அஷ்ஷெய்க் பிஸ்தாமி
இஸ்லாம் என்பது ஒரு சிந்தனை. அது அல்லாஹ்வால் அருளப்பட்ட வாழ்வியல் நெறியாக இருப்பினும் மனித முயற்சிகளை, அர்ப்பணிப்புக்களை, இழப்புகளை வேண்டி நிற்கிறது. அது என்றும் வளர்ந்து செல்லும் போக்கையே கொண்டுள்ளது. வாழ்வியல் நெறிகளை, விழுமியங்களை, பண்பாடுகளை தன்னகத்தே கொண்டுள்ளது. கால வளர்ச்சிக்கும் வேகமான மாற்றத்துக்கும் நின்று பிடித்து ஈடுகொடுக்கும் வலிமையும் வீரியமும் இஸ்லாத்துக்கு மட்டுமே உள்ளது.
கால, தேசம் தாண்டிய இஸ்லாத்தின் பண்பும் அது நின்று நிலைப்பதற்குத் துணை நிற்கின்றன.
இஸ்லாம் எக்காலத்துக்கும் நின்று நிலைக்க வேண்டுமானால் அதை நிகழ்காலத்தில் வாழுகின்ற மனிதர்கள் தான் செய்ய வேண்டும்.
இறைவன் வானத்தில் இருந்து வானவர்களை இறக்கி அதனை ஒருபோதும் பாதுகாக்க மாட்டான். இஸ்லாம் அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்த வழிகாட்டுதல் என்பதற்காக அது மாயாஜாலங்களைச் செய்து உலகில் மிகைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது அர்த்தமற்றது என்பதை ஷஹீத் செய்யித் குதுப் ‘ஹாதத்தீன்’ என்ற நூலில் குறிப்பிடுகிறார்.
அதுபோல நவீன காலத்தில் ஃபிக்ஹுத் தஃவா குறித்துப் பேசும் அஹ்மத் முஹம்மத் ராஷித் அவர்கள் “கில்லதுர் ரிஜால்’ எனும் பதத்தின் மூலம் இஸ்லாத்தை தமது முதுகிலும் தோளிலும் சுமந்து தியாகத்துடன் பணியாற்றும் ஆட்களை மிக அரிதாகவே காணலாம் என்பதையும் குறிப்பிடுகிறார்.
ஃபிக்ஹுத் தஃவா குறித்துப் பேசும் தனது பிரபலமான நூலான “அல்முந்தலக்” இல் சந்தைக்குப் பொருத்தமான வியாபாரிகள் தேவை என்பதையும் இதன் மூலம் உணர்த்துகிறார்.
ஒருமுறை உமர் (ரழி) அவர்கள் தமது தோழர்களைப் பார்த்து ஆசை வையுங்கள், கனவு காணுங்கள் என்று ஆர்வமூட்டியபோது அவர்களது அவா அந்த அறை முழுக்க தங்கத்தாலும் வெள்ளியாலும் நிரம்பியிருக்க வேண்டும். அதனை அல்லாஹ்வின் பாதையில் அள்ளி அள்ளி வாரி இறைக்க வேண்டும் என்பதாக இருந்தது. ஆனால் உமர் (ரழி) அவர்களின் வேட்கையோ இஸ்லாத்தை இந்த உலகின் மூலை முடுக்கெங்கும் பரப்பும் திறன் வாய்ந்த ஆட்கள் இங்கு நிரம்பி இருக்க வேண்டும். ஆளுமைகளால் நிரம்பி வழிய வேண்டும் என்பதாக இருந்தது. இன்னொரு சந்ததிக்காக அவர் சிந்தித்ததன் வெளிப்பாடு இது.
உமர் (ரழி) பாதையின் ஒரு பக்கமாக செல்வதைக் கண்டால் மனிதகுல விரோதி ஷைத்தான் அவரின் கண்முன் படாமல் இன்னொரு பாதைக்கு தனது பயணத்தை மாற்றிக்கொள்வான். காரணம் தன்னை காணும் போது தனது சதிகளை முறியடிக்க இன்னும் வீரியமாக உமர் (ரழி) சிந்திப்பார் என்பதை ஷைத்தான் நன்கு அறிந்து வைத்திருந்தான்.
நபி (ஸல்) அவர்கள் இந்த மார்க்கத்தை முழுமை பெற்ற ஒரு கட்டடத்துக்கு உதாரணமாகக் கூறினார்கள். மிக ஆரம்பம் தொட்டு அடுத்தடுத்த தலைமுறை குறித்து சிந்தித்து, மிகக் கவனமாக அதனது சிந்தனைகள் நகர்த்தப் பட்டு வந்துள்ளதை இஸ்லாமிய வரலாற்றை மிகவும் கூர்ந்து கவனிக்கும் போது உணர முடியும்.
இஸ்லாமிய சிந்தனைகள், பண்பாடுகள். விழுமியங்கள், போதனைகள் அனைத்தும் அடுத்த தலைமுறைக்கு நகர்த்தப்பட வேண்டியவை. ஆனால் மாறும் சூழலை கவனத்தில் கொண்டு அது முன்வைக்கப்பட வேண்டும்.
தற்போது வாழ்கின்ற சூழ்நிலைக்கும் மனித சிந்தனைப் பாங்கிற்கும் ஒத்திசைவாகச் செல்லும் வகையில் அது முன்வைக்கப் பட வேண்டும்.
மாறும் தன்மைகள் (அல் முதகைய்யிராத்) கொண்ட விதிகள் குறித்து இஸ்லாமிய அறிஞர்கள் நவீன கால உலகில் மிகவும் விலாவாரியாக எழுதியும் பேசியும் உள்ளார்கள்.
நபியவர்கள் உருவாக்கிய முன்னணி தோழர்கள் நுணுக்கமாக, தூர நோக்குடன் சிந்திப்பவர்களாகவே இருந்துள்ளனர். மதீனாவுக்கு முழுநேர அழைப்பாளராக அனுப்பப்பட்ட முஸ்அப் இப்னு உமைர், யமனுக்கு அனுப்பப்பட்ட முஆத் பின் ஜபல். ஹிஜ்ரத்தின் போது தனது படுக்கையறையில் வைத்துச் சென்ற அலி (ரழி) போன்றவர்கள் சிந்தித்து செயல்படுபவர்களாக இருந்ததை வரலாற்று நூல்கள் குறிப்பிடுகின்றன.
இஸ்லாம் நெகிழ்வுத் தன்மை கொண்ட ஒரு வாழ்வியல் நெறி. அது மனிதர்களுக்கு இலகுவை நாடுகிறது. கடும்போக்கு நடவடிக்கைகளை அது என்றுமே ஆதரிக்கவில்லை. ஆமோதிக்கவுமில்லை. அனுமதிக்கவும் இல்லை.
இஸ்லாத்தின் பால் அழைப்பு விடுக்கும் எந்த இஸ்லாமிய அழைப்பாளரையும் கடும் போக்கை கையாளவோ, பிரயோகிக்கவோ ஆசையூட்டவில்லை.
ஆதம் (அலை) அவர்களது புதல்வர்களிடையே ஏற்பட்ட மோதலும் முரண்பாடும் முற்றிச் செல்லும் போது அவர்களிருவரில் பாவத்தில் ஈடுபடாத, நியாயமாக நடந்து கொண்ட மகனின் வாயிலிருந்து வெளியான வார்த்தைகள் மிகவும் தூர நோக்கு கொண்டதாகவும், எதிர்கால நலன் குறித்ததாகவுமே அமைந்திருந்தன. அவர் தனது செயல்பாடுகள், முடிவுகள், தீர்மானங்கள் அடுத்த தலைமுறையைப் பாதித்து விடக் கூடாது என்று சிந்தித்தார். “நீ என்னை கொலை செய்வதற்கு உனது கரத்தை நீட்டினாலும் உன்னைக் கொல்வதற்கு எனது கையை நான் நீட்டவே மாட்டேன். நான் அகிலங்களின் இரட்சகனான அல்லாஹ்வை அஞ்சுகிறேன் என்றார்” (அல்மாஇதா: 27) (அல்பிதாயா வன்னிஹாயா)
இன்று நமது நாட்டுக்கும் இது போன்று சிந்திக்கின்ற பண்பு அவசியப்படுகின்றது. இன்றைய சூழலில் நாட்டில் கொந்தழிப்பான சூழ்நிலைகள் உருவாக்கப்படும் போது உணர்ச்சி வசப்பட்டு தீர்மானங்களை மேற்கொள்ளக் கூடாது.
ஹுதைபியா உடன்படிக்கையில் எதிர்த்தரப்பு மனிதர்கள் சொன்ன நிபந்தனைள் முஸ்லிம் தரப்பால் அங்கீகரிக்கப்படவில்லை. எல்லோரும் கொதித்தெழுந்தார்கள். ஆனால் நபிகளார் நிலைமையை மிகவும் கவனமாகக் கையாண்டார்கள். அதன் விளைவு காலம் தாமதித்தாலும் மக்காவின் பெரு வெற்றியாக அது பரிணமித்தது.
முனைவர் லோனா தேவராஜா குறிப்பிடும் “இனங்களுக்கிடையே உபகாரம் பேணும் கடந்தகால முஸ்லிம்கள் போல இப்போது வாழும் இஸ்லாமிய தலைமுறையை மாற்ற வேண்டும். அப்படியான முறையில் சிந்தித்து செயல்படுகின்ற ஒரு சூழ்நிலையை உருவாக்க அனைவரும் முன்வர வேண்டும். இஸ்லாமிய இயக்கங்கள் அமைப்புகள் இது குறித்து தமது கவனத்தைக் குவிக்க வேண்டும் கலந்துரையாட வேண்டும். செயல்பட வேண்டும்.
நபி இப்ராஹீம் அவர்களது வரலாறு குறிப்பிட்டுக் காட்டும் நுட்பமான நுணுக்கமான மிகப் பெரும் பாடம் இதுதான். மிகவும் தூய்மையான ஒரு பரம்பரையை க(உ)ருவாக்க அவர் அரும்பாடுபட்டார். சிந்தனை செய்யும் ஒரு தலைமுறையை உருவாக்க அவர் அதிகம் அர்ப்பணம்செய்தார். வித்தியாசமான நிலங்களுக்கு குடிபெயர்ந்தார். இதற்கு அவரது துணைவியும் அதிகம் பங்கெடுத்தார். கூடவே துணைநின்றார்.
மிகச் சிறந்த ஒரு இறைத் தூதர் அந்தப் பரம்பரையில் வந்தது அதன் தெளிவான விளைவு மனித சஞ்சாரமற்ற பாலை வனத்தில் தனது மனைவியையும் பச்சிளம் பாலகனையும் இறைக் கட்டளையின் காரணமாக விட்டுவருகின்ற போது அவர் சொன்ன வார்த்தைகளை அல்குர்ஆன் இப்படிச் சொல்கிறது: “இறைவா எனது பரம்பரையை உனது மாளிகைக்கு அருகில் பயிர்ப் பச்சைகள் எதுவுமற்ற பாலைவனத்தில் குடியமர்த்தியுள்ளேன். இறைவா! அவர்களை தொழுகையை நிலைநாட்டக் கூடியவர்களாக ஆக்கிவிடு. அவர்களின் பால் பேரார்வம் கொள்ளும் விதமாக மக்களின் உள்ளங்களை ஆக்கிவிடு. அதன் கனிவர்க்கங்களிலிருந்து அவர்கள் நன்றி செலுத்தும் பொருட்டு அவர்களுக்கு ஆகாரம் அளித்துவிடு” (இப்ராஹீம்:37) தனக்குப் பின்னால் வரக்கூடிய தனது பரம்பரையின் ஒளிமயமான எதிர்காலம் குறித்து மிகவும் கவனமாக சிந்தித்தார்கள். தன்னையே அதற்காக இழந்தார்கள்.
எனவேதான் நபி இப்ராஹீமைப் பார்த்து அல்குர்ஆன் “நிச்சயமாக இப்ராஹீம் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுகின்ற ஹனீஃபாக ஒரு தனி சமூகமாக இருந்தார். அவர் அல்லாஹ்வுக்கு இணை வைக்கவில்லை” (அந்நஹ்ல்:127) எனும் வசனத்தை விளக்குகின்ற செய்யிது குத்துப்: அல்லாஹ் நபி இப்ராஹீமை நேர்வழிக்கும் கட்டுப்பாட்டுக்கும் நன்றி தெரிவிப்பதற்கும் அல்லாஹ்வை மட்டுமே சார்ந்திருப்பதற்கும் முன்மாதிரியாக குறிப்பிடுகிறான்.
அவரை தனிப்பெரும் சமூகமாக குறிப்பிடுகின்றான். ஒரு தனிச் சமூகம் பெற்றிருந்த அனைத்து நலவுகளையும் அவர் பெற்றிருந்தார் என்று குறிப்பிடுகிறான். தனி மனிதனாக இருந்து ஒரு சமூகத்தைப் பிரதிபலித்தார்.
இப்ராஹீமின் ரப்பு இப்ராஹீமை பல சோதனைகளைக் கொண்டு சோதித்தான். பின்னர் இப்ராஹீமே உம்மை மக்களுக்கு இமாமாக ஆக்குகிறேன் என்று கூறியபோது தனது பரம்பரையிலிருந்தும் அப்படி (இமாம்களை) ஆக்கி விடு என்று பிரார்த்தித்தார். (ஆலு இம்ரான் 67,68)
இப்படியாக தனக்காகவும் தனது சுய நலன்களுக்காக மட்டும் வாழாமல் இன்னும் பல வருடங்கள் கழித்து வரவுள்ள தனது தலைமுறையின், சமூகத்தின் நலன் குறித்து சிந்தித்தார்கள். அவரது சிந்தனையின், ஆசையின் விளைவு அவரது பரம்பரையில் அதிகமான இறை தூதர்கள் வந்தார்கள். கடைசியாக நபிமார்களின் முத்திரையாக நபி முஹம்மத் (ஸல்) வந்தார்கள். இப்ராஹீம் நபியின் பிரார்த்தனைக்கும் (ஆலு இம்ரான்) முஹம்மத் நபியின் வருகைக்கும் இடையில் (அல்ஜும்ஆ) மிகவும் அழகான ஒரு இணைப்பை ஷஹீத் சையித் குதுப் குறிப்பிடுகிறார். நபி இப்ராஹீமின் இன்னொரு தலைமுறைக்காக வேண்டிய பிரார்த்தனை நிறைவேற பல ஆயிரம் வருடங்கள் சென்றுள்ளதை செய்யித் குதுப் இங்கு குறிப்பிடுகின்றார்.
ஆனால் நபிகளாரின் மரணத்தின் பின்னர் இத்தகைய சிந்தனைகளின் கால அளவு ஒரு நூற்றாண்டு என்பதை ஹதீஸ்கள் குறிப்பிடு கின்றன. ”ஒவ்வொரு நூற்றாண்டின் ஆரம்பத்திலும் இந்த மார்க்கத்தை புத்துயிர்ப்புச் செய்யும் மனிதர்களை அல்லாஹ் அனுப்புவான்” எனும் பிரபலமான ஹதீஸ் (அபூ தாவூத்) இதற்கு நல்ல சான்று. வரலாற்றாசிரியர் சமூகவியல் சிந்தனையாளர் இப்னு கல்தூண் போன்றவர்கள் தலைமுறை இடைவெளியை நாற்பது ஆண்டுகளாக வரையறுத்துள்ளனர். நவீன கால இஸ்லாமிய சிந்தனைப் பின்புலத்தை கவனித்தால் ஜமாலுத்தீன் ஆப்கானி, முஹத்மத் அப்துஹு, ரஷீத் ரிழா போன்றோரைத் தொடர்ந்து இஸ்லாமிய உலகில் புத்துயிர்ப்புவாத சிந்தனைகளை முன்வைக்க வந்த இமாம் ஹஸனுல் பன்னா, மெளலானா மௌதூதி போன்றவர்களும் அடுத்த தலைமுறை குறித்து மிகவுமே சிந்தித்து தீர்மானங்களை மேற்கொண்டுள்ளார்கள்.
இந்த வகையில் நோக்கும் போது நிகழ்காலத்தில் இஸ்லாமிய அழைப்புப் பணியில் மும்முரமாக ஈடுபடுகின்ற அனைவரும் இறந்தகால வரலாற்று நிகழ்வுகள் மூலம் படிப்பினை பெற்று தற்காலத்தை திட்டமிட்டு ஒழுங்கமைத்து எதிர்கால சந்ததிகள் குறித்தும் மிகவும் கவனமாக சிந்தித்து செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயத் தேவையாகும்.
துணை நூல்கள்
1. ஃஃபிக்ஹுத் தஃவா முஸ்தபா மஷ்ஹுர்
2. பீ லிலாளில் குர்ஆன் செய்யித் குதுப்
4. அல் பிதாயா வன்னிஹாயா இப்னு கஸீர்
5.ஹாதத்தீன் செய்யிது குதுப்
6. அஸ்ஸபாத் வல் முருவத் யூஸுப் அல் கர்ளாவி