இளம் ஆலிம்களே! உங்களைத்தான்! பகுதி : 23

நபிவழி மருத்துவம்

உணவே மருந்தாக இருந்த காலம் மறைந்து, மருந்தே உணவாகிப் போன காலம் வந்திருக்கிறது. உணவுத்தட்டில் இருக்கும் உண்பண்டத்தை விட, மருந்துப் பெட்டியில் இருக்கும் மாத்திரைகளே எண்ணிக்கையில் அதிகமாக இருக்கிறது.

உணவுக்கு முன் – உணவுக்குப் பின், உறங்கப் போகும் முன் – உறங்கி எழுந்த பின், மூச்சுத்திணறலுக்கு முன் – மூச்சுத்திணறலுக்குப் பின்… என ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் விதவிதமான ?குளிகைகளை? விழுங்கிக் கொண்டிருக்கிறோம்.

இயற்கையை விஞ்சிய செயற்கை; பலகாரத்தை புறந்தள்ளிய அலங்காரம்; ஆரோக்கியத்தை அலட்சியப்படுத்தும் வண்ணம் (நிறம்) நாக்கு சுவையை மிகைத்த கண் சுவை… இப்படி உணவில் ‘கெமிக்கல்’ எனும் நஞ்சைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து, நம்மை அறியாமலேயே பெரு நோய்களை விலை கொடுத்து வாங்கிக்கொண்டிருக்கிறோம்.

இன்னொரு பக்கம், பாதிப்பில்லாத நல்ல உணவையே உண்டாலும், நேரம்காலம் என்றெல்லாம் பார்க்காமலும் அளவில் கட்டுப்பாடு இல்லாமலும் சாப்பிட்டு வம்பை வலியச் சென்று வருத்திக் கொள்கிறோம். அளவில் கட்டுப்பாடும் ஆரோக்கித்தில் கவனமும் இருக்கும்படியான உணவுப் பழக்கம் வந்து விட்டாலே நோய்கள் வெருண்டோடி விடும் நம்மை அண்டாது.

நபிவழி மருத்துவம்

முன்பே நாம் குறிப்பிட்டபடி, அனுபவ அடிப்படையிலான அரேபிய மருத்துவ முறையையே நபி(ஸல்) அவர்கள் அதிகமாக கையாண்டார்கள். சுரைக்காய் போன்ற காய்கறிகள், தேன் போன்ற பானங்கள், கருஞ்சீரகம் போன்ற சிறுவிதைகள், இந்திய கோஷ்டம் போன்ற வேர்கள் முதலான இயற்கைப் பொருட்களை நோய்க்கு முன்பும் நோய் வந்த பின்பும் உபயோகிக்க நபியவர்கள் கற்றுக் கொடுத்தார்கள். குருதி வெளியேற்ற முறையும் அவர்களின் பழக்கத்தில் இருந்து வந்தது.

நபி மருத்துவம் மட்டுமின்றி இயற்கை மருத்துவம் அனைத்திலும் ஒரு முக்கியமான குறிப்பை முதலில் குறிப்பிடுவது அவசியம். 

அதாவது மருந்து என்பதே அதன் சேர்மானப் பொருட்களைச் சரியான அளவில் எடுத்து குறிப்பிட்ட மருத்துவ முறையில் தயார் செய்து, குறிப்பிட்ட நோய்களுக்குச் சரியான அளவுகளில் பரிந்துரைக்கப் படுவதுதான். எனவே மருத்துவக் குணமுடைய பொருட்களை மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக் கொள்வதே நோய் குணமடைவதற்கான வழியாகும்.

எனவே, தேனாகட்டும்! கருஞ்சீரகமாகட்டும்! கண் நோய்க்கான அஞ்சனமாகட்டும்! அவற்றை எந்த நோய்க்காக, என்ன சேர்மானப் பொருளோடு, என்ன அளவில் எப்படி கையாள வேண்டும் என்பதை வைத்தியர் வழிகாட்டலின் பேரிலேயே பயன்படுத்த வேண்டும்.

தேன்

அதில் (தேனில்) மனிதர்களுக்கு நோய் நிவாரணம் உள்ளது. (அல்குர்ஆன் 16-69) என்று அல்லாஹ் அறிவிக்கின்றான்.

நபி (ஸல்) அவர்கள் இனிப்புகளையும் தேனையும் விரும்பி (சாப்பிட்டு) வந்தார்கள்.  (புகாரீ)

தேனில் (நோய்க்கான) நிவாரணம் உண்டு – என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரீ)

தேன் ஓர் இனிய உணவுப் பொருள் மட்டுமல்ல மருத்துவ குணம் கொண்டதும் கூட. பூக்களில் காணப்படும் இனிப்பான, வழு வழுப்பான திரவத்திலிருந்து தேனீக்கள் தேனை உறிஞ்சி எடுக்கின்றன. தேனில், தண்ணீரோ வேறு சுவையூட்டும் பொருட்களோ கலந்திருப்பதில்லை.

நீர்ம நிலையில் உள்ள தேன் கெட்டப் போவதில்லை. தேனிலுள்ள மிதமிஞ்சிய

இனிப்புச் சத்தானது, கிருமிகளான நுண்ணுயிரிகளை வளர விடாமல் தடுத்து விடுவதே இதற்குக் காரணம். பதப்படுத்தப்படாத தேனில் 14-18% ஈரத்தன்மை உள்ளது. 18% க்கும் கீழே ஈரத்தன்மை இருக்கும் வரை தேனில் கிருமிகள் வளர வாய்ப்பில்லை.

தேன் ஊட்டச்சத்துள்ள ஓர் உணவாகும். தேனில் பிரக்டோஸ் – 38.27, குளுக்கோஸ் – 31.3%, மால்டோஸ் 7.1%, சுக்ரோஸ் – 1.3%, நீர் – 17.2%, சர்க்கரை – 1.5%, சாம்பல் -0.2%, மற்றவை – 3.2% இடம் பெற்றுள்ளன

மருத்துவப் பயன்கள்

தேனில் உள்ள மருத்துவப் பயன்கள் மிக முக்கியமானவை. இந்திய ஆயுர் வேத மற்றும் சித்த மருத்துவ முறைகள் முதல் சீனா, ரஷ்யா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா ஆகிய நாடுகள் வரை உலக வழக்கில் இருக்கும் பாரம்பரிய மருத்துவ முறைகள் அனைத்திலும் தேனுக்கு முக்கிய இடமுண்டு.

பொதுவாக நாட்டு மருந்துகளுடன் சேர்த்து, தேனையும் ஒரு துணை மருந்தாகக் கொடுக்கும் மரபு உண்டு. அந்த மருந்துகளால் வயிற்றுப் புண் போன்ற கோளாறுகள் ஏற்படாமல் தேன் தடுத்து விடும் என்பதே இதற்குக் காரணம்.

  1. ஆஸ்துமா, அலர்ஜி, சைனஸ் போன்ற சுவாசக் கோளாறுகளுக்குச் சித்த மருத்துவத்தில் தேன் ஒரு சிறந்த மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. ஒரு தேக்கரண்டி தேனுடன் இரு குருமிளகுகளைப் பொடியாக்கிக் கலந்து கொடுப்பார்கள். உணவுக்கு முன் தினமும் உட்கொண்டு வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
  2. குரல் கரகரப்புக்குத் தேன் நல்லது. தேனுடன் துளசிச் சாறு மற்றும் வெற்றிலையைச் சேர்த்து நாள் தோறும் மூன்று அல்லது நான்கு தடவை இதை அருந்தி வந்தால் நல்ல குணம் கிடைக்கும்.
  3. தீக்காயம், தோல்புண் ஆகியவற்றை ஆற்றும் கிருமி நாசியாகவும் தேன் பயன்படுகிறது.
  4. இரைப்புண், இரத்த சோகை, உடல் பருமன், கேன்ஸர், சர்க்கரை நோய் முதலான நோய்களுக்கு, மருத்துவர் ஆலோசனையின் பேரில் குறிபிட்ட கலப்பு முறையில் தேனைப் பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
  5. இரவில் அடிக்கடி அடிக்கடி சிறுநீர் கழிக்கும் குழந்தைகளுக்கு, உறங்கப் போகும் முன்பு ஒரு ஸ்பூன் தேன் கொடுத்து வந்தால் சில நாட்களிலேயே குணம் தெரியும்.

காளான்

மண் மீது வளரும் பூஞ்சைத் தாவரம் இனங்களில் ஒன்றே காளான். காளானில் இருவகை உண்டு. 1. உணவாகவும் மருந்தாகவும் பயன்படும் சமையல் காளான். 2. துர்நாற்றம் வீசக்கூடிய நச்சுக்காளான். எனவே, இனம் கண்டறிந்தே காளானைப் பயன்படுத்த வேண்டும். காரணம், நல்லவை, கெட்டவை என லட்சத்திற்கும் அதிகமான வகைகள் காளானில் உண்டு.

 சமையல் காளானின் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும் – என்பது நபிமொழி. (புகாரீ)

சமையல் காளான் அல்லது உணவுக் காளான் சுவையும் சத்தும் உள்ளது. ‘டி’ உயிர்ச் சத்து அதில் உண்டு. ‘பென்சிலியம்’ என்று நுண்ணிய பூஞ்சைக் காளாணிலிருந்து ‘பென்சிலின்’ மருந்து தயாரிக்கப்படுகிறதாம்! ரொட்டிகள் செய்யவும் காளானைப் பயன்படுத்துகின்றனர்.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                      

கண் நோய்க்கும் மட்டுமின்றி காளான் பல நோய்களுக்குச் சிறந்த மருந்தாகும். இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்துச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது காளான். இதனால் உயர் இரத்த அழுத்தம், கொழுப்பு அடைப்பு ஆகியவற்றைக் குணப்படுத்தும். உட்புற செல்களில் பொட்டாசியத்தின் அளவு குறைவதும், வெளிப்புற செல்களில் சோடியத்தின் அளவு அதிகரிப்பதும் இரத்த அழுத்தத்தின் அடையாளங்களாகும். இதைச் சமன்படுத்த வேண்டுமானால், பொட்டாசியத்தின் அளவைக் கூட்ட வேண்டும்.

நூறு கிராம் அளவுள்ள காளானில் 447 மி.கி. பொட்டாசியம் சத்து உள்ளதாம்! சோடியம் 9 மி.கி. உள்ளது. எனவே இதயத்தைக் காக்கும் சிறந்த உணவாக காளான் விளங்குகிறது. இரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பைச் சீராக்கும் தாமிரச் சத்தும் உணவுக் காளானில் உள்ளது. மூட்டு வாதம், மலட்டுத் தன்மை, கருப்பை நோய்கள் ஆகியவற்றுக்கும் காளான் சிறந்த நிவாரணி ஆகும்.

தினமும் காளான் சூப்பு அருந்தி வந்தால், மார்பகப் புற்று நோயைக் குணப்படுத்தலாம். நூறு கிராம் காளானில் 35% புரதச் சத்துக் காளானில் இருப்பதுடன், உடல் வளர்ச்சிக்கு வேண்டிய அமினோ அமிலங்களும் அதில் அதில் உள்ளது. எனவே, குழந்தைகளின்  உடல் வளர்ச்சிக்குச் சிறந்த ஊட்டச்சத்தாக காளான் உள்ளது.

மலச்சிக்கல், உடல் இளைப்பு, ஆசனப் புண், வயிற்றுப் புண் ஆகியவற்றுக்கும் காளான் நல்லது. ஆனால், தாய்ப்பாலை வற்றவைக்கும் தன்மை இருப்பதால், பாலூட்டும் பெண்கள் காளானைத் தவிர்ப்பது நல்லது என்பார்கள்.

கருஞ்சீரகம்

அதிகமான காரமும் கசப்பும் கொண்ட கருப்பு நிற சீரகமே கருஞ்சீரகம் (BLACK CUMIN) எனப்படுகிறது. மருத்துவ உலகில் ‘NIGELLA SATIVA’ எனக் கருஞ்சீரகத்தை அழைப்பர். இதற்கு அரணம் உப குஞ்சிகை ஆகிய பெயர்களும் உண்டு.

தெற்கு மற்றும் தென் மேற்கு ஆசியாவைத் தாயகமாகக் கொண்ட ஒரு தாவரம்தான் கருஞ்சீரகம். இச்செடியானது 20 – 30 செ.மீ உயரம் வரை வளரும். இதன் மலர்கள் நீண்ட காம்புகளுடன் வெளிர் நீல நிறத்தில் இருக்கும்.

கனியின் மேற்பகுதி பிளந்து விதைகள் வெளிவரும். ஒரு காயில் நிறைய விதைகள் காணப்படும். கறுப்பாகவும், உறுதியாகவும் இருக்கும் இவ்விதைகள், நறுமண உணவுப் பொருளாய் பயன்படுவதும் உண்டு. கருஞ்சீரகத்தை உட்கொண்டவுடன் தொண்டையில் இலேசாக அரிப்பதைப் போன்றிருக்கும். சில நிமிடங்களில் மாறிவிடும்.

சர்வரோக நிர்வாரணி

“கருஞ்சீரக விதையில், மரணத்தைத் தவிர மற்ற எல்லா நோய்களுக்கும் நிவாரணம் உண்டு – என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நறுமண உணவுப் பொருளாக மட்டும் கருஞ்சீரகத்தைக் கருதி விடாதீர்கள். ஏராளமான நோய்களுக்கு அந்தச் சிறு விதையில் நிவாரணம் இருக்கிறது. இதனாலேயே, ‘மரணத்தைத் தவிர’ என்று சிம்பாலிக்காக நபியவர்கள் குறிப்பிட்டார்கள்.

கருஞ்சீரகத்தின் விதையில் உள்ள ‘தைமோ குவினோன்’ வேறு எந்தத் தாவரத்திலும் இல்லாத ஒன்றாகும். அவசியமான அமினோ அமிலங்கள், கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் பீடா கரோடின், கால்சியம், இரும்புச் சத்து, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் கருஞ்சீரக விதைகளில் குவிந்து கிடக்கின்றன.

நெடுநாள் நோய்களான புற்றுநோய், இருதநோய், ஆஸ்துமா ஆகிய நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றல் கருஞ்சீரக விதைக்கு உண்டு. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் தன்மையும் அதற்கு உண்டு.   

சித்த வைத்தியர் சதீஷ் கூறுவதைப் பாருங்கள : இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பயிரிடப்படும் இந்தத் தாவரத்தின் விதைதான் கருஞ்சீரகமாகப் பயன்படுகிறது. இதில் ஏராளமான மருத்துவக் குணங்கள் உண்டு.

1. கருஞ்சீரப் பொடியைக் காபியுடன் கலந்து உட்கொண்டால், குடல்புழுக்கள் வெளியேறிவிடும். 3-7 நாட்கள் காலை அரை கிராம், மாலை நான்கு கிராம் வீதம் இதனைக் கொடுத்து வந்தால், வெறிநாய்க்கடி போன்ற நச்சுக்கடிகளில் இருந்து நிவாரணம் பெறலாம்.

2. கருஞ்சீரகப் பொடியை நொச்சிக் குடிநீருடன் சேர்த்துக் கொடுத்து வந்தால் மேகப் பிடிப்பு, காய்ச்சல், விட்டுவிட்டு வரும் ஜூரம் போன்ற நோய்களுக்கு நல்லது.

3.  கருஞ்சீரகப் பொடியைத் தேன் அல்லது தண்ணீரில் கலந்து கொடுக்க மூச்சுத் திணறல் நீங்கும்; தொடர் விக்கல் விலகும். சூதக் கட்டு, சூதகச் சூலை (சூதகம் – மாதவிடாய்) போன்றவற்றுக்கு ஒரு கிராம், அல்லது மூன்று கிராம் அளவில் கொடுக்கலாம்.

4. கருஞ்சீரகப் பொடியை வறுத்துத் தூளாக்கி, எண்ணெய்யில் ஊற வைத்து, மூக்கில் சொட்டு விட கடுமையான தலைவலி, சளி ஆகிய தொல்லைகள் நீங்கும். பொதுவாகக் குளிர்ச்சியால் ஏற்படும் நோய்களுக்கு கருஞ்சீரகம் சிறந்த நிவாரணி ஆகும்.

5. கருஞ்சீரகத்தை அரைத்து நல்லெண்ணெய்யில் குழைத்து சிரங்கு, கரப்பான் போன்றவற்றில் பூசி வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

6. வயிற்றுக் கோளாறு, சிறுநீரகக் கற்கள், தோல் குறைகள், சுவாச நோய்கள், புற்று நோய், தலைமுடி உதிர்வு போன்ற நூய்களுக்கும் கருஞ்சீரகம் நல்ல நிவாரணி ஆகும்.    

சித்த மருத்துவர் கு.சிவராமன் கூறுகிறார் : கருஞ்சீரகம் குறித்து 10-12 ஆண்டுகளுக்கு முன்புதான் ஆய்வு செய்ய ஆரம்பித்தேன்.

இன்ஃபுல மேஷனைக் குறைக்க, கருஞ்சீரகம் சிறந்த நிவாரணி என்பதைக் கண்டறிந்தேன். புற்றுநோய்க்கும் அது நல்ல மருந்தாகும். கருஞ்சீரகத்தின் எண்ணெய்யிலிருந்து மருந்து தயாரித்துப் பயன்பெற முடியும்.

மருத்துவர் தெய்வநாயகம் : கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாகவே கிரேக்க ஐரோப்பாவில் கருஞ்சீரகம் பயன்பாட்டில் இருந்து வருகிறதாம்! நெஞ்சக நோய்……..?

மருத்துவர் தெய்வநாயகம் கூறுகிறார் : கார் விபத்தில் ஒருவருக்கு காலில் பலமான அடி எக்ஸ்ரே எடுத்துப் பார்த்ததில் நுரையீரலில் வெள்ளை படிந்திருந்தது. வெள்ளை பெரிதாகவும் தெரிந்தது. இரத்தக் கசிவுக்கு முதலில் மருந்து கொடுக்க வேண்டும். தற்செயலாகப் பாரம்பரிய மருத்துவ முறைப்படி அடிபட்டால் கருஞ்சீரகமே கை மருந்தாகும்.

இரண்டு தேக்கரண்டி கருஞ்சீரகம் எடுத்து ஒரு துணியில் கட்டி, அரிசியில் தண்ணீர் ஊற்றி அதில் கருஞ்சீரகத்தை முக்கி எடுப்பார்கள். அடிபட்ட இடத்தை மூன்று நாட்கள் கழுவி வந்தால், நான்கு நாட்களில் சுகம் கிடைக்கும். அவ்வாறே என் பேசண்டுக்கும் செய்ததில் குணம் கிடைத்தது.

பிறகுதான், கருஞ்சீரகம் குறித்துப் படிக்கத் தொடங்கினேன். பல அதிசயங்கள் தெரிய வந்தன. உலக அளவில் கருஞ்சீரகம் பற்றிய ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளது. நம் பகுதியில் மருந்தாகவும் அது பயன்பட்டிருக்கிறது. வயிற்றுப் பூச்சிக்குக் கருஞ்சீரகம் நல்ல மருந்தாகும்.

மருத்துவம் பற்றி இமாம் ஷாஃபி (ரஹ்)

நபி (ஸல்) அவர்களின் மருத்துவக் குறிப்புகள் மேலும் சில நபிமொழிகளில் காணப்படுகின்றன. நபி (ஸல்) அவர்கள் எந்த மருத்துவக் கல்லூரியில் படித்தார்கள் என்று யாரும் கேட்டால், அது அவரது அறியாமையாகவே கருதப்படும். மற்றெல்லாத் துறைகளையும் எவ்வாறு இறை அறிவிப்பின் மூலம் கற்றார்களோ, அவ்வாறே மருத்துவத்துறையையும் இறை அறிவிப்பின் வாயிலாகவே கற்றார்கள்.

மற்றத் துறைகளுக்கு நபியவர்கள் காட்டிய வழிமுறைகள், நம்பிக்கை சார்ந்து பலனளிப்பதைப் போன்றே இத்துறையிலும் நோயாளியின் நம்பிக்கையைப் பொறுத்து அம்மருந்து பயனைத் தரும். மருத்துவர் மீது நோயாளிக்கு முதலில் நம்பிக்கை வேண்டும். அப்போதுதான் அவர் தரும் மருந்து நோயைக் குணப்படுத்தும்.

அதுவல்ல இங்கு விவாதப் பொருள். மருத்துவத்துறைக்கு நபி (ஸல்) அவர்கள் அளித்த முன்னுரிமையும் முக்கியத்துவமும் தான்.

இங்கு அறிஞர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய உண்மை இம்மையில் வாழ வேண்டும், அமல்கள் செய்ய வேண்டும் அப்போதுதான் மறுமையில் சுகமான வாழ்வு கிட்டும். இம்மையில் வாழ ஆரோக்கியம் தேவை. அதற்கு வழிகாட்டுவதுதான் மருத்துவம்.

இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் ‘மருத்துவக் கலை’ எனும் தம் நூலில் கூறுகிறார்கள் : ஹலால் – ஹராமுக்கு அடுத்து மருத்துவத்தை விட ஓர் ஆக்கப்பூர்வமான கல்வி வேறு இல்லை. ஆனால், முஸ்லிம்கள், கல்வியின் மூன்றில் ஒரு பங்கான மருத்துவத்தை வீணாக்கிவிட்டார்கள்; யூதர்கள் கையிலும் கிறித்தவர்கள் கையிலும் அதை ஒப்படைத்து விட்டார்கள்.

இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் காலத்தில் ஒரு முஸ்லிம் மருத்துவர் கூட கிடைக்கவில்லையாம்! பெரும்பாலான மருத்துவர்கள் அப்போதும் வேதக்காரர்களாகவே இருந்துள்ளனர். இதனால், மாற்றாரிடம் போய் வரிசையில் நிற்காமல் இருக்க, முஸ்லிம்கள் இதைக் கற்க வேண்டாமா என இமாம் வருத்தப்பட்டார்கள்.

முஸ்லிம்கள் தன்னிறைவோடு ஒவ்வொரு துறையிலும் மிளிர வேண்டுமானால், உலகவியல் சார்ந்த கலைகள் அனைத்திலும் அவர்களும் வல்லுநர்களாக விளங்குவது காலத்தின் கட்டாயமாகும். 

அப்போதுதான் முஸ்லிமான ஆண், பெண்ணின் தேவைகள் இடையூறின்றி நிறைவேற வழி பிறக்கும். முஸ்லிம்களுக்கு ‘நலன் நாடுதல்’ என்ற கோட்பாடு உயிர் பெற முடியும். 

ஷைகு முக்தார் ஷனீதீ

சந்திப்போம்……