இஸ்லாம் எங்கள் வழி இன்பத் தமிழ் எங்கள் மொழி வல்ல இறைவனை வணங்கி வாழ்வோம் வாழும் மக்களுடன் இணங்கி வாழ்வோம் வறுமைப் பட்டோருக்கு வழங்கி வாழ்வோம்!
இனத்தின் உயர்வொன்றே –இன்னுயிரின் விலை என்று முனைத்த உணர்வோடு -மூண்டெழுந்த பேரணி தூங்கி நிலையிழந்து தூசடைந்த சமூகத்தின் ஈனப்பழிகளைய இன்னுயிரும் தூவென்று மணிச்சுடர் மணி விளக்கின் ஒளிச்சுடர் அரசியல் வானில் தனிச்சுடர் பெருநாள் வாழ்த்துக் கூறினார், பேருவகை அடைந்தோம்
வசைபாடத் தொடங்கினார் இசைபாட முடியவில்லையே என வருந்துகிறோம்.
மேற்கண்ட வைர வரிகளுக்குச் சொந்தக்காரர் யார் என்று நினைக்கிறீர்கள்? சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துச் ஸமது சாகிப் அவர்களின் பேனா முனையிலிருந்து வந்த வார்த்தைகளே அவை. அரசியல் தலைவர், சமுதாயத் தலைவர் – சிறந்த பாராளுமன்றவாதி, சிறந்த எழுத்தாளர், பேச்சாளர் – சிறந்த இதழாசிரியர் ஆகிய பன்முகத் தன்மைகள் கொண்டிருந்த ஸமது சாகிப், காயிதேமில்லத் இஸ்மாயில் சாகிப் அவர்களுக்குப் பிறகு தமிழ் முஸ்லிம் சமூகத்தால் மதிக்கப்பட்ட மிகச் சிறந்த தலைவராக விளங்கியவர்.
அவரது தந்தையார் மௌலானா ஆ.கா.அப்துல் ஹமீது பாகவி அவர்கள் தான் திருக்குர்ஆனை முதன் முதலில் தமிழில் மொழி பெயர்த்த பெருமைக்குரியவர் என்பது பலரும் அறிந்த செய்தியே. அவரது தாயார் பெயர் ஜைனப் பீவி. இச்சீலமிகு தம்பதியினரின் புதல்வராக காரைக்காலில் 4.10.1926 (திங்கள்கிழமை) அன்று ஸமது
சாகிப் பிறந்தார். ஏழாவது வகுப்பு வரை பயின்ற அவர், அதன் பிறகு 13 ஆண்டுகள் கழித்து தனியே மெட்ரிக்குலேஷன் தேர்வு எழுதி வெற்றி பெற்று (இது எஸ்.எஸ்.எல்.சி க்கு சமமானது. ஆனால் ஆங்கிலத்தில் தேர்வு எழுத வேண்டும்) பின்னர் புதுக்கல்லூரியில் சேர்ந்து பி.ஏ. பட்டமும், சென்னை மாநிலக் கல்லூரியில் பயின்று பி.ஏ. ஹானர்ஸ் பட்டமும் பெற்றார். தனது கல்வி குறித்து தமிழ்நாடு முஸ்லிம் கல்வி மாநாடு 1973 சிறப்பு மலரில் ‘சில நினைவுகள்’ என்ற தலைப்பில் அவர் எழுதியுள்ள கட்டுரையிலிருந்து சில சுவையான பகுதிகளை கீழே தந்துளேன்.
என்னுடைய கல்லூரிப் படிப்பை ஒரு விதத்தில் முதியோர் கல்வித் திட்டத்திற்கு ஒப்பிடலாம். ஏனெனில் 13 ஆண்டுகள் பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டு மீண்டும் கல்லூரியில் சேர்ந்து படித்தவன் நான்.
ஆரம்பப் படிப்பு திருச்சி மஜ்லிஸுல் உலமா பள்ளிக்கூடத்தில் தொடங்கியது. காரைக்கால் முஸ்லிம் வித்தியா சங்க கலாசாலையில் நடுநிலைப் படிப்பு முடிந்தது. ஆங்கிலத்தைப் போதனாமொழியாக அந்த நாளிலே கொண்டிருந்த கலாசாலை அது. அன்றிருந்த நிர்வாகிகள் அதை ஒரு ‘மெட்ரிகுலேஷன் ஸ்கூல்’ ஆக ஆக்க முயன்றார்கள். நான் ஏழாவது படித்துக் கொண்டிருக்கும்போது எட்டாவதுவரை சொல்லிக் கொடுத்தார்கள்.
நான் எட்டாம் வகுப்புக்குத் தேறியவுடன் அந்தக் கலாசாலையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக – ஒன்பதாம் வகுப்பும் ஆரம்பிப்பதற்குப் பதிலாக – இருந்த எட்டாம் வகுப்பும் ரத்தாகி விட்டது. அப்பொழுது 1937ஆம் ஆண்டு. அந்த நாளில் காரைக்காலில் பிரெஞ்சு மொழிப் பள்ளியன்றி வேறு எந்த உயர்நிலைப் பள்ளியும் இல்லை. அடுத்திருந்த நாகப்பட்டினத்திலும் பொறையாறிலும் தான் இருந்தது. அடுத்திருந்த ஊருக்கு பஸ்ஸில் சென்று படிக்க எங்கள் பொருளாதார நிலை இடம் தரவில்லை!
எனவே, உயர்நிலைப் பள்ளியில் கூட இடம் பெறாமல் என் படிப்புக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது.
என் தந்தையார் அல்லாமா ஆ.கா. அப்துல் ஹமீது பாகவி அவர்கள் திருக்குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு வேலையை 1942ஆம் ஆண்டில் காரைக்காலில் தொடங்கினார்கள். ஆறாண்டுகாலம் அதை மொழிபெயர்க்கும் வேலையும் அதற்குப்பின் அதை வேலூர் பாக்கியாதுஸ் ஸாலிஹாத் மத்ரஸாவில் சரிபார்க்கும் வேலையும் நடந்தது.
திருக்குர்ஆன் மொழி பெயர்ப்பை அச்சிட்டு முடித்தபின் என் படிப்பைத் தொடர வேண்டுமென்ற ஆசை எழுந்தது. என் தந்தையவர்களும் என்னை ஊக்குவித்தார்கள்.
ஏக்கமும் வேதனையும்:
தனியே படித்து சென்னை பல்கலைக் கழக ‘மெட்ரிக்’ எழுதி முதல் வகுப்பில் தேறினேன். 1950ஆம் ஆண்டு புதுக் கல்லூரி துவக்க விழாஉரையை அன்று இந்திய அரசின் உள்துறை அமைச்சராக இருந்த ராஜாஜி ஆற்றினார். ஏற்கனவே நான் தொடர்பு கொண்டுள்ளதும் என்னுடன் நெருங்கிய தோழமை கொண்டுள்ளவர்களால் நிர்வகிக்கப் படுவதுமான புதுக் கல்லூரியில் நாம் சேர்ந்து படிப்பதா என்ற கூச்ச உணர்ச்சி என் உள்ளத்தில் இருந்தது. எனவே அன்று சென்னையிலிருந்த அத்தனை கல்லூரிகளுக்கும் தாம்பரம் கிறிஸ்தவக் கல்லூரி உட்பட இண்டர்மீடியட் வகுப்பில் படிக்க விண்ணப்பித்தேன்.
அத்தனை கல்லூரிகளிலிருந்தும் ‘மெட்ரிக்கில் முதல் வகுப்பில் தேறிய எனக்கு இடம் தர முடியாமைக்கு வருந்துவதாகக் கடிதம் வந்தது.
பச்சையப்பன் கல்லூரி டிரஸ்டிகளில் ஒருவரும் என்மீது அன்பு கொண்டிருந்தவருமாகிய திருவொற்றியூர் ஷண்முகம் அவர்கள் சிபாரிசில் பச்சையப்பன் கல்லூரியில் பயில எனக்கு ‘ஸீட்’ கிடைத்தது. என் பெயரைப் பட்டியலிலும் போட்டுவிட்டார்கள். எனக்கும் அங்கு படித்துத் தமிழறிவை வளர்த்துக்கொள்ள வேண்டுமென்ற ஆசை இருந்தது.
ஏனெனில் இன்றைய மதுரைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் டாக்டர் மு.வரதராசனார், பேராசிரியர் அ.மு. பரமசிவானந்தம், இன்றைய பொதுநலத் துறை அமைச்சர் பேராசிரியர் அன்பழகனார், பேராசிரியர் அன்பு பணபதி ஆகியோர் தமிழ்த் துறையில் அப்போது சேவையாற்றி வந்தனர். இவர்கள் அனைவரும் நல்லன்புடைய நண்பர்களாகவும் அன்றே விளங்கினர்.
ஆனாலும் பிரின்ஸிபல் திரு.கிருஷ்ணமூர்த்தி முன்னர் நான் சென்று நின்றதும், எந்தக் காரணம் கொண்டும் என்னைக் கல்லூரியில் சேர்த்துக் கொள்ள முடியாது என மறுத்துவிட்டார்.
அதன் மர்மம் இன்றும் எனக்குப் புரியவில்லை. என்னுடைய ‘தாடி’ யைக் கண்டு அவர் மிரண்டிருப்பாரோ என்ற ஓர் ஐயம் எனக்கு இருந்தது. அந்த நாளில் இன்றைய கல்வி அமைச்சர் நாவலர் நெருஞ்செழியனும் தாடி வைத்திருந்தார். அவருடைய சுயமரியாதைப் பிரச்சாரம் திரு. கிருஷ்ணமூர்த்தி போன்றோருக்கு அச்சத்தை விளைவித்துக் கொண்டிருந்த காலம் அது.
என்னையும் அந்தப் பரம்பரையில் வைத்துக் கணக்கிட்டாரோ என்னவோ, எனக்குத் தெரியாது. ஆனாலும் தகுதி பெற்ற இஸ்லாமிய இளைஞன் ஒருவனுக்கு, டிரஸ்டிகளில் ஒருவர் சிபாரிசு செய்தும், பேராசிரியர்கள் மாணவரின் ஒழுக்கத்துக்கு ஈடு நிற்பதாக வாக்களித்தும் இடம் மறுக்கப்பட்டது வகுப்புவாதத்தின் அடிப்படையில் இருக்குமோ என்று ஒரு கணம் என் நெஞ்சத்தில் வேதனை எழுந்ததுண்டு. அதே நேரத்தில் என்னைப் போல் தகுதி பெற்ற எத்தனை இஸ்லாமிய இளைஞர்களுக்கு இந்தக் கதியோ என்ற ஏக்கமும் என்னுள் எழுந்தது.
எல்லாம் புதியது:
அந்த நேரத்தில்தான் ‘என்னிடம் வா’ எனப் புதுக்கல்லூரி என்னை விரும்பி அழைத்தது. அன்று அந்தப் புதிய கல்லூரியின் மொத்த மாணவர்கள் எண்ணிக்கை 200 தான். (இன்று பேராசிரியர்கள் அந்த எண்ணிக்கையிலிருக்கின்றனர்.) அப்போது பேராசிரியர் பிராங்கோ முதல்வராக இருந்தார். பெருமதிப்புக்குரிய மர்ஹும் எம்.எஸ்.ஏ.மஜீத் சாஹிப் கல்லூரி செயலாளராக இருந்தார்.
முதல் நாள் ஒரே பரபரப்பு! மாணவர்களும் புதியவர்கள்; ஆசிரியர்களும் புதியவர்கள்; கல்லூரியும் புதியது. யார் மாணவர் யார் ஆசிரியர் என்று பிரித்துத் தெரிந்து கொள்ளாத காலம். வகுப்பில் நான் நுழைந்தேன். நான்தான் பேராசிரியரென்று எண்ணிய மாணவர்கள் எழுந்து நின்றனர்.
தாடிக்குக் கிடைத்த மரியாதை அது. நான் அமைதியாகக் கடைசி வரிசைக்குச் சென்று அமர்ந்தேன். ஒரே சிரிப்பு.
அந்த நேரத்தில் ஒருவர் நுழைந்தார் அவரின் குள்ள உருவத்தை வைத்து அவரும் மாணவராக இருக்குமென்ற எண்ணத்தில் அனைவரும் அமர்ந்திருந்தனர். வந்தவர் மேஜையைத் தட்டி, தான் வரலாற்றுப் பேராசிரியர் மிர்ஸா அப்துல் மாஜித் என அறிமுகப் படுத்திக் கொண்டார்.
பிறகு தான் மாணவர்கள் எழுந்து மரியாதை செலுத்தினர்.(மிர்ஸா ஸாஹிப் இன்று வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியின் முதல்வராகச் சேவையாற்றுகிறார்)
பெருமை சேர்க்கும் சிறு பணி:
மாணவர்கள் பேரவையின் தலைவனாக என்னை ஏகமனதாகத் தேர்ந்தெடுத்தனர். அதன் பிறகு நான் வகுப்பறையில் இருந்த நேரத்தைவிட பிரின்ஸிபல் அல்லது செக்ரடரி ஸாஹிப் அறையில்தான் பெரும் பகுதியை செலவழிக்க நேர்ந்தது.
இருவருமே என்னை மாணவன் என்ற முறையில் அன்றி ஒரு ஆலோசகர் என்ற முறையில் கவுரவப்படுத்திய பெருந்தன்மையை நான் என்றும் மறக்க முடியாது.
புதுக் கல்லூரியைத் தவிர வேறு எந்தக் கல்லூரியில் பயின்றிருந்தாலும் என்னுடைய பல்துறை சேவை ஆர்வத்திற்கு இங்கு கிடைத்தது போன்ற பேராதரவு கிடைத்திருக்குமென்று சொல்ல முடியாது. மாணவனாக இருக்கும் போதே புதுக்கல்லூரிக்கு பெருமை சேர்க்கும் சிறு பணியை என்னால் ஆற்றமுடிந்தது.
கல்லூரிப் பேச்சுப் போட்டிகளில் பங்கு கொண்டேன். சென்னையிலுள்ள 26 கல்லூரிகளில் முதல் பரிசு பெற்றேன். இரண்டு ஆண்டுகளில் பல்கலைக் கழகத்தின் சிறந்த பேச்சாளன் என்ற சான்றிதழ் பெற்றேன். நான் பெற்ற ‘கப்’ களையும் மெடல்களையும் வைப்பதற்கென்றே தனியே கண்ணாடி பீரோ செய்யக் கட்டளையிட்டார் பிரின்ஸிபல் ஃபிராங்கோ.
அப்போதெல்லாம் புதுக் கல்லூரியின் பெயர் கல்லூரிகள் வட்டாரத்தில் பரவாத காலம். எனவே பேச்சுப் போட்டியில் நான் தொடர்ந்து பெற்ற வெற்றிகள் புதுக்கல்லூரிக்கும் என் சகமாணவர்கள் அனைவருக்குமே பெருமையைத் தேடித்தந்தன.
இத்தகைய பேச்சுப் போட்டிகளில் ஒன்று பச்சையப்பன் கல்லூரியில் ஒருமுறை நடந்தது.
‘இந்தி ஆதிக்கம்?’ என்பது தலைப்பு கல்லூரியின் ‘டீம்’ கப்பும், பிரின்ஸிபலின் முதல் பரிசும் எனக்குக் கிடைத்தன. அதை வழங்கியவர் எனக்கு இடமளிக்கவே முடியாது என்று மறுத்துவிட்ட பச்சையப்பன் கல்லூரி பிரின்ஸிபல் திரு.கிருஷ்ணமூர்த்தி அதை என்னிடத்தில் வழங்கியபோது அவர்பட்ட வேதனை எனக்கு இடம் மறுக்கப்பட்டபோது நான் அடைந்த வேதனையைவிட அதிகமாக இருக்கக் கண்டேன்.
(ஆனால் அதற்குப் பிறகு நாங்கள் நல்ல நண்பர்களாகிவிட்டோம். சென்னை பல்கலைக் கழக செனெட்டில் அவருடன் நானும் உறுப்பினனாக இருந்தேன்)
இண்டர்மீடியட் வகுப்பிலும் புதுக்கல்லூரி மாணவர்கள் (first Batch) 5 பேர் முதல் வகுப்பில் தேறினர். அதில் சரித்திரப் பாடத்தில் முதல் வகுப்பில் தேறிய பெருமை எனக்குக் கிடைத்தது. பிறகு மாநிலக் கல்லூரியில் இஸ்லாமியப் பிரிவில் ஹானர்ஸ் படித்துத் தேறினேன்.
திருக்குர்ஆன் மொழி பெயர்ப்பு :
அவர் பள்ளிப் படிப்பைத் தொடராது இருந்த காலகட்டத்தில் திருக்குர்ஆனைத் தமிழில் மொழி பெயர்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த தனது தந்தையார் ஆ.கா. அப்துல் ஹமீது பாகவிக்கு பெரிதும் துணையாக இருந்தார்.
தந்தையார் எழுதிய கையெழுத்துப் பிரதிகளை ஒப்பிட்டுச் சரிபார்ப்பது, வேலூர் பாக்கியத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரி பேராசிரியர்களிடம் அதனை எடுத்துச் சென்று காட்டி சரி பார்ப்பது, திரும்பக் கொண்டு வருவது ஆகிய பணிகளில் ஈடுபட்டார்.
திருக்குர்ஆன் தமிழாக்கத்தின் முதல் பாகத்தை அவரது தந்தையார் எழுதி முடித்தவுடன், அந்தப் பிரதிகளை எடுத்துக் கொண்டு தமிழ்நாடு முழுவதும் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டு அதனை மக்களிடையே விற்பனை செய்தார். இந்த விற்பனையின் மூலம் கிடைத்த தொகையைக் கொண்டுதான் திருக்குர்ஆன் தமிழாக்கத்தின் இரண்டாவது பாகத்தை அச்சிட முடிந்தது என அவர் தான் எழுதியுள்ள ‘சோதனைகளை வென்ற சாதனையாளர்’ என்ற கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பணியில் புலவர் மணி, திருப்பத்தூர் நூர் முகம்மது சாகிப், மறுமலர்ச்சி ஏ.எம்.யூசுப் சாகிப், ரவணசமுத்திரம் எம்.எம்.பீர்முகம்மது சாகிப், துபாஸ் சி.எம். தாஜுத்தீன் சாகிப் ஆகியோர் தனக்கு மிகுந்த ஒத்துழைப்பு அளித்ததாக அவர் அந்தக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தனது இளமைக்காலத்தில் தந்தையார் மேற்கொண்டிருந்த ஒரு அரிய பணிக்கு உற்ற துணையாக நின்று செயல்பட்டது வேறு யாரும் பெறாத பெரும்பேறாகும்.
முஸ்லிம் லீகில்:
பள்ளிப் பருவத்திலேயே அவர் முஸ்லிம் லீகின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். மறுமலர்ச்சி ஆசிரியர் ஏ.எம்.யூசுப் சாகிப், வடகரை எம்.எம். பக்கர் சாகிப், கலைமாமணி எஸ்.எம். உமர் ஆகியோர் காரைக்காலில் இவரது இளமைக் கால நண்பர்கள் இவர்கள் அனைவரும் முஸ்லிம் லீகில் இணைந்து பணியாற்றினர்.
1941 ஆம் ஆண்டு திருச்சி காந்தி மார்க்கெட்டில் நடைபெற்ற முஸ்லிம்லீக் கூட்டத்திற்கு பதினான்கு வயதே நிரம்பியிருந்த ஸமது சாகிப் தனது நண்பர் ஏ.எம்.யூசுபுடன் சென்றிருந்தார். அந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்த தலைவர்களிடம் பேசுவதற்கு வாய்ப்புக் கேட்டு அதில் சிறிது நேரம் உரையாற்றினார். இதுவே அவரது முதல்உரையாகும்.
அவரது தந்தையார் குர்ஆன் மொழி பெயர்ப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது அதன் கையெழுத்துப் பிரதிகளை காயிதே மில்லத் அவர்களிடம் அவ்வப்போது எடுத்துக் கொண்டு போய்க் கொடுத்து, அவர் படித்த பிறகு அதனைத் தனது தந்தையிடம் திருப்பிச் சேர்க்கின்ற பணியையும் அவர் செய்து வந்தார்.
இதன் காரணமாக இளம் வயதிலேயே அவருக்கு காயிதேமில்லத் அவர்களுடன் நல்ல அறிமுகம் ஏற்பட்டது. அப்துல் ஹமீத் கான் பாகவியின் புதல்வர் என்ற காரணத்தால் அவர் மீது காயிதேமில்லத்தும் மிகுந்த அன்பும் பாசமும் கொண்டிருந்தார்.
நாடு விடுதலை பெற்ற பிறகு முஸ்லிம் லீக், இந்திய யூனியன் முஸ்லிம்லீக் என்ற புதிய பெயருடன் செயல்படத் தொடங்கியபோது, ஸமது சாகிபும் லீகின் ஒரு சாதாரண ஊழியராக தனது பணிகளைத் தொடர்ந்தார். சென்னை
மாநகரம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு லீகிற்கு புதிய உறுப்பினர்களைச் சேர்ந்தார். புதிய பிரைமரிகள் உருவாகிடப் பாடுபட்டார். சென்னைப் புதுக் கல்லூரியிலும், மாநிலக் கல்லூரியிலும் பயின்ற கால கட்டங்களிலும் தொடர்ந்து கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். கட்சிக் கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
1959 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சிக்கு நடந்த தேர்தலின் போது மண்ணடி வட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 1963ஆம் ஆண்டு வரை அந்தப் பதவியில் இருந்தார். அப்போது சென்னை பொது மருத்துவமனையின் ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் பதவி வகித்தார். மாநகராட்சி உறுப்பினராக
இருந்தபோது ஆற்றிய சிறப்பான பணிகள் காரணமாக சென்னை வாழ் முஸ்லிம்களிடையே அவர் நன்கு அறிமுகமானார்.
1958ஆம் ஆண்டு ஜனவரி 10,11 தேதிகளில் முஸ்லிம் லீக் ஊழியர் மாநாடு திருச்சியில் காயிதேமில்லத் தலைமையில் சீரும் சிறப்புமாக நடைபெற்றது. இம் மாநாட்டில் ஸமது சாகிப் கலந்து கொண்டு எழுச்சியுரையாற்றினார். இம்மாநாட்டிற்குப் பின் சென்னை மாவட்ட முஸ்லிம் லீக் தலைவராக அவர் நியமிக்கப்பட்டார். அதே ஆண்டு செப்டம்பர் 21ம் நாள் அய்யம்பேட்டையில் நடைபெற்ற தஞ்சாவூர் மாவட்ட முஸ்லிம் லீக் ஊழியர் மாநாட்டிற்குத் தலைமை தாங்கி அதனை வெற்றிகரமாக நடத்தினார்.
தமிழகமெங்கும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு முஸ்லிம் லீக் பொதுக்கூட்டங்களிலும், மீலாது கூட்டங்களிலும், மதரஸா பட்டமளிப்பு விழாக்களிலும் உரையாற்றினார். அவரது உரை கேட்க கட்சித் தொண்டர்கள் மட்டுமின்றி அனைத்துத் தரப்பினரும் வெள்ளமெனத் திரண்டு வந்தனர்.
1959 ஆம் ஆண்டு காயிதேமில்லத்தும் தி.மு.க வின் அன்றையப் பொதுச் செயலாளர் பேரறிஞர் அண்ணாவும் சந்தித்து உரையாடிட ஏற்பாடு செய்தார். இந்த சந்திப்பே 1962ஆம் ஆண்டு நடைபெற்ற
பொதுத்தேர்தலின் போது தி.மு.க – முஸ்லிம் லீக் கூட்டணி ஏற்பட வழிகோலியது.
1960ஆம் ஆண்டு செப்டம்பர் 17,18 தேதிகளில் சென்னையில் நடைபெற்ற முஸ்லிம்லீக் மாநில மாநாட்டின் வெற்றிக்காக அவர் பெரிதும் உழைத்தார். 1968ஆம் ஆண்டு கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாக மறுமலர்ச்சி ஆசிரியர் ஏ.எம்.யூசுப், உள்ளிட்ட ஏழு தலைவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டபோது கட்சி பெரும் நெருக்கடியைச் சந்தித்தது. அந்தக் காலகட்டத்தில் தலைமைக்கு விசுவாசமாக இருந்து கட்சிக்கு ஏற்படவிருந்த சரிவினைத் தடுத்தார். எப்போதும் அவர் காயிதேமில்லத்தின் ஆணைக்கு கட்டுப்பட்டு நடந்து வந்தார்.
காயிதேமில்லத்தின் மறைவிற்குப் பின்னர் (5.4.1972) இவர் தான் மாநில முஸ்லிம் லீகின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் ஒரு சமரச ஏற்பாடாக திருச்சி கே.எஸ்.அப்துல் வஹாப் ஜானி எம்.எல்.சி, மாநிலத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலத்தலைவர் ஜானி சாகிப்பிற்கு அவர் தனது முழு ஒத்துழைப்பையும் வழங்கி கட்சிப் பணிகள் தொய்வின்றி நடந்திட துணை நின்றார்.
எனினும் உடல் நிலை காரணமாக கே.எஸ். அப்துல் வகாப் ஜானி மாநிலத் தலைவர் பதவியிலிருந்து விலகிய பிறகு ஸமது சாகிப் மாநிலத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 14.2.1975முதல் 11.4.1999 வரை (அவர் மரணிக்கும் வரை) மாநிலத் தலைவர் பொறுப்பில் இருந்தார்.
இவரது தலைமையின் கீழ் கட்சி உயிர்த்துடிப்புடன் செயல்பட்டு வந்தது. 7.2.1994 அன்று டெல்லியில் நடைபெற்ற கட்சியின் அகில இந்தியச் செயற்குழுக் கூட்டத்தில் ஸமது சாகிப் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மாநிலங்களவை உறுப்பினர்:
1964ம் ஆண்டும், 1970ஆம் ஆண்டும் மாநிலங்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் தி.மு.க ஆதரவுடன் முஸ்லிம் லீக் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து 12 ஆண்டுகள் அவர் அந்த அவையின் உறுப்பினராக இருந்தார். அவர் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தபோது அவரையும் சேர்த்து அங்கு நான்கு முஸ்லிம்லீக் உறுப்பினர்கள் இருந்தனர். அந்த நால்வர் குழுவுக்குத் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டு
சிறப்பான முறையில் செயல்பட்டார்.
சந்தித்த தேர்தல்கள்:
ஸமது சாகிப் முதன் முறையாக 1977ஆம் ஆண்டு வேலூர் பாராளுமன்றத் தொகுதியில் (அதிமுக கூட்டணியில்) முஸ்லிம் லீக் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். பின்னர் 1980 ஆம் ஆண்டு பாராளுமன்றத்திற்கு நடைபெற்ற பொதுத் தேர்தலிலும் 1989ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்
தேர்தலிலும் அதே வேலூர் பாராளுமன்றத் தொகுதியில் முஸ்லிம் லீக் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். (1980 தி.மு.க கூட்டணி – 1989 – அதிமுக கூட்டணி) பாராளுமன்ற உறுப்பினராக கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றினார்.
1991 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் மயிலாடுதுறைப் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். (பா.ம.க கூட்டணி)
1984ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் சென்னை திருவல்லிக்கேணி தொகுதியில் முஸ்லிம்லீக் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்று 1984 வரை பதவி வகித்தார். (தி.மு.க கூட்டணி) எனினும் 1989ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலின் போது அவர் வாணியம்பாடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். (காங்கிரஸ் கூட்டணி)
மாநிலங்களவை உறுப்பினராகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்த போது, முஸ்லிம்களின் உரிமைகள்
மற்றும் நலன்கள் சார்ந்த பல்வேறு பிரச்னைகளுக்காக அவர் அந்த அவைகளில் உரையாற்றியுள்ளார்.
குறிப்பாக ஷரீஅத் சட்டப் பாதுகாப்பு, அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தின் சிறுபான்மை அந்தஸ்து நீடிப்பு, வகுப்புக் கலவரங்கள் ஆகிய பிரச்னைகளில் சமுதாயத்தின் நிலைப்பாட்டைத் தெளிவாக எடுத்துரைத்தார். தபால் தலை சேகரிப்பு ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக அவர் பொறுப்பு வகித்தபோது மாவீரர் திப்பு சுல்தானுக்கு நினைவு அஞ்சல் தலை வெளியிட வேண்டுமென்று அரசிற்குப் பரிந்துரை செய்தார். அவரது பரிந்துரையை ஏற்ற
மத்திய அரசு 15.6.1974 அன்று 50 பைசா விலையில் திப்புசுல்தான் நினைவு தபால்தலையை வெளியிட்டது.
வேலூர் பாராளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய போது இந்து சமய மக்களின் பிரச்னைகளுக்காகவும் குரல் கொடுத்தார். வேலூர் கோட்டையிலிருக்கும் ஜலகண்டேஸ்வரர் ஆலயம் பக்தர்களின் வழிபாட்டிற்குத் திறந்து விடப்படாமல் தொல்பொருள் துறையினரால் பூட்டி வைக்கப்பட்டிருந்தது.
பராமரிப்பின்றி அது பாழடைந்த நிலையிலிருந்தது. வேலூர் நகரைச் சார்ந்த இந்து சமய அமைப்புகள் அக் கோவிலை வழிபாட்டுக்குத் திறந்துவிட வேண்டுமென அவரிடம் கோரிக்கை வைத்தனர். எனவே அவர் பாராளுமன்றத்தில் இது குறித்து வலியுறுத்திப் பேசினார். அவரது கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு கோயிலைத் திறந்து விட தொல் பொருள் துறைக்கு உத்தரவிட்டது. ஸமது சாகிபின் இந்த முயற்சிக்கு குமுதம் வார ஏடு பாராட்டுத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினராகயிருந்த போது மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் குளம் தூர் வாரப்பட வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைத்தார். அப்போதிருந்த எம்.ஜி.ஆர் அரசு அவரின் கோரிக்கையை ஏற்று அக் கோயில்குளம் தூர் வாரப்பட உத்தரவிட்டது. இதனைப் பாராட்டி கல்கி வார இதழ்
அப்போது தலையங்கம் தீட்டியிருந்தது.
தேனாம் பேட்டையில் அவர் சமய நல்லிணக்க மாநாட்டை நடத்தினார். இதில் ஸ்ரீபெரும்புதூர் மடாதிபதி ஜீயர் சுவாமிகள், ஜெயின் மடாதிபதி, பௌத்த சமயத் தலைவர், எழுத்தாளர் வலம்புரி ஜான், தாழ்த்தப்பட்டோர் இயக்கத்தைச் சார்ந்த டாக்டர் சேப்பன், காங்கிரஸ் தலைவர் பழனியாண்டி ஆகியோர் கலந்து கொண்டு சமய நல்லிணகத்தை வலியுறுத்தி உரையாற்றினர்.
1980-1984 ஆண்டுகளில் தமிழக சட்டமன்ற உறுப்பினராகயிருந்த போது அவர் பல்வேறு மானியக் கோரிக்கைகளில் கலந்து கொண்டு உரையாற்றினார். முஸ்லிம்களுக்குக் கல்வியிலும் வேலைவாய்ப்புகளிலும் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டுமென அரசை வலியுறுத்தினார். ஒவ்வொரு முறை அவர் சட்டமன்றத்தில்
உரையாற்றிய போதும் அதனை அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்களும், பிறஉறுப்பினர்களும் பாராட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மொத்தத்தில் அந்த சட்டமன்றத்தின் மதிப்புறு உறுப்பினராக அவர் திகழ்ந்தார். அவரது சட்டமன்றப் பணிகள் அனைத்துத் தரப்பினராலும் பாராட்டப்பட்டது.
தொடர்ச்சி அடுத்த இதழில்….
கட்டுரையாளருடன் தொடர்பு கொள்ள ….
99767 35561, 93601 89931