– சேயன் இப்ராகிம்
தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்டத்தில் முஸ்லிம்கள் கணிசமாக வாழ்ந்து வருகின்றனர். ‘திரை கடலோடியும் திரவியம் தேடு’ என்ற மூதுரைக்கு ஏற்ப இம்மக்கள் மலேசியா, சிங்கப்பூர், ஹாங்காங், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய தென்கிழக்காசிய நாடுகளுக்குச் சென்று பொருளீட்டி வருபவர்கள். அவர்களில் பலர் தாங்கள் ஈட்டிய செல்வத்தின் ஒரு பகுதியை சமய மற்றும் சமுதாயப் பணிகளுக்கு வாரி வழங்கினர். இன்றைக்கும் வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.
மேலும் பல புலவர்களையும், கவிஞர்களையும், கல்வியாளர்களையும், எழுத்தாளர்களையும். புரவலர்களையும் தமிழகத்திற்குத் தந்த பெருமை இம்மாவட்ட முஸ்லிம் சமூகத்திற்குண்டு. இம் மாவட்டத்தைச் சார்ந்த அத்தகைய ஒரு சமூக சேவையாளரைப் பற்றியே இந்த இதழில் பார்க்கவிருக்கிறோம்.
தஞ்சை மாவட்டத்தின் வர்த்தக நகரம் என அறியப்படும் கும்பகோணம் காவேரிக் கரையில் அமைந்தள்ளது. கி.பி. ஏழாம் நூற்றாண்டில் இரு சோழர்களின் தலைநகராக விளங்கியது. இதன் பழைய பெயர் பறையாழை என்பதாகும். குடந்தை என்றும் திருக்குடந்தை என்றும் இந்நகர் அழைக்கப்படுகிறது.
கும்பகோணம் என்றதும் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்து சமய மக்களின் பண்டிகையான மகாமகம் நமது நினைவிற்கு வரும். வெற்றிலை, டிகிரி காபி ஆகியனவும் நமது நினைவிற்கு வரும். கும்பகோணத்தைப் பற்றிய இந்த நினைவுகளோடு நமது நினைவுக்கு வருபவர் சமுதாயச் சேவையாளராகவும், கல்வியாளராகவும், அரசியல்வாதியாகவும் திகழ்ந்த மறைந்த இ.எஸ்.எம். பக்கீர் முகம்மது சாகிப் ஆவார்.
பிறப்பு – கல்வி – தொழில் :
ஷேக் முகையதீன் இராவுத்தர் என்பார் கும்பகோணம் பெரிய கடைத் தெருவில் ஒரு சிறிய கடை வைத்து காம்பு புகையிலை வியாபாரம் செய்து வந்தார். அப்போது வெற்றிலையுடன் புகையிலையையும் சேர்த்துப் போடுகின்ற பழக்கம் மக்களிடையே பெருமளவு இருந்து வந்தது. எனவே இவரது கடையில் நல்ல வியாபாரம் இருந்தது. நாளடைவில் இவரது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அவர் தனது வியாபாரத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கில் ஒரு புதிய உத்தியைக் கையாண்டார்.
புகையிலையை மிகச் சிறிய துண்டுகளாகக் கத்தரித்து அவற்றை பொட்டலங்களில் போட்டு விற்பனை செய்ய ஆரம்பித்தார். இந்த உத்தி வாடிக்கையாளர்களைப் பெருமளவு ஈர்த்தது. அதனால் விற்பனை அதிகரித்து வியாபாரத்தில் நல்ல லாபம் கிட்டியது. சில ஆண்டுகளுக்குப் பின்னர் தரமான புகையிலையை அவை விளையும் இடத்திற்கே சென்று கொள்முதல் செய்து அதனை பக்குவமான முறையில் பாடம் செய்து, மணமும் காரமும் இருப்பதற்காக சில செயற்கை சுவையூட்டிகளை அதில் சேர்த்து அதனை சிறு சிறு பொட்டலங்களில் போட்டு ‘மைதீன் புகையிலை’ என்ற லேபிலை ஒட்டி விற்பனை செய்ய ஆரம்பித்தார்.
இதற்காகத் தொழிற்சாலை ஒன்றையும் தொடங்கி அதற்க ‘மைதீன் புகையிலைக் கம்பெனி’ என்று பெயரிட்டார். காரமும், மணமும் கொண்ட இந்த மைதீன் புகையிலையின் சுவையில் மக்கள் சொக்கிப் போயினர். இந்தப் புகையிலையின் சந்தை கும்பகோணம் நகரம், தஞ்சை மாவட்டம், தமிழ் நாட்டின் பிற பகுதிகள் என நாளடைவில் விரிவடைந்தது. அன்றையத் தமிழ் நாட்டில் ஒரு முன்னணி புகையிலை வணிகராக ஷேக் முகையதீன் இராவுத்தர் திகழ்ந்தார்.
இந்தப் புகையிலை வணிகரான ஷேக் முகையதீன் இராவுத்தரின் புதல்வராக 28.04.1937 அன்று பக்கீர் முகம்மது பிறந்தார். தனது தொடக்க மற்றும் இடை நிலைக் கல்வியை கும்பகோணத்திலிருந்த நேடிவ் உயர் நிலைப் பள்ளியில் பயின்றார். இவர் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போதே தந்தையார் ஷேக் முகையதீன் இராவுத்தர் திடீரென மரணமுற்றார். எனவே இவரது மூத்த சகோதரியின் கணவர் மைதீன் புகையிலைக் கம்பெனியின் நிர்வாகப் பொறுப்பை ஏற்று சில ஆண்டுகள் நடத்தி வந்தார். பள்ளிப் படிப்பு முடிந்ததும், பக்கீர் முகம்மதுவே புகையிலைக் கம்பெனியின் முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார். அப்போது அவருக்கு வயது 18 தான். தனது கடின உழைப்பு, விடா முயற்சி, நாணயம் காரணமாக மைதீன் புகையிலைக் கம்பெனியை மேலும் வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு சென்றார்.
பொதுப் பணிகள்:
கும்பகோணம் அரசு மருத்துவமனையில் பணியாற்றிக் கொண்டிருந்த டாக்டர் ஸையது கலீலுல்லாஹ் கும்பகோணத்தை ஒட்டிய மேலக் காவிரியில் குடியிருந்து வந்தார். இஸ்லாமியப் பற்றும் பொது நல நோக்கும் கொண்ட இந்த டாக்டருடன் பக்கீர் முகம்மதுவுக்குப் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது நட்பாக மாறியது. டாக்டரின் தொடர்பு காரணமாக பக்கீர் முகம்மதுவுக்கும் பொதுப் பணிகளில் நாட்டமும், இஸ்லாமிய வழிமுறைகளில் நல்ல பிடிப்பும் ஏற்பட்டது.
தஞ்சை மாவட்ட முஸ்லிம்களின் கல்வி முன்னேற்றத்திற்காக ஏதேனும் செய்திட வேண்டுமென இருவரும் எண்ணினர். மாவட்டதிலுள்ள ஒருமித்த எண்ணம் கொண்ட நண்பர்களை அழைத்து ஆலோசனை நடத்தினர். அதன் விளைவாக உருவானது தான் தஞ்சை மாவட்ட முஸ்லிம் கல்விச் சங்கமாகும். பக்கீர் முகம்மது இச்சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கபட்டார்.
மேலக் காவிரியில் தனது தந்தையின் நினைவாக ‘மைதீன் மதரஸா நிஸ்வான்’ என்ற பெண்கள் பள்ளிக் கூடத்தைத் அவர் தொடங்கினார். முஸ்லிம் பெண் பிள்ளைகளுக்கு மார்க்கக் கல்வியுடன் பொதுக் கல்வியையும் கற்றுக் கொடுக்கும் பள்ளியாக இது திகழ்ந்தது. இப் பள்ளியின் தாளாளராகவும் அவர் பொறுப்பில் இருந்தார். இந்தப் பள்ளி தற்போது மெட்ரிகுலேசன் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டு நன்கு செயல்பட்டு வருகின்றது. தனது தந்தையார் பெயரில் அறக்கட்டளை ஒன்றை நிறுவி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு வழிகளிலும் உதவிகள் செய்து வந்தார். தஞ்சை மாவட்ட முஸ்லிம் கல்விச் சங்கத்தால் தொடங்கப்பட்ட அல் அமீன் மெட்ரிகுலேசன் பள்ளியின் வளர்ச்சிக்காகவும் பாடுபாட்டார்.
கும்பகோணம் நகரத்திலும், மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் செயல்பட்டு வந்த பல்வேறு பொது நல அமைப்புகளிலும் பொறுப்புகளை வகித்து மக்கள் பணி ஆற்றியுள்ளார். அவர் அங்கம் வகித்த பொறுப்புகள்
1. கும்பகோணம் ரோட்டரி சங்கத்தின் உறுப்பினர். 1973ஆம் ஆண்டு அதன் தலைவர்
2. சென்னை காஸ்மோ பாலிடன் கிளப் உறுப்பினர்
3. மைலாப்பூர் அகாடமியின் துணைத் தலைவர்
4. கும்பகோணம் நேடிவ் மேல் நிலைப் பள்ளியின் தாளாளர்.
5. இந்திய முந்திரி வளர்ச்சி கழகத்தின் உறுப்பினர்.
சமயப் பணிகள்:
ஒரு மிகச் சிறந்த முஸ்லிமாகத் திகழ்ந்த பக்கீர் முகம்மது இஸ்லாமிய சமயம் சார்ந்த பணிகளுக்கு வாரி வழங்கினார். மேலக்காவேரியிலிருந்த பள்ளிவாசலைப் புதுப்பித்துக் கட்ட நிதி வழங்கினார். கும்பகோணம் மற்றும் தஞ்சை மாவட்டத்திலுள்ள பல்வேறு இடங்களில் புதிய பள்ளிவாசல்கள் கட்டிடவும், பள்ளிவாசல்களை விரிவுபடுத்தவும் தாராளமாக நிதி உதவி செய்தார். அரபி மதரஸாக்களுக்கும் பெருமளவு நிதி உதவி செய்துள்ளார். 1972ஆம் ஆண்டு கும்பகோணத்தில் மீலாது மாநாடு ஒன்றினை மிகப் பெரிய அளவில் நடத்தி மக்களின் பாராட்டுதல்களைப் பெற்றார். இம் மாநாட்டையொட்டி சிறப்பு மலர் ஒன்றை வெளியிடவும் துணை நின்றார்.
அரசியல் :
இளமையிலிருந்தே காங்கிரஸ் பேரியக்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்த அவர் அக்கட்சியில் சேர்ந்து பணியாற்றினார். காங்கிரஸ் தலைவர் கருப்பையா மூப்பனாரின் நம்பிக்கைக்குரிய சீடராக விளங்கினார். 1967 முதல் 1970ம் ஆண்டு வரை கும்பகோணம் நகரக் காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பு வகித்தார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினராகவும் சில ஆண்டுகள் பொறுப்பு வகித்தார். மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காகப் பெரிதும் பாடுபட்டார். இவரின் நேர்மையான கட்சிப் பணிகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் இவரை கும்பகோணம் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினராக்கி காங்கிரஸ் கட்சி கௌரவித்தது.
1980 ஆம் ஆண்டு தமிழக சட்ட சபைக்கு நடைபெற்ற பொதுத் தேர்தலில் கும்பகோணம் சட்டமன்ற காங்கிரஸ் வேட்பாளராக இவர் அறிவிக்கப்பட்டார். (தி.மு.க காங்கிரஸ் – முஸ்லிம் லீக் கூட்டணி) இவரை எதிர்த்து அ.தி.மு.க வேட்பாளராக மறைந்த எஸ்.ஆர். இராதா களத்தில் இருந்தார். இத் தேர்தலில் பக்கீர் முகம்மது அ.தி.மு.க வேட்பாளர் எஸ்.ஆர். இராதாவை விட 9623 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். (பக்கீர் முகம்மது 40,034, எஸ்.இராதா 35,415) 1980ம் ஆண்டு வரை நான்காண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக சிறப்பாக பணியாற்றினார்.
1984 மற்றும் 1989ம் ஆண்டுகளில் பாராளுமன்றத்திற்கு நடைபெற்ற பொதுத் தேர்தல்களில் பக்கீர் முகம்மது கும்பகோணம் பாராளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். (காங்கிரஸ் – அ.தி.மு.க கூட்டணி) இந்த இரண்டு தேர்தல்களிலும் இத் தொகுதியில் இவரை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியைத் தழுவிய தி.மு.க வின் வேட்பாளரான கல்யாணம். இனி ஓட்டு விவரங்களைப் பார்ப்போம்
1984தேர்தல்:
இ.எஸ்.எம். பக்கீர் முகம்மது (காங்கிரஸ்) 3, 35, 033
கல்யாணம் (தி.மு.க) 2, 15, 390
1989 தேர்தல்
இ.எஸ்.எம். பக்கீர் முகம்மது (காங்கிரஸ்) 3, 52, 492
கல்யாணம் (தி.மு.க) 2, 50, 547
ஏழாண்டுகள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த அவர் கும்பகோணம் தொகுதி வளர்ச்சிக்காக மட்டுமின்றி பல்வேறு பொதுப் பிரச்னைகளுக்காகவும் பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தார். பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலகட்டத்தில் நிதி அமைச்சகத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் (1985-1989) தரை வழிப் போக்குவரத்துத் துறையின் ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் (1990) பொறுப்புகள் வகித்தார். இந்தியாவிலிருந்து புனித ஹஜ்ஜை நிறைவேற்றச் செல்லும் பயணிகளுக்கு உதவுவதற்காக அமைக்கப்பட்ட அரசு ஹஜ் நலக் குழுவின் உறுப்பினராக புனித மக்கா மற்றும் மதினா நகரங்களுக்குச் சென்று வந்தார். (1990) வியாபார விஷயமாகவும், அரசியல் விஷயமாகவும் மலேசியா, சவூதி அரேபியா, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ், ஹாங்காங் இத்தாலி ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார்.
நல்லிணக்க நாயகர்:
பக்கீர் முகம்மது சாகிப் சமய நல்லிணக்க நாயகராகத் திகழ்ந்தார். அனைத்து சமூக மக்களிடமும் சுமுக உறவைப் பேணினார். கும்பகோணம் நகர மக்களால் பெரிதும் மதிக்கப் பெற்ற ஒரு பிரமுகராக அவர் விளங்கினார். கும்பகோணம் மகாமகம் திருவிழாவைக் காணவரும் பக்தர்களுக்கு உணவு வழங்குவதை வழங்கமாகக் கொண்டிருந்தார்.
தனது கம்பெனியில் பணியாற்றிய நூறுக்கும் மேற்பட்ட ஊழியர்களை அன்புடனும் பரிவுடனும் நடத்தினார். சிராஜுல் மில்லத் அப்துல் ஸமது சாகிப், வடகரை பக்கர் சாகிபு, கவிஞர் சாரண பாஸ்கரன், சொல்லின் செல்வர் எம்.எம்.பீர்முகம்மது சாகிப் போன்ற சமுதாயத் தலைவர்களுடன் நெருங்கிய நட்புறவு கொண்டிருந்தார். அனைத்துத் தரப்பினரின் அன்பைப் பெற்றதன் காரணமாக சமுதாய மக்கள் இவரைத் ‘தம்பி’ என்று வாஞ்சையுடன் அழைத்தனர்.
குடும்பம்:
ஒன்பது பெண் பிள்ளைகளுக்கிடையே ஒரே ஒரு ஆண் பிள்ளை பக்கீர் முகம்மது சாகிபு. அதன் காரணமாகப் பெற்றோர்களால் செல்லமாக வளர்க்கப்பட்டார். அவரது தந்தையார் சேக் முகையதீன் இராவுத்தர் காலமான போது நான்கு பெண் பிள்ளைகளுக்கு மட்டுமே திருமணம் நடந்தேறியிருந்தது. மீதி ஐந்து பெண் பிள்ளைகளுக்கும் (சகோதரிகளுக்கும்) இவரே தந்தையின் ஸ்தானத்திலிருந்து திருமணங்களை நடத்தி வைத்தார்.
பக்கீர் முகம்மது சாகிபிற்கு 21.1.1960 அன்று திருமணம் நடைபெற்றது. துணைவியார் பெயர் எம். ரஸ்யாபானு. இத்தம்பதியினருக்கு ஒரு மகன், மூன்று மகள்கள் என நான்கு பிள்ளைகள். தந்தையாரின் மறைவிற்குப் பின்னர் மகன் கலீல் ‘மைதீன் புகையிலைக் கம்பெனியை’த் திறம்பட நடத்தி வருகிறார். தந்தையாரைப் போலவே அவரும் பொதுச் சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
முடிவுரை:
பக்கீர் முகம்மது சாகிப் 28.01.1991 அன்று தனது 54வது வயதில் காலமானார். அப்போது அவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார். இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து பொதுச் சேவையில் ஈடுபடுவார் என மக்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் அவரது அகால மரணம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவரது ஜனாஸா நல்லடக்கத்தில் கலந்து கொண்டு சிராஜுல் மில்லத் அப்துல் சமது சாகிப் ஆற்றிய இரங்கலுரை அனைவரின் நெஞ்சங்களையும் ஈர்ப்பதாக அமைந்திருந்தது.
கும்பகோணம் பக்கீர் முகம்மது சாகிப் ஒரு மிகச் சிறந்த முஸ்லிமாக. மிகச் சிறந்த மனிதராக விளங்கினார். ‘வாழ்வை விட சாவு எல்லோருக்குமானது எல்லோரும் இறக்கிறார்கள். ஆனால் எல்லோருமே வாழ்ந்து விடுவதில்லை’ என்கிறார் அறிஞர் ஆலன் சாக்ஸ். ஆம் பக்கீர் முகம்மது சாகிப் வாழ்ந்து காட்டியவர். ‘தொண்டு செய்யாத மனித வாழ்க்கை மிருக வாழ்க்கை’ என்கிறான் வேறொரு அறிஞன். மக்கள் தொண்டு செய்தோருக்கு ஒரு போதும் மரணமில்லை. மரணத்திற்குப் பிறகும் அவர்கள் மக்களின் நெஞ்சங்களில் வாழ்வார்கள். கும்பகோணம் பக்கீர் முகம்மது சாகிபும் நமது நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
கட்டுரையாளருடன் தொடர்பு கொள்ள … 99767 35561