தி இயங்குமானால் அங்கு தன்னார்வமாகவே வேலைகள் நடைபெற்றுவிடும் என்கிறார். இது அடிமை உழைப்பு, வலுக்கட்டாய உழைப்பு இவற்றுக்கு மாற்றானது.
குமரப்பா இன்னும் ஒருபடி மேலே சென்று விளையாடும்போது நமக்கு களைப்பு ஏற்படுவதில்லை, உழைக்கும்போதுதான் களைப்புத் தோன்றுகிறது, எனவே உழைப்பை விளையாட்டாக மாற்றிவிட்டால் அதாவது விருப்பமிக்க ஒன்றாக விளையாட்டை மாற்றிவிட்டால் அது அதிக விளைச்சல் திறன் மிக்கதாயும் மகிழ்ச்சியூட்டக் கூடியதாகவும் இருக்கும் என்கிறார். மார்க்சின் ‘அயன்மையாதல்’ (ஒதுக்கி வைக்கப்படும் நிலை – Alienation) என்ற கருத்தாக்கம் குமரப்பாவின் சிந்தனைக்கு வித்தாக இருந்துள்ளது. உழைப்பவன் தனது உழைப்பில் இருந்து கிடைக்கும் விளைச்சலை நுகர முடியாமல் போகும்போது அதன் மீது அவன் அயன்மைப்பட்டு(ஒதுக்கி வைக்கப்பட்டு)ப் போகிறான். இளம் மார்க்சின் எழுத்துகளில் இந்தக் கருத்து மிக ஆழமாக இருந்தது. தொழிற்சாலைமயமாகும் பொருளாக்கத்தில் அயன்மையாகுதல் அதிகமாகிறது. யாருக்காகவோ தான் உழைப்பதாக உழைப்பாளி நினைக்கிறான், நுகர்பவனுக்கோ யார் உருவாக்கியது என்றே தெரியவில்லை. இதை பரவல்மயப்படுத்தப்பட்ட பொருளாக்கத்தின் மூலம் தீர்க்க முடியும் என்பது குமரப்பாவின் கருத்து.
குமரப்பாவின் கருத்துகளில் தாக்கத்தை ஏற்படுத்தியவர்களில் அவரது ஆசிரியரான எட்வின் செலிக்மென் முதன்மையானவர். அமெரிக்காவின் வரி விதிப்புக் கொள்கைகளை தீர்மானித்தவர்களில் முதன்மையானவர். துணித்தொழில் பணியாளர்களுக்காகப் போராடியவர். அறப்பண்பாட்டு சங்கத்தின் (Society for Ethical Culture) தலைவராகப் பணியாற்றிவர். கொலம்பியா பல்கலைக் கழகத்தில் போராசியராக இருந்த இவர் குமரப்பாவை இந்தியாவின் பொருளியல் வறுமை பற்றிச் சிந்திக்கத் தூண்டியவர். இவர் அம்பேத்காரின் ஆசிரியரும் ஆவார். இதில் சுவையான செய்தி என்னவெனில் பிரிட்டானிய இந்தியாவின் நிதியியல் பரிணாமத்தைப் (The Evolution of Provincial Finance in British India) பற்றிய ஆய்வை 1916ஆம் ஆண்டிலேயே பாபாசாகேப் அம்பேத்கர் செய்து முடித்துள்ளார்.
இதற்கு அறிமுக உரை கொடுத்தவர் பேராசிரியர் செலிக்மன். குமரப்பா சமுதாய தேவாலயம் ஒன்றில் பிறகு ஏன் இந்தியா ஏழ்மையில் உள்ளது? (Why then is India Poor?) என்ற தலைப்பில் பேசியதை செலிக்மன் கேள்வியுற்று குமரப்பாவை பொருளியல் ஆய்வில் நுழையுமாறு நெறிப்படுத்தியுள்ளார். குமரப்பா தனது ஆய்வுப் பொருளாக ‘பொதுநிதியும் இந்தியாவின் வறுமையும்’ (Public Finance and India’s Poverty) என்ற தலைப்பை எடுத்து ஆய்வு செய்தார். இதன் விளைவாக அவர் பல்வேறு உண்மைகளைக் கண்டறிந்தார். பிரிட்டானிய அரசு எவ்வாறு இந்தியாவைச் சுரண்டுகிறது என்பதை பல்வேறு புள்ளியியல் தரவுகளாடு விளக்கினார்.
இந்தியாவில் விதிக்கப்படும் வரிகள் யாவும் பிரிட்டனின் படைக் குவிப்பிற்கு பயன்படுத்தப்பட்டது. 1925-26ஆம் ஆண்டளவில் அமெரிக்கா தனது போர்ப்படைக்காக 48.8 விழுக்காடு செலவு செய்தபோது பிரிட்டனுடைய அடிமை நாடான இந்தியா 93.7 விழுக்காடு செலவிட்டது. இதனால் பொதுப்பணிக்கான செலவினங்கள் மிகவும் குறைவாக இருந்தன. இதன் தொடர்ச்சியே பஞ்சங்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
மிகப் பகட்டான மேற்கத்திய உடையாளராக இருந்த குமரப்பா காந்தியைச் சந்தித்த பின்னர் நான்கு முழ வேட்டியில் உருவாக்கிய ‘தோத்தி ஜாமா’ (வடநாட்டார் பைஜாமா எட்டுமுழுத்தில் இருக்கும்) என்ற எளிய உடையை அணிந்து வாழ்நாள் முழுவதும் இருந்தார். இவரது காந்தியுடனான சந்திப்பு மிகவும் உணர்ச்சிமயமானதும் சுவையானதுமாகும். இந்தி மொழியோ குசராத்தியோ தெரியாத குமரப்பா குசராத்தில் உள்ள மடார் வட்டத்தில் தனது பொருளியல் கணக்கெடுப்பை நடத்தி வறுமையின் உண்மையான உருவத்தை வெளி உலகிற்குக் காட்டினார்.
பெரும்பாலான பொருளியல் அறிஞர்கள் அறைகளுக்குள் அமர்ந்துகொண்டு செய்தித்தாள்களில் வரும் தரவுகளை வைத்து தலைவருமானம்(தனிநபர் வருமானம் – per capita) போன்ற தரவுகளை நிறுவுவார்கள். இதன்படி அன்றைய காலகட்டத்தில் ஆண்டுத் தலைவருமானம் என்பது 60 ரூபாய்களுக்கு மேல் என்று கருதிக் கொண்டிருந்தபோது, உண்மையில் ஆண்டுக்கு 12 ரூபாய்க்கும் குறைவாக மக்களின் தலைவருமானம் உள்ளதை நேரடி கள ஆய்வு மூலம் நிறுவினார். நாட்டின் மிகப் பெரிய பணக்காரரின் வருமானத்தையும் எண்ணற்ற ஏழைகளின் வருமானத்தையும் நிரவை (சராசரி) போட்டுப் பார்க்கும் தவறான கணக்கீட்டை மறுதலித்தார். நடைமுறை சார்ந்த பொருளியல் மேதையாக இருந்ததால் மக்களின் நேரடிச் சிக்கல்களை கண்டறிய முடிந்தது.
ஆடம்சுமித், ரிக்கார்டோ போன்றவர்கள் பணக்காரர்கள் எவ்வாறு மேலும் பணத்தை உருவாக்கிக் கொள்ள முடியும் என்பதற்கான சிந்தனைகளையே முன்வைத்தனர். குமரப்பா அறத்தை தனது முதல் மதிப்பீடாக வைத்துக் கொண்டார். வழமையான கருத்தாக்கங்களான வேலையின் தன்மை, உழைப்புப் பிரிவினை, அரசின் பங்கு, சொத்துரிமை, பரிமாற்றத்தில் பணத்தின் பங்கு போன்றவன்றில் இவர் புதிய சிந்தனைகளைப் புகுத்தினார். பணத்தின் ஆளுமையை குறைத்துக் கொள்ள வேண்டும் என்பது இவரது கருத்து. தாளில் அச்சடித்த பணத்திற்கு முன்னுரிமை அளிக்கக் கூடாது என்றார்.
கிராம உத்யோக் பத்திரிகா இதழில் 1942ஆம் ஆண்டு ‘உணவுக்காக கல்’ (stone for bread) என்ற கட்டுரையில் பிரிட்டானிய அரசு சேமவங்கி (Reserve Bank) வெளியிட்ட பண மதிப்பிற்கும் உண்மையான பொருளுக்கும் உள்ள வேறுபாட்டை விளக்கினார். முந்தைய பொருளியல் சிந்தனையாளர்கள் வேலையைப் பிரித்துக் கொடுத்து திரும்பத் திரும்ப ஒரே வேலையைச் செய்ய வைத்தால் பொருளாக்கம் அதிகரிக்கும் என்றனர். ஆனால் அதில் எந்தவிதமான ஈடுபாடும், படைப்பாற்றல் திறனும் இருக்காது என்பது குமரப்பாவின் ஆழமான கருத்து. தனது “ஏன் சிற்றூர் இயக்கம்” (why village movement) என்ற நூலில் இதை விளக்குகிறார்.
குமரப்பாவின் ஆய்வுகளில் முத்தாய்ப்பானது ‘மன்னுமைப் பொருளியம்’ (நிரந்தர பொருளாதாரம் – Economy of Permanence), இது இன்றைய உலகிற்கான கருத்தியலாக உள்ளது. சூழலியல் சீர்கேடுகளும், இயற்கை வளங்களின் பற்றாக்குறையும், அழிமானமும் உருவாகியுள்ள இச்சூழலில் பசுமைச் சிந்தனையை முன்வைத்த பெரும் மேதையாக குமரப்பா திகழ்கிறார். எந்த ஒரு பொருளாக்க முறையும் இயற்கையின் சுழற்சியில் தன்னை இணைத்துக் கொள்ள வேண்டும். அதற்குப் புறம்பாகப் போகும்போது பெரும் தொல்லைகள் உருவாகும்.
அவர் கூறுகிறார், ‘‘நிலக்கரி, கன்னெய்(பெட்ரோல்), இரும்பு, செம்பு, தங்கம் ஆகியவற்றை பெரிதும் சார்ந்து இன்றைய உலகம் உள்ளது. இவை ஒரு குறிப்பிட்ட அளவே இருக்கக்கூடியவை, குறைந்த காலத்திற்கு மட்டுமே கிடைக்ககூடியவை. ஆனால் ஆற்றில் ஓடும் நீரும், காட்டில் வளர்ந்துகொண்டு இருக்கும் மரமும் தொடர்ச்சியாகக் கிடைக்கக் கூடியவை. இவை மன்னியமானவை அதாவது நிரந்தரமானவை, தொடர்ந்து மக்களுக்குக் கிடைக்கக்கூடியவை’’
கன்னெய் (பெட்ரோல்) வளம் பெருமளவு இருந்த காலத்திலேயே அதன் போதாமையைப் பற்றிச் சிந்தித்தவர் குமரப்பா. இவருக்கு புதுப்பிக்கக்கூடிய வளங்களைப் பற்றியும், புதுப்பிக்க இயலாத வளங்களைப் பற்றியும் (Renewable and Non-renewable Resurces) தெளிவான பார்வை இருந்துள்ளது. இவர் இதை தேக்கப் பொருளியம் என்றும் ஓட்டப் பொருளியம் என்றும் பிரிக்கிறார்.
உடலுக்குள் சரியான முறையில் எடுத்துக் கொள்ளப்படும் உணவு எவ்வாறு உடலை வளர்த்தெடுக்கின்றதோ அதேபோல வேலையின் தன்மையும் மதிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டால் மிக உயரிய பயனைக் கொடுக்கும் என்று குமரப்பா விளக்குகிறார். குமரப்பா தனது பொருளியல் கோட்பாடுகளை விளக்க வரும்போது ஐந்துவகையான மாதிரிகளை முன்வைக்கிறார்.
ஒட்டுண்ணிப் பொருளியம், கொள்ளைப் பொருளியம், முனைவுப் பொருளியம், கூட்டிணக்கப் பொருளியம், தொண்டுப் பொருளியம் என்று வரிசைப்படுத்தி ஒவ்வொன்றின் தன்மைகளைக் குறிப்பிடுகிறார்.
உழைக்கும் மக்களிடம் இருந்து உறிஞ்சிக் கொழுக்கும் முறை முதல் வகையாகும். பல கொடுங்கோன்மை அரசுகள் இதைச் செய்து வந்தன. அதைப் போலவே கொள்ளைப் பொருளிய முறை மக்களிடம் கடும் வன்முறையைப் பயன்படுத்தி அவர்களது உழைப்பைக் சுரண்டுவதாகும். இந்த இரண்டிலும் வன்முறை மிகக் கடுமையாக இருக்கும். முனைவுப் பொருளியம் என்பது சில சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு யார் ‘திறமையாளர்களோ’ அவர்கள் செல்வத்தைத் திரட்டிக் கொள்ளும்முறை. பல மக்களாட்சி நாடுகளில் இது நடைமுறையாக உள்ளது. கூட்டிணக்கப் பொருளியம் முற்றிலும் பகிர்வை அடிப்படையாகக் கொண்டது. தேனீகள் எவ்வாறு தனக்காக மட்டும் உழைக்காமல் தனது கூட்டமைப்பில் உள்ள யாவருக்காகவும் உழைக்கின்றது. பொதுவுடமைச் சிந்தனையாளர்கள் இம்மாதிரியான முறையையே கனவு கண்டார்கள்.
இறுதியாக உள்ளது பிறருக்காக உழைப்பது. தனது தேவைகளைக் குறைத்துக்கொள்வது. தன்னார்வ வறுமை இதன் அடிப்படை. பொதுவாக காந்தி தனது தேவைகளை பெரிதும் குறைத்துக் கொண்டார். இந்தியாவின் கடைசி ஏழைக்கு மின்சாரம் கிடைத்த பின்பே தனது குடிசைக்கு மின்சாரம் வர வேண்டும் என்றார்.
அந்தந்தப் பகுதியில் விளைவிக்கப்படும் பொருள்கள் அங்கேயே நுகரப்பட வேண்டும். இந்தக் கருத்துக்கு முன்னோடி குமரப்பா அவர்களே என்றால் மிகையாகாது. உள்ளூர்மயம் என்பதை மிகவும் அழுத்தமாக பரிந்துரைக்கிறார் குமரப்பா. இன்றைய உலகமயம் என்ற பன்னாட்டு வணிகமயத்திற்கு மாற்றாக அவர் கூறிய உள்ளூர்மயம் (localisation) மிக இன்றியமையாதது.
நிலத்தைப் பொருத்த அளவில் நீர், காற்றைப்போல பொதுவானதாக இருக்க வேண்டும் என்பது குமரப்பாவின் கருத்து. உழுபவர்களுக்கு நிலத்தை உரிமையாக்குவது இவரது அடிப்படை நோக்கமாக இருந்தது. இவரது தலைமையில் 1948ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட நிலச்சீர்திருத்தக் குழுவில் இவர் கொடுத்த பரிந்துரைகள் மிக முற்போக்கானவை. ஆனால் இவை முறையாக நிறைவேற்றப்படாதது குறித்து மிகுந்த மன வருத்தம் அடைந்தார். குமரப்பாவை இந்தியாவின் முதல் நிதி அமைச்சராக ஆக்க வேண்டும் என்று காந்தி விரும்பினார், ஆனால் அது நடக்கவே இல்லை. கெடுவூழாக காந்தியின் மறைவு மிக வேகமாக 1948ஆம் ஆண்டிலேயே நடந்தேறிவிட்டது.
வேளாண்மையில் வேதி உரங்களின் வரைமுறையற்ற பயன்பாட்டை அன்றே எதிர்த்தார் குமரப்பா. உழவர்கள் தற்சார்பு உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதில் குமரப்பா அழுத்தமாக இருந்துள்ளார். உழவர்களின் கைகளில் வேதியுரங்களைக் கொடுப்பது அடிமுட்டாள்தனம் (sheer folly) என்று எழுதினார். (Gram Udyog Patrika, 9(9),9(10), September and October 1947)
மண்ணை மட்கு உரம், தொழுவுரம் இவற்றால் செழிப்பூட்டுவது என்று வேளாண்மைக்கான திட்டத்தை முன்வைத்தார். அதுமட்டுமல்ல மக்களுக்கான ஊட்டம் மிக்க உணவை உருவாக்கக் கூடிய சாகுபடித் திட்டத்தை பரிந்துரைந்தார் என்பதைக் பார்க்கும்போது அவரது நெடிய ஆழமான பார்வை வியக்க வைக்கிறது. இதை அவர் சமச்சீர் சாகுபடி (Balance cultiation) என்று குறிப்பிட்டார். குறிப்பிட்ட பகுதியில் உள்ள மக்களுக்கான தவசங்கள், பருப்புகள், காய்கறிகள், பால் இவற்றை உள்ளடக்கிய 2800 கலோரியைக் கொடுக்கும் வகையிலான சாகுபடியும் அவர்களுக்குத் தேவையான துணியைத் தரக்கூடிய அளவிலான பருத்தியும் விளைவிக்க வேண்டும் என்று விவரித்தார்.
பரவல்மயப்பட்ட பொருளாக்கமுறைதான் இந்தியாவிற்கு ஏற்றது என்பதை அறிவியல் வகையில் குமரப்பா விளக்கினார். செல்வம் (W)= உழைப்பாளிகள் (E)+ முதலீடு (M) (W = E + M) செல்வ வளம் உழைப்பாளிகளின் உழைப்பாலும் அதில் போடப்படும் முதலீடு கருவிகள் இதர ஏந்துகளாலும் உருவாவது. இந்தியாவைப் பொருத்த அளவில் E அதிகம் ஆனால் M குறைவு. எனவே திட்டமிடும்போது அதிக அளவில் உழைப்பாளிகள் ஈடுபடுத்தப்படுவதாடு குறைந்த அளவு முதலீடு பயன்படுத்தப்பட வேண்டும் என்றார். இன்று பல்லாயிரம் கோடிகளை முதலீடு செய்து சில ஆயிரம் பேர்களுக்கு வேலை தரும் போக்கு உள்ளது.
அனைத்திந்திய சிற்றூர் தொழில்கள் இணையத்தை (All India Village Industries Association) ஏற்படுத்தி அதில் செயலாளராக இருந்து பணியாற்றினார். மராட்டிய மாநிலத்தில் உள்ள வார்தாவில் மகன்வாடி என்ற இடத்தில் அவரது ஆய்வுகள் நடந்தன. சேவாகிராம ஆசிரமத்தில் காந்திக்காக கட்டப்பட்ட வீட்டைவிடவும் மிக எளிமையாக குறைந்த விலையில் (அன்றைய மதிப்புப்படி 150 ரூபாயில்) கட்டியுள்ள வீடு இன்றும் உள்ளது. மண்ணெண்ணெய்க்கு மாற்றாக தாவர எண்ணெயில் எரியும்படியான விளக்கு, எளிமையாக நெல் அரைக்கும் திரிகைகள், பந்துதாங்கிகள்(ball bearing) இணைக்கப்பட்ட மாட்டுவண்டி என்று எத்தனையோ கண்டுபிடிப்புகள். இதை அவர் தனது கிராம உத்யோக் பத்திரிகா இதழில் வெளியிட்டும் வந்தார்.
இவரது புத்தகங்கள் யாவும் கையால் செய்யப்பட்ட தாளில் அச்சானது என்பதாடு இன்றைய தாள்களின் தரத்திற்கு சற்றும் குறைவின்றி அவை இருந்தன என்பதைப் பார்த்தால் வியப்பு மேலிடுகிறது.
வளர்ச்சியின் குறியீடு ‘சாலைகள் அமைப்பதோ கிணறுகள் தோண்டுவதோ வேதியுரங்களை வழங்குவதோ அல்ல, திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு முன்பு சில ஏழை உழவர்களை அழைத்து அவர்களது விலா எலும்புகளை எண்ண வேண்டும், திட்டங்களை செயல்படுத்திய பின்னர் அவர்களை மீண்டும் அழைத்து அவர்களது விலா எலும்புகளை மூடும்படியான சதை வளர்ந்து இருக்குமயானால் அதுவே சரியான குறியீடு’ என்றார்
இங்கிலாந்தின் அரசியல் முற்றாளுமையில் (ஏகாதிபத்தியம் – imperialism) இருந்து விடுபட்டு அமெரிக்க பண முற்றாளுமை (ஏகாதிபத்தியத்து) க்குள் இந்தியா விழுந்துவிடலாகாது என குமரப்பா மிகத் தெளிவாக எச்சரித்தார். இந்தியா மட்டுமல்லாது கொரியா, சீனா, ஈராக் போன்ற நாடுகளின் மீது பல்வேறு வகையில் அவற்றின் உள்ளார்ந்த வளர்ச்சியைத் தடுக்கும்பொருட்டு போர், உதவி, தொண்டு என்று அமெரிக்கா தலையிட்டு வருவதை 1953ஆம் ஆண்டிலேயே உத்யோக் பத்திரிகாவில் எழுதினார். சோவியத் நாட்டுடன்தான் இந்தியாவிற்கு நட்புறவு உண்டு என்று கருதியபோது அமெரிக்காவுடன் நேரு அரசாங்கம் கொண்டிருந்த ‘நட்பை’ போட்டு உடைத்தார் குமரப்பா என்றே கூற வேண்டும்.
குறிப்பாக உணவு தவசங்களையும், நிதியையும் கொடுத்து தனது ஆளுமையைத் திணித்தது அமெரிக்கா. அதன் விளைவாகவே இந்திய உழவர்களை ஓட்டாண்டியாக்கிய பசுமைப் புரட்சி இந்தியாவினுள் நுழைந்தது. அன்றைய இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதரான செஸ்டர் பவுல்ஸ் மூலம் இந்தியாவிற்கு ‘உதவி’யாக ஒரு பெரும்பேராயிரம் டாலர்கள் (பில்லியன் – 100 கோடி) கொடுக்கப்பட்டன. இதை குமரப்பா இந்தியாவின் கழுத்தில் அமெரிக்கா மாட்டும் சுருக்குக் கயிறு என்றே எழுதினார். நேரு சோவியத்தின் நண்பர் அமெரிக்காவின் எதிர்ப்பாளர் என்று எண்ணிக்கொண்டிருக்கும் அறிவாணர்களுக்கு இது சற்று அதிர்ச்சி தரும் தகவலாக இருக்கக்கூடும்.
அதிக உணவுப்பயிர் வளர்ச்சி (Grow-More-Food) என்ற பெயரில் ஆல்பெர்ட் மேயர் என்ற அமெரிக்கரைக் கொண்ட திட்டத்தை நேரு அனுமதித்தது குமரப்பாவிற்கு மிகுந்த வேதனையைக் கொடுத்தது. இத்திட்டம் 1948-52 ஆண்டளவில் உத்திரபிரதேச “எடாவா” என்ற இடத்தில் செயல்படுத்தப்பட்டது. ஏற்கனவே மிகச் தெளிவாக இந்திய ஊரகப் பகுதிகளுக்கான திட்டங்களை குமரப்பா கடுமையாக உழைத்து தரவுகள் திரட்டி உருவாக்கி இருந்தார். ஆனால் அதற்கு மாற்றாக அமெரிக்கப் பொறியாளர் ஒருவரைக் கொண்டு சமுதாய மேம்பாட்டுத் திட்டத்தை முன்மொழிந்ததை குமரப்பாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அமெரிக்க ‘வல்லுநர்’களின் வருகையால் இந்தியா தனது தற்சார்பான வளர்ச்சியை இழந்ததோடு தனது சிக்கல்களை தானே தீர்த்துக்கொள்ளும் திறனைனையும் இழந்துவிட்டதை வேதனையுடன் குறிப்பிட்டார். (Gram Udyog Patrika, 14(9), September 1952)
அவர் அச்சப்பட்டதுபோலவே நடந்தது முதல் மூன்று ஐந்தாண்டுத் திட்டங்களில் சமுதாய மேம்பாட்டிற்காக 15% குறைவாகவே செலவிடப்பட்டது. குமரப்பாவினால் வளர்த்தெடுக்கப்பட்ட அனைத்திந்திய சிற்றூர் தொழில்கள் இணையமும் நூற்போர் இணையமும் அரசாங்கத்தினால் ‘எடுத்துக்கொள்ளப்பட்டது’. குமரப்பா கிட்டத்தட்ட ஒரு வெளியாள் போலவே ஆக்கப்பட்டு விட்டார். ஒருமுறை புதியதாக உருவாக்கப்பட்ட அனைத்திந்திய காதி மற்றும் சிற்றூர் தொழில்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளச் சென்றிருந்தார். அப்போது அங்கே ஃபேபர் கும்பணியின் பென்சில் கொடுக்கப்பட்டது. அதைத் தூக்கி எறிந்து வெளிநாட்டில் இருந்து தருவிக்கப்பட்ட அப்பொருளை பயன்படுத்துவதைப் பற்றி சினத்துடன் பேசினார். அப்போதைய அமைச்சர் அரேகிருஷ்ணா மகதாப் ‘‘நீங்கள் சொல்வது சரிதான் குமரப்பா ஆனால் நமது அரசாங்கம் இதைத்தானே விரும்புகிறது. நீங்கள் வேண்டுமென்றால் தெருக்களில் கருப்புக்கொடியுடன் ஊர்வலம் போங்கள்’’ என்று கிண்டலடித்தார்.
நேரு மற்றும் அவரது உடன் ஆட்சியாளர்களின் அணுகுமுறை குமரப்பாவிற்கு பெரும் அதிர்சியையும் வருத்தத்தையும் அளித்தது. ‘‘எனது பழைய தோழர்கள் இன்று (விடுதலைக்குப் பிறகு) அரசாங்கத்தையும் தில்லி அரண்மனைகளையும் எடுத்துக் கொண்டுள்ளார்கள். அதைப் பெருமைப்படுத்துவதிலும், கொண்டாடுவதிலும் ஈடுபட்டுள்ளார்கள். விரக்தியும் வேதனையுமே மிஞ்சுகிறது’’ என்று எழுதினார். நேரு ஒரு அரசரைப்போலவே வாழ்ந்தார். இந்திய அரசின் கொழுத்த அதிகாரத்தைச் சுவைப்பதில் மகிழ்ந்தார் என்று கூடச் சொல்லலாம். ஏனெனில் காந்தியின் கனவான அதிகாரப் பரவலை சற்றேனும் செய்யவில்லை.
தமிழகத்தில் மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டியில் தனது கடைசி நாட்களில் பணியாற்றினார். தொடர்ந்து பயிற்சி வகுப்புகள், கூட்டங்கள் என்று சோர்ந்துவிடாது பணியாற்றினார். அவரது தம்பி பரதன் குமரப்பாவின் மறைவும் இந்திய அரசியலின் போக்கும் அவரது உடல்நிலையில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தின. கடுமையான இரத்த அழுத்த நோயால் துன்பமுற்றார். புதிய உலகிற்கான மாற்றுப் பொருளியலை முன்வைத்ததோடு மட்டுமல்லாமல் அதை நடைமுறைப்படுத்தியும் காட்டிய இந்த பேரறிஞர் தான் பிறந்த தமிழ் மண்ணில் பெரிதும் ஆரவாரமின்றி 1960ஆம் ஆண்டு சனவரி 30ஆம் நாள் தனது தலைவரான காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட நாளில் மறைந்தார்.
கடும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இன்றைய உலகினை விடுவிக்கும் சிந்தனைகளை விதைத்துச் செயல்படுத்த முனைந்த இந்த அறிஞரது சிந்தனைகளே இனி ஏதோ ஒரு வகையில் ஆட்சி செய்யப்போகிறது என்றால் அது மிகையில்லை.
குமரப்பாவின் கட்டுரைகளை தமிழில் பெரும் ஆர்வத்துடனும் முயற்சியுடனும் மருத்துவர் ஜீவானந்தம் அவர்கள் மொழிபெயர்த்துள்ளார். கடுமையான பணிகளுக்கு இடையிலும் சோர்வில்லாத எழுத்தாளரான ஜீவானந்தம் அவர்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க பணியைச் செய்துள்ளார். இந்நூலை நாட்டின் மீது அக்கறையுள்ள அனைவரும் படிக்க வேண்டும்.
பாமயன், திருமங்கலம்