மாற்றுச் சிந்தனை என்பது விவசாயம், உணவு உற்பத்தி, சுற்றுச் சூழல், சுகாதாரம், மருத்துவம் போன்ற துறைகள் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்த, நெருங்கிய தொடர்புள்ள துறைகளாகும். இவை அனைத்திலும் ஆக்கப் பூர்வமான மாற்றம் ஏற்படுவதற்கான மாற்றுச் சிந்தனை தோன்ற வேண்டும். அது ஏற்பட்டால் தான் மக்கள் இந்த கோரமான நோய்களின் பிடியிலிருந்து மீள முடியும். ஆனால் இது அவ்வளவு எளிதாக நடக்கின்ற காரியமாகத் தோன்றவில்லை. இன்னும் சொல்லப் போனால் இது குறித்துத் சிந்தித்தாலே சிந்திப்பவருக்கு சிக்கல் உருவாகும் வகையில் இதன் உற்பத்தி, வர்த்தக வலைப் பின்னல் அமைந்துள்ளது.
அமெரிக்க, ஐரோப்பிய பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் இங்கே உள்ள சில மக்கள் விரோத சக்திகளுக்கு காலம் முழுவதும் பல மில்லியன், பில்லியன் கோடிகளைக் கொட்டித் தரும் ‘கற்பக விருட்சமாக’ உள்ள இந்தத் துறைகளில் ஆக்கப்பூர்வமான மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு முயன்றால் அல்லது அதற்கான மாற்றுச் சிந்தனையை முன்வைத்தால் – வைப்பவரின் – முயற்சிப்பவரின் “கதையை” முடித்து விடுவார்கள். இதற்கு மேற்கு மற்றும் கிழக்கு நாடுகளில் நடந்துள்ள பல சம்பவங்கள் சான்றுகளாக உள்ளன.
இந்தத் துறைகளில் உலகளாவிய வலைப் பின்னலை அமைத்துக் கொண்டு, உலகம் முழுவதும் உள்ள மக்களை வாட்டி வதைக்கும் இந்த கொள்ளைக்கார “குஃப்ர்” கும்பலின் கொட்டத்தை அடக்கும் ஆற்றலும் வல்லமையும் அல்லாஹ் ஒருவனுக்கும் அவன் வழங்கிய இஸ்லாம் எனும் உலக விடுதலை மார்க்கத்திற்கும் மட்டுமே இருக்கிறது.
“இஸ்லாம் என்பது உலக விடுதலை மார்க்கம். அதில் வாழ்வின் அனைத்துத் துறைகளுக்கும் வழிகாட்டுதல் இருக்கிறது. இஸ்லாம் வழிகாட்டாத துறைகள் இந்த பூமியில் வந்ததும் கிடையாது, இனி வரப்போவதும் கிடையாது” என்று ஜும்ஆ மேடைகளிலும் இன்னபிற சபைகளிலும் நீட்டி முழங்கும் முஸ்லிம் அறிஞர்கள், அதைச் செயல்வடிவமாக நிரூபித்துக் காட்டும் வண்ணம் இஸ்லாமியத் தீர்வை முன்வைப்பதில்லை. அதில் கவனம் செலுத்துவதும் கிடையாது.
குறிப்பாக இந்தியாவில் வாழும் இஸ்லாமிய அறிஞர்களில் பெரும்பாலோர், இன்றைய இந்தியச் சமூகம் சந்தித்து வருகின்ற மருத்துவம், சுகாதாரம் உள்ளிட்ட எந்தச் சிக்கலுக்கும் இஸ்லாமியத் தீர்வை சரியாக முன்வைத்ததாகத் தெரியவில்லை. அதற்கான முயற்சியில் ஈடுபடுவதாகக் கூடத் தெரியவில்லை.
அல்லாஹ்வுடைய மார்க்கம் மனித வாழ்விற்கு வழிகாட்டியாக நமக்கு வழங்கப்பட்டுள்ளது. பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தங்களின் 23 ஆண்டுகால நபித்துவ வாழ்வில் இஸ்லாத்தை “கருத்தியல்” பாடமாக போதித்ததைக் காட்டிலும் நடைமுறை வாழ்வின் வழிகாட்டியாகவே போதித்து, அதன்படியே அவர்கள் வாழ்ந்து காட்டிவிட்டும் சென்றுள்ளார்கள். ஆனால் இன்றைய முஸ்லிம் சமூகம் இஸ்லாமிய மார்க்கத்தை “தத்துவங்களின் தொகுப்பாக” சில பிரிவினரும், ‘சடங்கு சம்பிரதாயங்களின்’ தொகுப்பாக சில பிரிவினரும் கருதுகின்றனர்.
இஸ்லாத்தை சமூக வாழ்வின் அனைத்துத் துறைகளின் விடி வெள்ளியாக, சிக்கலில் தத்தளிக்கும் மக்களுக்கு கலங்கரை விளக்காகப் பொருத்த வேண்டியது ஒவ்வொரு காலத்திலும் வாழும் முஸ்லிம்களின் கடமையாகும்.
நோயின் பிடியில் சிக்கிச் சீரழிந்து வரும் இந்திய, தமிழ்ச் சமூகம் உள்ளிட்ட அனைத்துச் சமூக மக்களையும் பாதுகாப்பதற்கான இஸ்லாமியத் தீர்வு என்ன?
இந்தப் பிரச்சினைகள் உருவாவதற்கு என்ன காரணமோ அந்தக் காரணத்தின் ஆணிவேரைப் பிடுங்கி எறிவதாகும். அது தான் நிரந்தரத் தீர்வாக அமையும்.