பசுமைப் புரட்சியின் விளைவுகள்

மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. 7 1/2 கோடி தமிழர்களில் ஏறக்குறைய 70 விழுக்காட்டினர் இன்று நோயாளிகளாக மாறிவிட்டனர். ஒரு வியாதிக்கு மருந்து உட்கொண்டால் பல வியாதிகளை உற்பத்தி செய்யும் இயற்பண்பு கொண்ட ஆங்கில (அலோபதி) மருந்துகளை வாங்கிக் குவித்து, அதை மருந்து என்ற நிலையில் உட்கொள்வதாக இல்லாமல் அதை உணவாகவே உட்கொள்ள வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தைலங்கள் இல்லையென்றால் தாய்மார்களுக்கு தூக்கம் போச்சு என்ற நிலை அதி வேகமாகப் பரவலாகிக் கொண்டிருக்கிறது.தங்கமும், வெள்ளியும் தமிழ்ப் பெண்களின் சொத்துக்களாக இருந்த நிலைமாறி, மாத்திரைகளும் மருந்து பாட்டில்களுமே சொத்துக்கள் என்று சொல்லும் அளவுக்கு இன்று அவை வீடுகளில் நிரம்பிக் கிடக்கின்றன. இந்த அவலநிலை வரும் காலங்களில் இன்னும் அதிகரிக்கப் போகிறது என்று மிரட்டுகிறது மேற்கூறிய ஆய்வறிக்கை. பஞ்சமும் நோயும் எதிர்கால சந்ததிக்கு நாம் வழங்கப் போகும் பரிசாகப் போகிறது என்பதை மேற்படி ஆய்வறிக்கையின் மூலம் நாம் அறியும் போது நெஞ்சமே அதிர்கிறது.நகரங்களில் வாழும் சில கொடுமதியாளர்களின் கோணல்புத்தி காரணமாக வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் கிராமங்களில் நாசகாரத் திட்டங்கள் அமுல்படுத்தப் படுகின்றன. கிராமங்களில் வாழும் அப்பாவி மக்கள், இந்த நாசங்களெல்லாம் ஏன் ஏற்படுகின்றன என்பதை அறியாமலேயே அவற்றால் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். அவர்களைப் பாதுகாக்க வேண்டிய அரசின் கிராமப்புற சுகாதாரத் துறையோ ஊட்டச்சத்து இல்லாமல் படு நோஞ்சானாகக் கிடக்கிறது.அரசு வெளியிட்டுள்ள கிராமப்புற சுகாதாரம் குறித்த புள்ளி விவரத்தின்படி, மருத்துவர்கள் பற்றாக்குறை 76 சதவிகிதம். ஒருலட்சத்து பத்தாயிரம் மருத்துவர்கள் தேவைப்படுகின்ற நிலையில் வெறும் 26 ஆயிரம் பேர் தான் இருக்கின்றனர். சிறப்பு நிபுணர்கள் 59 ஆயிரம் பேர் தேவை. ஆனால் இருப்பதோ 7 ஆயிரம் பேர். ஏழை எளிய மக்களின் நோய் நிவாரணத்திற்கு இருக்கும் ஒரே அமைப்பான ஆரம்ப சுகாதார நிலையங்களின் பற்றாக்குறை 34 சதவிகிதம்.மருத்துவம் வணிக மயமாகி பன்னாட்டு நிறுவனங்களும் பண முதலைகளும் போட்டி போட்டுக் கொண்டு பலஅடுக்கு மருத்துவமனைகளைக் கட்டி மக்களின் உழைப்பை எல்லாம் உறிஞ்சிக் கொண்டிருக்கும் நிலையில், அரசின் தெளிவில்லாத மருத்துவக் கொள்கையும் சுகாதாரத் துறையில் நிலவும் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் பற்றாக்குறையும், நாற்றெமெடுத்த லஞ்ச ஊழலும் ஏழை எளிய மக்களின் எதிர்கால நல வாழ்வை கேள்விக் குறியாக்கி விட்டுள்ளது.