அயல் நாடுகளில் வாழ்வாதார தேவைகளுக்காக புலம் பெயர்ந்து வாழும் முஸ்லிம் சமூகம் தங்களது வாரிசுகளுக்கான வாழ்வியல் இலக்கை துல்லியமாக நிர்ணயிக்க வேண்டும். அதற்கேற்ற உயர்கல்வி பிரிவுகளை அவர்களுக்கு தேர்வு செய்ய வேண்டும்.

பெண் பிள்ளைகளின் உயர்கல்வியை தேர்வும் செய்யும் விசயத்தில் மிகுந்த முதிர்ச்சியும் ஞானமும் தேவை. பெண் படைப்பு இயல்பு பிறந்த மண் அதன் பாரம்பரியம் குடும்ப அமைப்பு முறை இவற்றை கருத்தில் கொண்டு பெண் பிள்ளைகளின் வாழ்வியல் இலக்கையும் உயர்கல்வியையும் தேர்வு செய்யும் பெற்றோர் மட்டுமே அந்த பெண் பிள்ளைகளுக்கு அமைதியான ஆனந்தமான வாழ்க்கையை அமைத்துத்தர முடியும். நீண்ட நீடிய இஸ்லாமிய குடும்ப பாரம்பரிய முறையை பாதுகாக்க முடியும்.

ஆண் பிள்ளைகளுக்கு…… அதிகமாக பணத்தை சம்பாதிக்க உதவும் உயர் கல்விப்பிரிவு என்கிற மிகத்தவறான இலக்கை ஒருபோதும் தேர்வு செய்யாதீர்.அது இயற்கைக்கு எதிரானது. இந்த சிந்தனைதான் இன்றைய உலக முஸ்லிம்களின் பெருவாரியான சிக்கல்களுக்கு காரணமாக அமைந்துள்ளது.

அறிவு என்பது இந்த உலகத்தை அடக்கி ஆள்வதற்கும் பண்பாட்டு எல்லையை உடைத்து அனுபவிப்பதற்குமான ஒரு கருவி என்ற நச்சு சிந்தனையை இன்றைய முதலாளித்துவக் கல்வி உம்மத்தின் (உலக மக்களின் ) சிந்தனையில் விதைத்து வருகிறது.

அறிவு என்பது உலகின் அறியாமை அடிமைத்தனம் அடக்குமுறை சுரண்டல் இவற்றை உடைத்தெறிந்து மனித சமூகத்தில் உயரிய பண்பாடுகளை கட்டமைக்கும் ஈடு இணையற்ற ஆயுதம் என்று இஸ்லாம் தனது கல்விக் கொள்கையை முன்நிறுத்துகிறது.

US,Canada,UK,European countries,South Africa,Singapore,Malaysia, Australia, Japan,

New Zealand……போன்ற நாடுகளில் வசிக்கும் தமிழகம் மற்றும் இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம்கள் தங்களது பிள்ளைகளின் உயர் கல்வியை தேர்வு செய்யும் போது முற்றிலும் பிள்ளைகள் விருப்பத்திற்கு விட்டுவிடாமல் அதேநேரம் உங்களது விருப்பத்தையும் திணித்துவிடாமல் உலகளாவிய முஸ்லிம் உம்மத்திற்கான அறிவுத் தேவையை கருத்தில் கொண்டு தேர்வு செய்வது நல்லது.

வீட்டில் வளரும் பிள்ளைகளுக்கு இஸ்லாமிய வரலாற்றையும் நிகழ்கால உலக நடப்புகளையும் பயிற்றுவித்து உருவாக்கினால் உயர்கல்வியை தேர்வு செய்வதில் ஒருநாளும் குழப்பம் ஏற்படாது.

ஒரு கையில் குர்ஆன் ஹதீஸை பிடித்துக்கொண்டு மறுகையில் பூமியின் இயக்கவிதிகள் குறித்த ஆய்வுகளை வாழ்நாள் முழுவதும் மேற்கொள்வதே அறிவியல் பிரிவு பிள்ளைகளுக்கான வாழ்வியல் இலக்கு என்று நிர்ணயிக்க வேண்டும். அதற்கேற்ற உயர்கல்விப் பிரிவை அவர்களுக்கு தேர்வு செய்ய வேண்டும். அடுத்த 50 ஆண்டுகளில் அனைத்துத் துறைகளின் விஞ்ஞானிகளாக முஸ்லிம்கள் முன்னிற்பார்கள்.

அதேபோல முஸ்லிம் நாடுகள் உள்ளிட்ட வளரும் நாடுகளின் வளங்களை வஞ்சகமாக சுரண்டி அவர்களை வட்டி என்ற கொடும் சதிவலைக்குள் சிக்கவைத்து நவீன அடிமைகளாக மாற்றிவரும் முதலாளித்துவ சித்தாந்தத்தின் முதுகெலும்பை முறித்திடும் சட்டவியல் சமூகவியல் உளவியல் பொருளாதார வல்லுனர்களாக உருவாகி வரும் இலக்கை ’கலை பிரிவு’ பிள்ளைகளுக்கு நிர்ணயிக்க வேண்டும். அதற்கேற்ற உயர்கல்விப் பிரிவை அவர்களுக்கு தேர்வு செய்ய வேண்டும். உலகமே முஸ்லிம்களின் சொல்லுக்கும் வழிகாட்டுதலுக்கும் ஏங்கி நிற்கும் நிலை உருவாகும்.

அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் வாழ்வது பெருமைபட்டுக் கொள்வதற்கு அல்ல.அது நமது முயற்சியினால் கிடைத்த வாய்ப்பும் அல்ல. உலகளாவிய முஸ்லிம் உம்மத்தின் கண்ணியத்தை மீட்டெடுப்பதற்கு அல்லாஹ் நமக்களித்த மகத்தான பொறுப்பு.

காலத்தையும் பணத்தையும் பயனுள்ள அறிவுப்பாதையில் செலவிட்டு அடுத்த தலைமுறையை வீரியமாக வார்த்தெடுப்போம். அல்லாஹ் நமக்களித்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்வோம்.

உலகம் உம்மத்தின் வழிகாட்டுதலுக்காக காத்திருக்கிறது.