சொல்லத் தோணுது 10

– கருவேல மரங்களும், கான்வென்ட் பள்ளிகளும்……………………உங்களுக்கு நேரமிருந்தால், வாய்ப்பிருந்தால், விருப்பமிருந்தால் ஏதாவதொரு அரசுப் பள்ளிக்கூடங்களையோ அதில் பயிலும் மாணவர்களையோ கூர்ந்து பாருங்கள். அதேபோல் ஆங்கிலப்பள்ளி அதில் படிக்கும் மாணவர்களின் செயல்பாடுகளை கவனித்துப் பாருங்கள். நம் பிள்ளைகள், எதிர்கால தலைமுறையினர் குறித்த சிந்தனை உங்களுக்கு ஏற்படாமலிருக்காது.நாம் பேசிக்கொண்டேயிருக்கிறோம். எழுதிக்கொண்டே இருக்கிறோம். மாற்றங்களை ஏற்படுத்த ஆள்பவர்கள் மனதில் நேரமில்லையா? ஈரமில்லையா தெரியவில்லை. தான் பிறந்த மண்ணை, மக்களை, பெற்றோர்களை, உறவினர்களை விட்டு பிரிப்பது கல்வி ஒன்று மட்டும்தான். பிறந்ததிலிருந்து பின் அவர்களை ஒரு பணியில் அமர்த்திவிடும் வரை இன்று ஒவ்வொருப் பெற்றோர்களின் பிள்ளைகளின் கல்விக்காகவே மட்டும் உழைக்க வேண்டியிருக்கிறது. இவற்றிற்கு செலவழிப்பதற்காகவே நெறிமுறைகளை மீறி பொருள் சேர்க்க வேண்டியிருக்கிறது.வணிகர்கள் கையில் கல்வியைக் கொடுத்துவிட்டு அரசு மெல்ல நழுவிக்கொண்டுவிட்டது. கல்வித்துறை எனும் பெயரில் தேர்வு ஒன்றை நடத்தி இருக்கிற ஏதோ ஒன்றைக் கொடுத்துப் படிக்கச் செய்வது மட்டுமே போதும் என நினைத்துவிட்டது.. இங்கிருக்கிற கல்வி எதற்கும் உதவாது என்பதைச் சொல்லிப் போராட ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் துணிவும் இல்லை, நேரமும் இல்லை. சம்பளத்திலும், பணியில் அமர்த்தும் தகுதி குறித்தும் மட்டுமே போராடினால் போதும் என ஆசிரியர்கள் நினைக்கிறார்கள். பணத்தைச் சேர்த்து இந்த கொள்ளைக்கூடங்களில் கொட்டவும், பிள்ளைகளுக்கு வேண்டியதை சம்பாதிக்கவும் மட்டுமே பெற்றோர்களுக்கு நேரமிருக்கிறது. தங்களின் சொந்தப் பிரச்சினைகளுக்கு போராடுவதுபோல் அரசியில் கட்சிகளும் கல்வி போன்ற நம் தலைமுறையினரின் முதன்மையான பிரச்சினைகளுக்காக ஒன்று சேர்ந்து போராடுவதில்லை. இங்கு எல்லாமே தனித்தனி அறிக்கையோடு முடிந்து போகிறது. அனைவருமே இங்குள்ள மக்கள் கொத்தடிமைகளாகவும், அகதிகளாகவும் ஆக்கப்படுவது குறித்து கவலைப்படாமல் ராஜபக் ஷேவின் செயல்பாடுகளை மட்டுமே கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.நாட்டின் விடுதலைக்குப்பின் மக்களாட்சி எனும் பெயரில் மக்களின் கையில் வாக்குரிமையைக் கொடுத்துவிட்டு அவர்களை சிந்திக்க மறந்த அடிமைகளாக்கி அவர்களின் கையாலேயே ஆளும் அதிகாரத்தைக் கைப்பற்றும் தொழிலைத்தான் இன்று அரசியல் கட்சிகள் கையிலெடுத்துக் கொண்டுள்ளன. ஒவ்வொரு கட்சிகளும், ஒவ்வொரு நிறுவனங்களாக இன்று செயல்படத் தொடங்கிவிட்டன. மக்களும் எதையும் கண்டுகொள்வதில்லை.வயது வந்தவர்களின் மூளைகளை மதுக்கடைகள் பிடுங்கிக் கொள்கிறது. இளம் தலைமுறையினரின் மூளைகளை முடக்கி தனியார் கல்வி நிறுவனங்கள் கொள்ளையடிக்கின்றன. அடிமையாய் இருப்பவர்களைவிட தாங்கள் அடிமைகள்தான் என்பதை உணராதவர்களின் நிலைமைதான் கொடுமையானது என்பதைச் சொன்ன ஒரு சிந்தனையாளனின் இந்த வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன.கருவேல மரங்களை அழிக்க இன்று எத்தனைத் திட்டங்கள் போட்டாலும் அதனை அழிக்கவே முடியாது. வீட்டுக்குள் மட்டும் அவைகள் பரவவில்லை. நாடெங்கிலும் பரவி நிலத்தின் வனத்தையும், நீர்ப்பிடிப்பையும் அழித்துவிட்டன. இது நமக்கான தாவரமில்லை. இந்த மக்களுக்கு ஏதோ நன்மை செய்வதாக நினைத்துத்தான் இந்த செடிகளை இங்கு கொண்டுவந்திருப்பார்கள் நம் ஆட்சியாளர்கள். அதேபோலத்தான் இம்மக்களுக்கு நல்லதை செய்வதாக நினைத்து ஆங்கிலக் கல்வியை மூலை முடுக்கெல்லாம் தூவினார்கள். கருவேல மரங்கள் நம் ஆதாரங்களையே அழித்ததுபோல் இந்த ஆங்கிலக்கல்வி நம் தாய்மொழி முதற்கொண்டு வாழ்வியலின் அனைத்து அடிப்படைக் கூறுகளையும் அழித்துவிட்டன.இந்தக் கல்வித்திட்டம் நம்மை அடிமைகளாக வைத்திருந்தவர்கள் கொண்டு வந்தத்திட்டம். ஏர்க்காடு உணவகம் ஒன்றில் மேசையில் துணிக்குப்பதிலாக துணிக்குப்பதிலாக பெரியதாள் ஒன்றில் அச்சடித்து வைக்கப்பட்டிருந்த வரிகள் எனக்குத்தந்த அதிர்வுகள்போல் நம்மில் எத்தனைப் பேருக்கு இது இருந்திருக்கும் எனத்தெரியவில்லை.1835ஆம் ஆண்டில் பிரிட்டன் அரசாங்கத்தின் பணியாளாக இந்தியாவிற்கு வந்த “லார்ட் மெக்காலே” இந்தியாவை சுற்றிப்பார்த்துவிட்டு இரண்டாண்டுகளுக்குப்பின் ஆங்கிலேய அரசாங்கத்துக்கு இப்படி எழுதுகிறான்.”இந்தியாவை இரண்டாண்டுகள் குறுக்கிலும் அதன் நெடுக்கிலும் சுற்றிப்பார்த்து இந்த மடலை எழுதுகின்றேன். எல்லா வளங்களும் நிறைந்த நாடு. மக்கள் பண்பாட்டிலும், நாகரிகத்திலும் சிறந்து விளங்குவதாக இருக்கிறார்கள். இந்தக் காலத்தில் எங்குமே ஒரே ஒரு பிச்சைக்காரனையோ, ஒரு திருடனையோ நான் பார்க்கவில்லை. அறநெறிகளை உருவாக்கி அதனை மதித்து வாழும் இவர்கள் ஒன்றைப் பார்த்து மட்டும் பயப்படுகிறார்கள். அந்நியர்கள், அந்நிய மொழி!குறிப்பாக ஆங்கிலம் பேசினால் பயப்படுகிறார்கள், மதிக்கிறார்கள். இவர்களின் வாழ்க்கையை சிதைத்து நம் கட்டுப்பாட்டில் கொண்டுவரை ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. இவர்களின் கல்வி, மருத்துவம், கணிதம், அறிவியல் என எல்லாவற்றையும் அழித்துவிட்டு நம் முறையைப் புகுத்தினால் நிரந்தர அடிமைகளாகி விடுவார்கள்” என எழுதியிருந்தான். இந்தக் கடிதத்தைக் காண்பிடித்துதான் சென்ற ஆண்டு தலைமுறைகள், தங்கமீன்கள் படத்துக்காக என் கருத்துகளை ஆணித்தரமாக எடுத்துரைத்து விருதுகளைப் பெற செயல்பட்டேன்.மெக்காலே 185 ஆண்டுகளுக்கு முன் எழுதிய கடிதம் செயல்படத் தொடங்கியதில் நாம் இப்பொழுது நம் அடையாளங்களை இழந்து நிற்கிறோம். தாய்மொழியும் தெரியாத, அயல் மொழியும் தெரியாத ஒரு சமூகமாக சிதைந்து கிடக்கிறது. நம் மக்களைப் பற்றி சிந்தித்த, நம் மக்களுக்காகவே வாழ்ந்த தலைவர்களையும் உருவாக்கிய நம் அரசுப் பள்ளிக்கூடங்கள் கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து மாணவர்களில்லாத மாட்டுக் கொட்டகைகளாகிவிட்டன.ஐந்து வயது வரும்போது பள்ளிக்கு அனுப்பலாம் என்றிருந்த பெற்றோர்கள் இன்று குழந்தை கருவுற்ற உடனேயே பணம் கொடுத்து பள்ளியில் இடம்பிடிக்கத் தொடங்கிவிட்டார்கள். மூன்று வயதிலிருந்தே வீட்டிலும் படிப்பு, பள்ளியிலும் படிப்பு. இந்த வயிற்றுப் பிழைப்பு கல்வியில் எம் தலைமுறையினர் அழிக்கப்படுவதைப் பற்றி யாருக்கும் கவலையில்லை.எல்லாப் பெற்றோர்களைப் போலவேதான் நானும் தவறினை செய்தேன். நண்பர் ஒருவரின் கேட்கக்கூடாத சொல்லைக்கேட்டு இந்தக் கறிக்கோழிகள் உருவாக்கப்படும் இடங்களைப் போலுள்ள வெளியூரிலுள்ள ஆங்கிலப் பள்ளிக்கூடத்தில் என் மகனை சேர்த்தேன். அந்த இரண்டாண்டு காலத்தில்தான் இந்த மாணவர்கள்படும் துயரங்களும், அவர்களுக்கு கொடுக்கப்படும் கல்வியும், அவை தரப்படும் விதங்களும் புரிந்தது. ஒவ்வொரு ஆங்கிலப்பள்ளிக் கூடங்களும், சிறைக் கூடங்கள்தான் என்பதை உணர்ந்தேன். மனநோயாளி அளவுக்கு மாற்றப்படும் பிள்ளைகள் ஆசிரியரைக் கொலை செய்யும் அளவுக்கு மாற்றப்படுவது இப்பள்ளிகளில்தான். அவர்கள் அதிக அளவில் தேர்ச்சியைப் பெற்று அதனைக் காண்பிப்பதற்குத்தான் அத்தனைக் கொடுமைகளும் நிகழ்த்தப்படுகின்றன.தனது குடும்பத்துக்கும், தனது சமூகத்துக்கும், இவ்வுலகத்துக்கும் அவர்கள் பங்களிப்பு செய்ய வேண்டும் என்பதற்காக அல்ல. பயந்து நடுங்கிய மனதோடும், சோர்ந்து போய் குழி விழுந்த இருண்ட கண்களோடும்தான் என் மகனை வீட்டிற்கு அழைத்து வந்தேன். தன்னம்பிக்கை இழந்த, தன்னைப்பற்றி மட்டுமே நினைத்துக்கொண்டிருக்கின்ற சிறு பிரச்சினைகளைக் கண்டுகூட அஞ்சுகின்ற, சமூகத்தைப்பற்றி சிந்திக்க மறுக்கி்ற அவனை சமநிலைக்குக் கொண்டு வருவதுப்பற்றித்தான் இப்பொழுது கவலைகொள்கின்றேன். அவனுக்குச் சொல்லிக்கொடுத்த ஆசிரியர்களையும், பள்ளியின் பொறுப்பாளர்களையும் பார்த்தபோது நான் அடைந்த வேதனைகளையும் என்னால் எழுத முடியவில்லை. ஒட்டுமொத்த சமூகமும் அழிக்கப்படுவதைப் பார்த்து நான் கொள்ளும் கவலை இது.அந்தப்பள்ளி மட்டுமல்ல தமிழ்நாட்டின் எல்லாப்பல்லிகளிலுமே ப்ளஸ் 1 பாடத்தை கற்பிக்காமல் நேரடியாகவே பன்னிரெண்டாம் வகுப்புப் பாடங்களை மட்டுமே மனப்பாடம் செய்ய கட்டாயப்படுத்துப்படுகிறார்கள். இதனால் ஐ.ஐ.டி,ஐ.எம்.எம்., போன்றத்தேர்வுகளில் தமிழக மாணவர்களின் தேர்ச்சி எண்ணிக்கை மிகவும் குறைந்துப்போகிறது.பிளஸ் 1 பாடத்திலிருந்து பாதி கேள்விகள் கேட்கப்படுவதால் மாணவர்கள் விடை தெரியாமல் தோல்வியடைகிறார்கள்.மூன்று மாதங்களுக்கொருமுறை பருவத்தேர்வை நடத்தி இதனைச் சரி செய்யலாம். யாருக்கு இங்கே இதற்கெல்லாம் நேரம் இருக்கிறது?தன் மொழியைப் பற்றியும், நாட்டைப் பற்றியும் இம்மக்களைப் பற்றியும் சுற்றி நடக்கின்ற எதைப் பற்றியும் கவலை கொள்ளாத தலைமுறைகளைத்தான் இந்த கல்வித்திட்டம் உருவாக்கிக்கொண்டு வருகிறது. தங்களுக்கு நல்ல அடிமைகள் வேண்டும் என்பதற்காகவே இதில் எந்த மாற்றத்தையும் கொண்டுவரத் தயங்குகிறார்கள். கல்வி என்பது வெறும் விவரங்களைக் கொடுப்பது என்பதாக இல்லாமல் அறிவைக் கொடுப்பதாக இருக்க வேண்டும். உலக அளவில் தலை சிறந்ததாக அறிவிக்கப்பட்டுள்ள சிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியலில் முதல் இருநூறில்கூட இந்தியாவிலிருந்து ஒன்றுமே இல்லை. உலக மக்கள் தொகையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் நாடு! வல்லரசாக உருவெடுக்க கனவு காணும் நாடு!ஆங்கிலக் கல்வி கொடுத்து எம்மக்களை முன்னேற்றுபவர்களாகச் சொல்லி மார்தட்டிக்கொள்பவர்கள் கொஞ்சம் இதற்கு பதில் சொல்லுங்களேன். விதைத் தானியத்தை தின்று வயிறு வளர்ப்பவர்களால் எதுவும் சொல்ல முடியாது. மொழி, பண்பாடு, கலாச்சாரம், அறம் நாட்டுப்பற்றை வார்ப்பதாகக் கல்வி இருக்க வேண்டும். அதனைப்புரிந்து கொண்ட நாடுகள்தான் இன்று உண்மையாக கல்வியைக் கற்றுத்தருகின்றன.எல்லாமுமே ஆங்கிலத்தில்தான் இருக்கின்றன என நினைக்கும் முட்டாள்தனமும், மூடத்தனமும் அவர்களிடத்தில் இல்லை.பணம் கொடுத்தால் எந்த பதவியையும் வாங்கலாம். துணைவேந்தர் பொறுப்பு என்பது எப்படிப்பட்டது! அரசியல் உயர் பொறுப்பில், செல்வாக்கின் அச்சாணியைக் கையில் வைத்திருக்கிற பணத்தாசைப் பிடித்தவர்கள்தான் இவர்களை நியமிக்கிறார்களாமே என வெளிநாட்டிலிருந்து தமிழ் கற்க வந்திருக்கிற ஒரு மாணவர் என்னிடம் கேட்கிறார். க,ங,ச 18 எழுத்தை வரிசையாகச் சொல்லத் தெரியாமல் மாட்டிக்கொண்டு தவித்த முனைவர் பட்டம் பெற்றவரைக் காட்டட்டுமா என அவர் என்னிடம் கேட்கிறார். வெளிநாட்டுக்காரர் தமிழ்மொழியின், நம் பழைய கல்வித் திட்டத்தின் மேன்மை அறிந்து வியக்கிற நிலையில் இருக்கும்போது முனைவர் க,ங,ச தெரியாமல் கோட்டு சூட்டுடன் அலைவதும், மனப்பாடக் கல்வி மூலம் 500 மதிப்பெண்களில் 496 பெற்று பீற்றிக்கொள்வதும்தான் நம் கல்வித்திட்டம் சாதித்திருப்பது.முதல் மதிப்பெண்ணைப் பெறும் ஒரே நோக்கத்திற்காகவே ஒரு மாணவனை உருவாக்கிக்கொண்டிருக்கும் இந்த பெற்றோர்களிடமும், கல்வி நிறுவனங்களிடமும், ஆசிரியர்களிடமும் நான் ஒன்றை மட்டும் தெரிந்து கொள்ள நினைக்கிறேன். கொஞ்சம் விசாரித்து சொல்ல முடியுமா?கடந்த 25 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மதிப்பெண் தேர்ச்சியில் முதல் 25 இடங்களில் தேறிய மாணவர்களெல்லாம் இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள். யாருடன், எங்கே, எப்படி வாழ்கிறார்கள் என்பதைச் சொல்லுங்களேன்.இதிலிருந்து நிச்சயம் தெரிந்துவிடும் நம் கல்வித்திட்டத்தின் அருமை பெருமை.- இன்னும் சொல்லத் தோணுது…எண்ணங்களைத் தெரிவிக்க….thankartamil@gmail.com