முதல் தலைமுறை மனிதர்கள் 28 சிராஜுல் மில்லத் ஆ.கா.அ. அப்துல் ஸமது சாகிப்

சென்ற இதழ் தொடர்ச்சி….

பேச்சாற்றலும் எழுத்தாற்றலும் :

நல்ல பேச்சாளர்கள் நல்ல எழுத்தாளர்களாக பரிணமிப்பதில்லை.அதுபோலவே நல்ல எழுத்தாளர்கள் நல்ல பேச்சாளர்களாகத் திகழ்வதில்லை.ஆனால் சமது சாகிப் இவ்விரு ஆற்றலும் ஒருங்கே நிரம்பப் பெற்றவராகத் திகழ்ந்தார்.1941 ஆம் ஆண்டு தொடங்கிய அவரது மேடை உரைகள் 1999ஆம் ஆண்டு அவர் மரணிக்கும் தருவாய் வரை தொடர்ந்தன.

தமிழகமெங்கும் நடைபெற்ற முஸ்லிம் லீக் பொதுக் கூட்டங்களிலும், மீலாது விழாக்களிலும், மத்ரஸா பட்டமளிப்பு விழாக்களிலும், பொது நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து கொண்டு ஆற்றிய உரைகள் பத்தாயிரத்தைத் தாண்டும். ‘கேட்டார்ப் பிணிக்கும் தகைஅவாய் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல்’ என்பார் வள்ளுவர்.அதுபோலவே, அவரது மேடைப் பேச்சுகள் அமைந்திருக்கும்.அவரது உரையினைக் கேட்க மக்கள் அலை கடலெனத் திரண்டு வந்தனர்.

அவரது தமிழ் உரைகள் இனிமையாகவும், அதே நேரத்தில் உணர்ச்சிகரமாகவும் இருக்கும்.அவர் வார்த்தைகளைத் தேடுவதில்லை.அவர் உரையாற்றுகின்ற போது வார்த்தைகள் அணிவகுத்து வரும்.ஆற்றொழுக்கு போன்ற தமிழ் நடைக்குச் சொந்தக்காரர் அவர்.எந்த மேடையில் உரையாற்றினாலும் அவரது உரை தனித்து நிற்கும்.‘சக்கரைப் பந்தலில் தேன் மாரிப் பொழிந்தது போல’ என்று குறிப்பிடுவார்களே அது போல் அவரது உரைகள் அமைந்திருக்கும்.அவரது உரை கேட்டு மகிழ்ந்தவர்களில் நானும் ஒருவன்.

1979ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தமிழகத்தில் காவல் துறையினர் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து வேலை நிறுத்தம் செய்தனர்.(அப்போது எம்.ஜி.ஆர் தமிழக முதல்வராக இருந்தார்) அந்த வேலை நிறுத்தத்தில் எதிர்க் கட்சிகளுக்கு எந்தப் பங்கும் இல்லை.எனினும் முதல்வர் எம்.ஜி.ஆர் எதிர்க்கட்சிகள் குறிப்பாக தி.மு.க காவல் துறையினரை வேலை நிறுத்தம் செய்யத் தூண்டுவதாகக் குற்றம் சாட்டினர். அந்தக் கால கட்டத்தில் திருநெல்வேலியில் தி.மு.க, காங்கிரஸ், முஸ்லிம் லீக் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் நடைபெற்ற ஒரு மாபெரும் பொதுக்கூட்டத்தில் தி.மு.க தலைவர் கலைஞரும், காங்கிரஸ் தலைவர் மூப்பனாரும், அப்துல் சமது சாகிபும் கலந்து கொண்டு உரையாற்றினர்.

அந்தப் பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய மூப்பனாரும் கூட்டணிக் கட்சிகளின் இரண்டாம் கட்டத் தலைவர்களும் காவல் துறையினரின் வேலை நிறுத்தத்தைக் குறிப்பிட்டு முதல்வர் எம்.ஜி.ஆர் குற்றம் சாட்டுவது போல் அந்தப் போராட்டத்தை எதிர்க்கட்சிகள் தூண்டவில்லை என அழுத்தம் திருத்தமாக குறிப்பிட்டனர். கலைஞர் கருணாநிதி உரையாற்றுவதற்கு முன்னர் அப்துல் சமது சாகிப் உரையாற்ற அழைக்கப்பட்டார். அவர் தனது உரையில் ‘எனக்கு முன்னர் உரையாற்றிய காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைவர் மூப்பனார் அவர்களும், பிற கூட்டணிக் கட்சித் தலைவர்களும் காவல் துறையினரின் வேலை நிறுத்தத்தை நாங்கள் தூண்டவில்லை என அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிட்டனர். ஆனால் நான் சொல்ல விரும்புவது என்ன வென்றால் காவல் துறையினரின் கோரிக்கைகள் நியாயமானது.அரசு அவர்களது கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது.தமிழக வரலாற்றிலேயே காவல் துறையினர் முதன் முதலாக வேலை நிறுத்தம் செய்கிறார்கள்.எனவே நாம் அவர்களைத் தொடர்ந்து போராடத் தூண்டினால் தான் என்ன?நாம் தூண்டுவோம்’ என்று அவர் கூறவே ஒட்டு மொத்தக் கூட்டமும் ஆர்ப்பரித்தது.அன்றைக்கு அவரது உரை தனித்துவம் மிக்கதாகக் திகழ்ந்தது எனலாம்.இது போன்று பல உதாரணங்களைக் சொல்லிக் கொண்டே போகலாம்.

இஸ்லாமிய மார்க்கக் கூட்டங்களில் அவர் உரையாற்றுகின்ற போது அந்தக் கூட்டங்களில் கலந்து கொண்ட மார்க்க அறிஞர்களுக்கு மிகுந்த முக்கியத்துவமும், மரியாதையும் அளித்து பணிவான முறையில் தனது உரையினை நிகழ்த்துவார். சுருங்கக் கூறின், அவர் தமிழகத்தின் தலை சிறந்த சொற்பொழிவாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தார்.கடையநல்லூருக்கும் அவருக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு.அவ்வூரில் நூற்றுக்கணக்கான முஸ்லிம் லீக் கூட்டங்களிலும் பொது நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து கொண்டு உரையாற்றியிருக்கிறார்.

அவரது கடைசிப் பொது நிகழ்ச்சியும் கடையநல்லூரில் தான் நடைபெற்றது.14.03.1999 அன்று அந்நகரின் கிழக்குப் பகுதியில் கட்டப்பட்டிருந்த ‘தாரும் உலூம் பிலால் மஸ்ஜித்’தின் புதிய கட்டிடத்தை திறந்து வைத்து அவர் உரையாற்றினார்.அது தான் அவரது கடைசி பொது நிகழ்ச்சியாகும்.

அவரது பேச்சாற்றல் குறித்து சிலம்புச்செல்வர் ம.பொ.சிவஞானம் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

‘அந்நாளில் ஒய்.எம்.சி.ஏ வில் பட்டிமன்றம் நடக்கும்.அப்துல் சமது பேசுவார்.நானும் பேசுவேன்.நான் பேசும் கூட்டத்துக்கெல்லாம் அவர் தவறாமல் வருவார்.அவருக்குப் பின்னால் பேச வேண்டுமென்றால் எனக்குக் கொஞ்சம் பயம்தான். ஏனென்றால் என்னுடையது கிழத்தமிழ்; அவருடையது இளந்தமிழ் (‘என்னைக் கவர்ந்த இனிய தலைவர்’ என்ற நூலில் ம.பொ.சி எழுதியுள்ள கட்டுரை) ‘அவருடைய தமிழ் உரையைக் கேட்பது ஒரு கீதத்தைக் கேட்பது போல் இருக்கும்’ என முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் கூறியுள்ளார்.

அவரது மேடை உரைகளைப் போலவே அவரது எழுத்துக்களும் தேனாக இனிக்கும்.சிங்காரத் தென்றல் நடைக்குச் சொந்தக்காரர் அவர்.அவர், அரசியல் மற்றும் சமயம் சார்ந்த கட்டுரைகளை தான் தொடங்கி நடத்தி வந்த மணிவிளக்கு, மணிச்சுடர், அற முரசு ஆகிய இதழ்களில் எழுதினார்.

ஒவ்வொரு மாதமும் ‘மணிவிளக்கு மாத இதழில் ‘அன்புத் தம்பி, அஸ்ஸலாமு அலைக்கும்’ என விளித்து அம் மாதத்திய நாட்டின் அரசியல் மற்றும் சமூக நடப்புகளை எழுதி வந்தார்.இவை கடிதம் போல் அமைந்திருந்தன.இக் கடிதங்களை வஸ்ஸலாம், ஷீப்லி, என முடித்திருப்பார்.அவரது கடிதங்களும்.கட்டுரைகளும் காலக் கண்ணாடியாகத் திகழ்கின்றன.இவற்றை ஒரு சேரப்படிக்கின்ற எந்த ஒரு வாசகனும் அன்றைய நாட்டு நடப்புகளையும், அரசியல் நிகழ்வுகளையும் தெளிவாக அறிந்த கொள்ள முடியும்.

தனது இதழ்கள் தவிர, அன்றைய கால கட்டத்தில் வெளிவந்த பிற முஸ்லிம் லீக் இதழ்களான உரிமைக்குரல், மறுமலர்ச்சி, முழக்கம் ஆகியவற்றிலும் ஏராளமான கட்டுரைகள் எழுதியுள்ளார்.மேலும் இலக்கியக் கழக மலர்களும், மத்ரஸா ஆண்டு விழா மலர்களும் அவரது கை வண்ணம் பட்டு பொலிவடைந்தன.

பெருநாள் பிறை காண்பதில் ஏற்படும் பிரச்னைகள், குழப்பங்கள் குறித்து அவர் மணிவிளக்கு மாத இதழில் ‘பிறை காணுதல் சில பிரச்னைகள்’ என்ற தலைப்பில் எழுதிய விரிவான கட்டுரையில் அந்தப் பிரச்னையின் சகல அம்சங்களையும் தெளிவாக விளக்கியுள்ளார். மீனாட்சிபுரம் மத மாற்றம் குறித்து நவம்பர் மாதம் 1983 இதழில் அவர் எழுதியுள்ள ‘மதமாற்றமும் அரசின் தடுமாற்றமும்’ என்ற கட்டுரை பொய்ப் பிரச்சாரங்களுக்குத் தக்க பதிலடி கொடுக்கும் வண்ணம் அமைந்திருந்தது. அவரது கட்டுரைகளை ‘சிராஜுல் மில்லத் சிந்தனைகள்’ என்ற தலைப்பில் பேராசிரியர் சாய்பு மரைக்காயர் அவர்களும்.கடிதங்களை ‘அன்புத் தம்பி’ என்ற தலைப்பில் அய்யம்பேட்டை ஆலிமான் ஜியாவுதீனும் தொகுத்து வெளியிட்டுள்ளனர்.

இதழாசிரியர்:

சமது சாகிப், 1954ஆம் ஆண்டு ‘மணி விளக்கு’ என்ற மாத இதழை சென்னையிலிருந்து தொடங்கினார்.அதன் ஆசிரியராகவும் அவரே பொறுப்பு வகித்தார்.‘மன இருளைப் போக்கி மகிழ் ஒளியைக் காட்டும் மாதமொருமுறை மலரும் இதழ்’ என்ற வரிகள் அதன் தலையங்கப் பகுதியை அலங்கரித்தன.இதில் அரசியல் தொடர்பான செய்திகள், கட்டுரைகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் இலக்கியம், சமயம், அறிவியல் சார்ந்த கட்டுரைகளுக்கு முன்னுரிமை அளித்தார். 

இதனை ‘இஸ்லாமிய இலக்கிய மாத இதழ்’ என்றே அறிவித்திருந்தார்.புகழ் பெற்ற முஸ்லிம் எழுத்தாளர்கள் மகனி, வலங்கைமான் அப்துல்லா, நூ.மி.ஷெய்கு அப்துல் காதர், எஸ்.எம்.கமாலுதீன், வடகரை எம்.எம்.பக்கர், நூன், காரை வாப்பு மரைக்காயர், கல்லிடை டி.எம்.பீர்முகம்மது, ஷேக்கோ, ஷாஹா, ஹஸன் ஆகியோர் மணி விளக்கில் தொடர்ந்து எழுதி வந்தனர். தலையங்கத்திற்கு அடுத்த பக்கத்தில் ‘நமக்குள்ளே’ என்ற தலைப்பில் அந்த இதழில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் சிறுகதைகள் பிற செய்திகள் ஆகியவை குறித்து சுருக்கமாக குறிப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒவ்வொரு இதழிலும் கேள்வி-பதில் பகுதியும் இடம் பெற்றிருந்தது.அவரது அரசியல் சார்ந்த கட்டுரைகளும் தவறாமல் இடம் பெற்று வந்தன.

மணிவிளக்குப் பத்திரிகையை நடத்திக் கொண்டிருக்கும் போதே, 1960 ஆம் ஆண்டு ‘மணிச்சுடர்’ என்ற வார இதழைத் தொடங்கினார்.‘மணிக்சுடர் மணிவிளக்கின் ஒளிச்சுடர்.அரசியல் வானில் தனிச்சுடர்’ என்று அறிவித்து இந்த இதழைத் தொடங்கினார்.இது இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் ஆதரவு ஏடாகத் திகழ்ந்தது.ஏராளமான அரசியல் சார்ந்த கட்டுரைகள் இந்த இதழில் இடம் பெற்றிருந்தன.அவர் மாநில முஸ்லிம் லீகின் தலைமைப் பொறுப்பை ஏற்ற பிறகு, இந்த இதழ் நாளிதழாக வெளிவந்தது.தமிழ் மாநில முஸ்லிம் லீகின் அதிகாரப்பூர்வ ஏடாகவும் திகழ்ந்தது.

இந்த நாளிதழ் தற்போதையத் தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் காதர் முகையதீன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு தற்போது வெளிவந்து கொண்டிருக்கிறது.1970ஆம் ஆண்டு ‘கிரசண்ட்’ என்ற ஆங்கில மாத இதழையும் அவர் தொடங்கி நடத்தி வந்தார்.

நூல்கள்:

மாநிலத்தின் மணிவிளக்கு, திருக்குர்ஆனைப் பற்றித் திருக்குர்ஆன் நற்பணியாற்றிய நபி மணி, சன்மார்க்கக் காவலர்களும், சமுதாயக் கடமைகளும், புனித ஹஜ்ஜின் இனிய நினைவுகள் ஆகிய நூல்களை அவர் எழுதி வெளியிட்டுள்ளார். ஷிப்லி அஸத், எஹியா, இபுனு பாகவி ஆகிய புனைப் பெயர்களிலும் எழுதியுள்ளார்.

 பொறுப்புகளும், பதவிகளும் :

சமது சாகிப் தனது பொது வாழ்வில் ஏராளமான பொறுப்புகளையும்.பதவிகளையும் வகித்துள்ளார்.சென்னை மாநகரில் இயங்கி வருகின்ற புதுக்கல்லூரியை நிர்வகித்து வரும் தென்னிந்திய முஸ்லிம் கல்விச் சங்கத்தின் தலைவராக அவர் 1964 முதல் 1978 வரை பொறுப்பு வகித்தார்.இது குறித்து அவர் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி மாநாட்டு மலரில் (1973) ‘சில நினைவுகள்’ என்ற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

‘கடந்த ஐந்து ஆண்டு காலமாக இந்தப் புதுக் கல்லூரியின் நிர்வாகக் குழுவின் தலைவராகவும், பழைய மாணவர் சங்கத் தலைவராகவும், கல்லூரியின் தாய்ச் சபையாகிய தென்னிந்திய முஸ்லிம் கல்விச் சங்கத்தின் தலைவராகவும் இருந்து வரும் பெரும் பாக்கியத்தைப் பெற்றிருக்கிறேன்.

200 மாணவர்களோடு நான் படித்த அதே கல்லூரியில் இன்று 5000 மாணவர்கள் படிக்கிறார்கள் என்பதையும் ஆண்டொன்றுக்கு 2000 மாணவர்களைச் சேர்க்கும் பொறுப்பு என்னிடத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் எண்ணும்போது மன்னிக்கத்தக்க பெருமிதம் ஏற்படுவது இயற்கை, அதை விட 23 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு கல்லூரியில் நுழைய அனுமதி கிடைத்தும் நுழைய விடாமல் தடுத்து நிறுத்திய போது எனக்கேற்பட்டது போன்ற மனநிலை புதுக்கல்லூரிக்கு விண்ணப்பிக்கும் எந்த இஸ்லாமிய இளைஞனுக்கும் ஏற்படாத வகையில் இன்று நிர்வகித்து வரப்படுகிறது என்ற மகிழ்ச்சி எனக்கு உண்டு’ அவரது பெருமித உணர்வு நியாயமானதே.

இது தவிர, அண்ணாமலைப் பல்கலைக் கழக செனட் உறுப்பினர், சென்னைப் பல்கலைக் கழக சிண்டிகேட் மற்றும் அகாடமிக் கவுன்சில் உறுப்பினர், தமிழ் நாடு முஸ்லிம் கல்வி நிறுவனங்கள், சங்கங்கள் (OMEIAT) ஆகியவற்றின் தலைவர், அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினர், பன்னாட்டு இஸ்லாமியப் பல்கலைக் கழக செயற்குழு உறுப்பினர், சட்டமன்ற நாடாளுமன்ற பொதுத் தணிக்கைக்குழு உறுப்பினர், சட்டமன்றத்திலும், நாடாளு மன்றத்திலும் இருபதுக்கும் மேற்பட்ட குழுக்களின் உறுப்பினர், எனப் பல பொறுப்புகளையும், பதவிகளையும் வகித்துத் திறம்படப் பணியாற்றியுள்ளார்.

மனங்கவர் தலைவர்:

1974ஆம் ஆண்டு தமிழக உலமா பெருமக்களால் அவருக்கு சிராஜுல் மில்லத் (சமுதாயத்தின் ஒளிவிளக்கு) என்ற சிறப்புப் பட்டம் வழங்கப்பட்டது.அதுவே அவரது நிலைத்த சிறப்புப் பெயராக விளங்கி வருகிறது. அனைத்துக் கட்சித் தலைவர்களாலும், சமுதாயப் பிரமுகர்களாலும், இலக்கியவாதிகளாலும், சமயத் தலைவர்களாலும் மதிக்கப்பட்ட  தலைவராக அவர் விளங்கினார்.

இந்தியக் குடியரசுத் தலைவர்கள், பிரதமர்கள், வெளிநாட்டுத் தலைவர்கள், கல்வியாளர்கள், பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் என அனைவரிடமும் அவருக்கு நெருங்கிய அறிமுகமும், நட்பும் இருந்தது.உலகின் பல்வேறு நாடுகளுக்கும் அவர் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இலக்கிய ஆர்வலர்:

சமது சாகிப், தமிழ் இலக்கியத்திலும், இஸ்லாமிய இலக்கியத்திலும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார்.இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகத்தின் உலக ஒருங்கிணைப்பாளராக 1993 ஆம் ஆண்டு முதல் 1999 ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார்.தமிழகத்தில் நடைபெற்ற அனைத்து இஸ்லாமிய இலக்கியக் கழக மாநாடுகளிலும் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார்.‘இஸ்லாம் எங்கள் வழி; இன்பத் தமிழ் எங்கள் மொழி’ என்ற முழக்கத்தை முதன் முதலில் எழுப்பியவர் அவரே.இன்று பல இலக்கிய அமைப்புகளாலும் அந்த வரிகள் எடுத்தாளப்படுகின்றன.

விமர்சனங்கள்:

சமது சாகிப் தமிழ் மாநில முஸ்லிம் லீகின் தலைவராக 2.4.1975 முதல் 11.4.99 வரைப் பதவி வகித்தார்.அவரது பதவிக் காலத்தில் முஸ்லிம் லீக்கின் வரலாற்றில் எதிர்பாராத திருப்பங்களும்.கருத்து மோதல்களும் ஏற்பட்டன.

சமது சாகிபும், மறுமலர்ச்சி ஆசிரியர் ஏ.எம்.யூசுப்பும் பால்ய நண்பர்கள்.இருவரும் ஒரே கால கட்டத்தில் முஸ்லிம் லீகில் இணைந்து பணியாற்றியவர்கள்.எனினும் இருவருக்குமிடையே நாளா வட்டத்தில பல்வேறு விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறை முகப் பனிப்போர் நடைபெற்று வந்தது.சமது சாகிப் தி.மு.க வுடன் வரம்பு மீறி நெருக்கம் காட்டுவதாக யூசுப் சாகிப் கருதினார்.இதனை மறைமுகமாக அவர் தனது மறுமலர்ச்சி இதழில் சுட்டிக் காட்டி எழுதி வந்தார்.இதனால் இருவருக்குமிடையே இடைவெளி அதிகரித்தது.

1968ஆம் ஆண்டு மறுமலர்ச்சி ஆசிரியர் ஏ.எம்.யூசுப்  அவ்வேட்டின் துணை ஆசிரியர் ஏ.எம்.ஹனீப், டாக்டர் கபீபுல்லா பேக் உள்ளிட்ட ஏழு தலைவர்கள் கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாக கட்சியிலிருந்து தற்காலிகமாக விலக்கி வைக்கப்பட்டனர். இதன் பின்னணியில் சமது சாகிப் இருந்தாக விலக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டி வந்தனர் இது காயிதே மில்லத்  அவர்கள் காலத்தில் நடந்த நிகழ்வாகும்.

சமது சாகிப் தலைவராக பதவி வகித்த போது அவருக்கும், இன்னொரு முக்கியத் தலைவரான எம்.ஏ. அப்துல் லத்தீப் சாகிப்பிற்குமிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன.இப்போது லத்தீப் சாகிப் வரம்பு மீறி தி.மு.க வுடன் நெருக்கம் காட்டுவதாக சமது சாகிப் கருதினார்.இருவருக்குமிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்தன. இந்தச் சூழலில் அப்போது கூட்டணியிலிருந்த மார்க்ஸிய கம்யூனிஸ்ட் கட்சி ‘முஸ்லிம் லீக் ஒரு வகுப்பு வாதக் கட்சியென்றும், எனவே அக்கட்சி வேட்பாளர்களை தேர்தலின் போது ஆதரிக்க மாட்டோம்’ என்றும் அறிவித்திருந்தது.

கூட்டணியின் தலைவர் என்ற முறையில் தி.மு.க தலைவர் கலைஞர் இது குறித்துக் கருத்துத் தெரிவிக்க வேண்டுமென முஸ்லிம் லீக் எதிர்பார்த்தது.ஆனால் கலைஞர் இது குறித்து கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. இதனால் அதிருப்தியடைந்த முஸ்லிம் லீக் 5.10.1988 அன்று நடைபெற்ற மாநில முஸ்லிம் லீகின் செயற்குழுக் கூட்டத்தில் தி.மு.க வுடனான கூட்டணி உறவை முறித்துக் கொள்வது என முடிவு எடுத்தது.

ஆனால் அப்போது கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த எம்.ஏ.லத்தீப் சாகிப் செயற்குழுவின் முடிவை ஏற்க மறுத்து தி.மு.க வுடனான பிரச்னை மிகவும் சாதாரணமானது என்றும் அக்கட்சியுடன் பேச்சு வார்த்தை நடத்தி பிரச்னையைச் சுமூகமாகத் தீர்க்க முடியும் என்றும், திடீரென்று உறவை முறிக்க வேண்டியதில்லை என்றும், அறிக்கை விடுத்தார். இதனால் அவர் கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாக கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

தி.மு.கவுடனான உறவை முறித்துக் கொள்ள சமது சாகிப் முடிவெடுத்தது அவசர கதியில் எடுக்கப்பட்ட முடிவு என்றே அரசியல் நோக்கர்கள் கருதினர்.பின்னர் காட்சிகள் வேகமாக மாறின. லத்தீப் சாகிப் தலைமையில் ஒரு தனி அணி உருவாகியது.அடுத்த ஆண்டே தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்தல் வந்தது.(1989) இத் தேர்தலில் முஸ்லிம் லீக் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது.அதே நேரத்தில் லத்தீப் சாகிப் அணி தி.மு.கவுடன் கூட்டணி சேர்ந்து தேர்தலைச் சந்தித்தது.  இத் தேர்தலில் போட்டியிட்ட முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் (சமது சாகிப் உள்ளிட்ட) அனைவரும் வெற்றி வாய்ப்பை இழந்தனர்.ஆனால் லத்தீப் சாகிப் அணியைச் சார்ந்த நான்கு பேர் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர்களாயினர்.

பின்னர் லத்தீப் சாகிப் இப்ராகிம் சுலைமான் சேட் தொடங்கிய இந்திய தேசிய லீக்கில் இணைந்தார்.1996ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும் தேசிய லீக் தி.மு.க வுடன் கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்தித்து நான்கு இடங்களிலும் வெற்றி பெற்றது.இந்தக் கால கட்டத்தில் முஸ்லிம் லீகிற்கு சட்டமன்றத்தில் பிரதி நிதித்துவம் கிடைக்கவில்லை.இதனால் கட்சி நடவடிக்கைகளில் தொய்வு ஏற்பட்டது.

1989 ஆம் ஆண்டு காங்கிரசுடன்  கூட்டணி சேர்ந்த முஸ்லிம் லீக், 1991ல் அதிமுக காங்கிரஸ் கூட்டணியின் புறக்கணிப்பு காரணமாக பாட்டாளி மக்கள் கட்சியுடன் இணைந்து போட்டியிட்டது. 1996 மற்றும் 2001 சட்டமன்றத் தேர்தல்களில் அதிமுக அணியில் இணைந்து போட்டியிட்டது.எனினும் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் வெற்றி பெறவில்லை. தனது அரசியல் வாழ்க்கையின் தொடக்கத்திலிருந்தே தி.மு.கவுடன் அதிகம் நெருக்கம் காட்டி வந்ததாக விமர்சிக்கப்பட்ட சமது சாகிப் தான் 1988ஆம் ஆண்டு தி.மு.க வுடனான உறவை முறித்துக் கொண்டார்.

இது ஒரு எதிர்பாராத திருப்பமாக அமைந்தது.மீண்டும் 1998 ஆம் ஆண்டு இறுதியில் தி.மு.கவுக்கும் முஸ்லிம் லீக்கிற்குமிடையே உறவு ஏற்பட்டது.எனினும் 1999ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின் போது தி.மு.க- பா.ஜ.க வுடன் கூட்டணி அமைத்ததால், மீண்டும் இரு கட்சிகளுக்குமிடையே பிரிவு ஏற்பட்டது.

குடும்பம்:

சமது சாகிபிற்கு 2.7.1959 அன்று  திருமணம் நடைபெற்றது. துணைவியார் பெயர் நர்கிஸ் பானு, சமது-நர்கீஸ் பானு தம்பதியினருக்கு அப்துல் ஹமீது பாகவி, அப்துல் ஹக்கீம், அப்தல் வகாப் என்ற மூன்று மகன்களும், ராபியத்துல் அலவியா, பாத்திமா ஸஹாரா என்ற இரு மகள்களும் உண்டு மூத்தவர் அப்துல் ஹமீது பாகவி தற்போது சிங்கப்பூரில் வசித்து வருகிறார். புதல்விகளில் ஒருவரான பாத்திமா முஸபர் முஸ்லிம் லீகின் மாநில மகளிர் அணிச் செயலாளராகவும், தமிக வக்ப் வாரிய உறுப்பினராகவும் பொறுப்பு வகிக்கிறார்.  

முடிவுரை:

சில நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்த சமது சாகிப் 11.4.99 அன்று மரணமடைந்தார். அவரது மறைவிற்கு சட்டமன்றத்தில் இரங்கல் தீர்மானம் கொண்டு வந்து உரையாற்றிய அப்போதைய தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி ‘மேடையில் வீசிய மெல்லிய பூங்காற்று திடீரென்று நின்று விட்டது’ என்று குறிப்பிட்டதோடு ‘மத வேறுபாடு காரணமாக தமிழகத்தில் சிறு கிளர்ச்சியைக் கூட விளைவிக்கக் கூடாது என்று கருதுபவர்கள் அனைவருக்கும் அவரது இழப்பு பெரிய இழப்பு ஆகும்.

கருத்து வேறுபாடுகளுக்கு இடையேயும் புன்னகைத்துப் பேசுவதும், பழகுவதும் அவரது இயல்பாகும்’ என்று குறிப்பிட்டார். பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான இல.கணேசன் அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து குமுதல் வார இதழில் எழுதிய செய்தியில் அனைத்து சமயத்தினராலும் மதிக்கப்பட்ட தலைவராக அவர் திகழ்ந்ததாக குறிப்பிட்டிருந்தார்.

பல்லாண்டுகள் காலம் பொது வாழ்க்கையில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்த சமத் சாகிப்பின் கடைசி கால வாழ்க்கை பொருளாதார ரீதியில் சிரமம் நிறைந்ததாகவே இருந்தது. தனது மனைவியின் சிறு நீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக சென்னை அடையாறில் இருந்த தனது வீட்டையும் அவர் விற்க நேர்ந்தது.

அவர் மரணமுற்ற போது அவருக்கு எந்தச் சொத்தும் இல்லை என்பதையறிகின்ற போது நமது கண்கள் குளமாகின்றன.எனினும், அப்பழுக்கற்ற பொது வாழ்க்கைக்குச் சொந்தக்காரராக அவர் திகழ்ந்தார்.அது ஒன்றே அவரது நிலைத்த புகழுக்குக் காரணமாகும்.அவரின் நினைவைப் போற்றுகின்ற வண்ணம் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாநிலப் பொதுச் செயலாளரும், கடையநல்லூர் சட்ட மன்ற உறுப்பினருமான ஜனாப் கே.ஏ.எம். முகம்மது அபூபக்கர் அவர்கள் தென்காசிக்கு அருகிலுள்ள ஆய்க்குடி என்ற சிற்றூரில் செயல்பட்டு வரும் அமர் சேவா ஊனமுற்றோர் நிலையத்தில் ஒரு கட்டிடம் கட்டிக் கொடுத்துள்ளார். அதன் திறப்புவிழா சென்ற 15.09.2018 அன்று நடைபெற்றது. இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசியத் தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் காதர் முகையதீன் சாகிப் அவர்கள் விழாவில் கலந்து கொண்டு அந்த நினைவுக் கட்டிடத்தைத் திறந்து வைத்தார். கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களின் மறைவிற்குப் பின் அவர் சமுதாய மக்களால் பெரிதும் மதிக்கப்பட்ட ஒரு தலைவராகத் திகழ்ந்தார்.

அவரின் எழுத்தாற்றலும் பேச்சாற்றலும் அவரைப் புகழின் ஊச்சிக்குக் கொண்டு சென்றன.பிற அரசியல் மற்றும் சமயத்தலைவர்களாலும் மதிக்கப்பட்ட அவர் ஒரு நல்லிணக்க நாயகராகவே கருதப்படுகிறார்.

‘நேர் நோக்கும், நிறை நோக்கும் மிக்கோன் நீ – அரசியல்

நெறி நோக்கும் அரண் காக்கும் அரியோன் நீ

சீர் நோக்கும் சீலம் நோக்கித் தழைவோன் நீ – எங்கள்

சிந்தை நோக்கின் தலைமைக்கு உரியோன் நீ

வேர் நோக்கும் கனியொத்த மொழி பேசுவாய் – மணி

விளக்குகள் ஒளியேற்றும் உரை தீட்டுவாய்

கார் நோக்கும் பயிரென்று யாம் நிற்கவே- எங்கள்

கண்ணான சிராஜுல் மில்லத் நிதம் வாழ்கவே’  என்ற கவிஞர் கிளியனூர் ஷகீதா செல்வனின் புகழஞ்சலியோடு நாமும் இணைந்து கொள்வோம்.

கட்டுரையாளருடன் தொடர்பு கொள்ள ….  99767 35561, 93601 89931