கற்றல் முறைகள்

இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்களின் கல்விச் சிந்தனைகளில் இந்த மாதம் “ஒரு ஆசிரியர் மாணவர்களுக்கு பாடங்களை எப்படி கற்றுக் கொடுக்க வேண்டும்?” என்பதை இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்களின் சிந்தனையின் வழியாக நாம் சிந்திப்போம்.

  1. ஒரு பாடத்தை கற்றுக் கொடுக்கின்ற போது கடந்த கால அறிவு மற்றும் அனுபவத்தின் மூலம் கற்றுக் கொடுக்கப் பட வேண்டும்
  2. பாடங்களை எளிமைப்படுத்தி, இலகுவாக்கி மாணவர்களுக்கு விளங்க வைக்க வேண்டும்
  3. கடினமான அல்லது சிக்கலான விஷயங்களை நேரடியாக சொல்லாமல் எளிமையான முறையில் விளக்கி சொல்ல வேண்டும்.
  4. பாடங்களை நடத்துவதற்கு முன்பாக எந்த பாடத்தை எப்போது, யாருக்கு நடத்தப் போகிறோம் என்பதை விளங்கி சரியான திட்டமிடுதலோடு நடத்த வேண்டும்.
  5. ஒரு ஆசிரியர் மாணவர்களிடம் எப்போதும் அன்பாக இருக்க வேண்டும்
  6. இரட்டை மனநிலை உடையவராக ஆசிரியர் இருக்க கூடாது.
  7. ஒரு ஆசிரியர் தனக்கு தெரிந்ததை எல்லாம் மாணவர்களிடம் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பதை விட,மாணவர்களின் திறனை,திறமையை,புரிந்து கொண்டு அவர்களுக்கு ஏற்றவாறு பாடங்களை நடத்த வேண்டும்.
  8. உடல் சார்ந்த (Physical Education ) கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
  9. மொத்தத்தில் ஒரு ஆசிரியர் மாணவர்களுக்கு எல்லாமுமாக இருக்க வேண்டும்.

மாணவர்கள் எப்படி இருக்க வேண்டும்?

  1. கல்வியை கற்க செல்லும் முன் மாணவர்கள் தங்களை உள்ளத்தால் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்
  2. கல்வி கற்கின்ற மாணவன் உலக ஆசைகள் மனதில் ஏறாதவாறு கற்க வேண்டும்.
  3. ஆசிரியர்களுக்கான கடமையை செய்ய வேண்டும்.
  4. மனிதாபிமான தன்மையோடு ஆசிரியர்களிடம் பழக வேண்டும்.
  5. எந்த துறையில் நிபுணத்துவம் (Specialization) பெற வேண்டும் என்பதை தேர்ந்தெடுத்து,அதன் வழிகளில் முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.
  6. ஒரு பாடத்தை முழுமையாக புரிந்தபின் தான் அடுத்த பாடத்திற்கு செல்ல வேண்டும்.
  7. அந்த பாடங்களை படிக்கின்ற போது தர்க்க ரீதியான தொடர் வரிசைகளையும்,இந்த பாடம் (அறிவு) வேறு எதனோடு தொடர்பு உடையது என்பதைப் பற்றியும் நன்றாக விளங்கிக் கொள்ள வேண்டும்.
  8. கல்வியின் நோக்கம் இந்த உலகில் சிறந்த கல்வியாளனாகவும்,ஆன்ம சுத்தி பெற்றவனாகவும்,மறுமையில் இறைவனுக்கு நெருக்கமாகவும் இருப்பதற்காகத்தான் என்பதை ஆழமாக மனதில் பதிய வைக்க வேண்டும்.
  9. நான் கற்கும் கல்வியின் நோக்கம் புகழ் பெறுவதும்,பணம் சம்பாதிப்பதும் மட்டும் இல்லை என்பதை ஆழமாக மனதில் பதிய வைக்க வேண்டும்.

உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கான கால அட்டவணை

உயர்கல்வி படிக்கின்ற மாணவர்கள் ஒரு நாளை ( 24 மணி நேரம்) எப்படி பிரித்து படிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தியிருக்கிறார்கள்

நேரம்செய்ய வேண்டியது
வைகறை முதல் சூரிய உதயம் வரை (3 am to Sun rise)அல்லாஹ்வை வணங்குவது (தஹஜ்ஜத்,ஃபஜர்,இஷ்ராக்,குர்ஆன் ஓதுதல் ஆகிய அனைத்தும்)
சூரிய உதயம் முதல் முற்பகல் வரை ( 6.30 to 11 am)ஒரு ஆசிரியரிடம் சென்று கல்வி கற்றுக் கொள்வது
முற்பகல் முதல் நண்பகல் வரை (11 am to 3 pm )கற்றுக் கொண்டதை குறிப்புகளாக எழுதி அதை Fair Copy –ஆக உருவாக்குவது
நண்பகல் முதல் சூரிய மறைவு வரை (3 pm to Sunset)கருத்தரங்குகளில் கலந்து கொள்வது (அ) கல்வியாளர்களோடு இருப்பது,இறைவனை வணக்குவது,சூரிய மறைவு நேரத்தில் பாவமன்னிப்பு தேடுவது
இரவின் முதல் பகுதி (மக்ரிப்பிற்கு பின் – இரவு 9 மணி வரை)படிப்பதற்கான நேரம் (காலையில் கற்றுக் கொண்ட Fair Copy ஆக மாற்றிய அனைத்தையும் படிப்பதற்கான நேரம்
இரவின் இரண்டாம் பகுதி (இரவு 9 மணி முத்ல் 11 மணி வரை)இறை வணக்கம்
இரவின் மூன்றாம் பகுதி (இரவு 11 மணி முதல் அதிகாலை 3 மணி வரை)தூக்கம்

இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் சொன்னது போல் உயர்கல்வி கற்கின்ற மாணவர்கள் நடைமுறைப்படுத்தினால்  ஒரு மாணவனின் உடலும் உள்ளமும் பரிசுத்தமாகி உயர்ந்த கல்வி உடையவராக மாறுவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

பெரும்பாலான அரபுக் கல்லூரிகள் இந்த கால அட்டவணையில்தான் செயல்படுகின்றன என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.