உலகத்துடன் ஓர் உரையாடல்

உலகை விட்டும் வெருண்டோடுவதற்காக நான் ஓரிடத்தில் இருந்து இன்னோர் இடத்திற்கு சென்று பார்த்தேன். உலகை விட்டும் தூரமாக எவ்வளவோ முயற்சி செய்தேன். ஆனாலும் என்னால் முடியவில்லை.

எனது தொழிலை மாற்றினேன். எனது வீட்டை மாற்றினேன். நான் வாழும் சமூகத்தை மாற்றினேன். நான் வாழும் நாட்டை மாற்றினேன். என் வாழ்வில் அனைத்தையும் மாற்றிப் பார்த்தேன். என்றாலும், உலகமோ இன்னும் என் உள்ளத்தில் குடி கொண்டிருக்கிறது. காலம் மாறினாலும், இடம் மாறினாலும் இவ்வுலகின் பண்புகளும், அடையாளங்களும் மாறவே மாறாது என்பது எனக்கு இப்போது தெளிவாகிறது. உலகம் உலகமாகவே தான் இருக்கிறது.

உலகம் என் கண்களுக்கு முன்னால் தோன்றினால் அதனுடன் போராடி, உலகை விட்டும் முற்று முழுதாக விடுபட்டு, அதனை உள்ளத்தை விட்டும் அகற்றி விடுவதே என் பேரவாவாகும்.

ஒரு தடவை நான் தனிமையில் இருக்கும் போது உலகம் என் கண்களுக்கு முன்னால் காட்சி தந்தது. தொடர்ந்து எனக்கும், உலகத்துக்கும் இடையே ஓர் உரையாடலே இடம்பெற்று விட்டது.

உலகம் : அல்லாஹ்வின் அடிமையே, உனக்கு என்ன வேண்டும்? இதோ நான் உன் முன்னே இருக்கிறேன்.

நான் : உன்னை விரும்புவது எனக்கு மிகவும் கவலையளிக்கிறது. ஆனாலும், உன்னை விட்டுவிட என்னால் முடியவே முடியாது என்று வருத்தத்துடன் கூறினேன்.

உலகம் : இது ஒரு சாதாரண விடயமே. யார் என்னை விரும்புவதில்லை என்று சொல்லி வாதிடுகிறாரோ, நிச்சயமாக அவர் ஒரு பொய்யன். நானும் அல்லாஹ்வின் படைப்பினங்களில் ஒன்றாகும். பிறரும் என்னை விரும்பவே செய்கின்றனர்.

நான் : இது ஒரு சாதாரண விடயம் என்று நீ எப்படி கூறுவாய்?

உலகம் : ஆம், அது ஒரு சாதாரண விடயம் தான், இயல்பிலேயே ஏற்படும் உணர்வு தான். ஆனாலும், பெரும்பாலான மக்கள் செய்யும் தவறு என்னவெனில் என்னை மறுமையை விட முற்படுத்துவதாகும்.

நான் : நானும் அந்தக் கூட்டத்தினரில் ஒருவனா?

உலகம் : ஆம், என்றாலும் உன்னில் நல்ல பண்புகள் இருக்கின்றன.

நான் : அப்படியெனில், உனது யதார்த்தத்தை பற்றி நான் எப்படி அறிந்து கொள்ள முடியும்?

உலகம் : நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : “உலகம் இனிமையானதும், பசுமையானதுமாகும்” (தபரானீ), நபி (ஸல்) அவர்கள் நான் இனிமையாவன் என்றும், பசுமையானவன் என்றும் என்னை வர்ணித்துள்ளார்கள். ஆனாலும், ஓர் இறை விசுவாசியை பொறுத்தவரை அவனுக்கு நான் ஒரு சிறைச்சாலையைப் போன்றவன். நபி (ஸல்) அவர்களும் இதனை பின்வருமாறு கூறியுள்ளார்கள் : “உலகம் இறை விசுவாசிக்கு சிறைச்சாலையைப் போன்றதாகும், இறை நிராகரிப்பாளனுக்கு சுவனத்தை போன்றதாகும்” (அஹ்மத்).

நான் : ஆனாலும், இறை விசுவாசிகளிலும் கூட சிலர் பற்பல அருள்களோடு வசதியாக வாழ்கிறார்களே? அது பற்றி நீ என்ன கூறுகிறாய்?

உலகம் : இல்லை. இங்கு சிறைக்கூடம் என்பது நீ நினைப்பது போன்று இரும்பினாலானதன்று. மாறாக, அல்லாஹ் விதித்துள்ள வரையறைகளும், கட்டுப்பாடுகளும் ஆகும்.

இது பற்றி இமாம் முஹம்மத் இப்னுஸ் ஸம்மாக் (ரஹ்) அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள் :

“ஆதமின் மகனே, நீ பிறந்தது முதல் ஏதோ ஒரு வகையில் சிறைப்பட்டவனாகவே இருக்கிறாய். நீ முதலில் முள்ளந்தண்டுகளுக்கு மத்தியில் சிறைப்படுத்தப்பட்டிருந்தாய். பிறகு கருவறையில், பிறகு குழந்தையை போர்த்தி வைக்கும் புடவையில், பிறகு அலுவலகத்தில், பிறகு உனது குடும்பத்துக்காக உழைத்து சம்பாதிப்பதில் என்று ஒரு வட்டத்திற்குள் சிக்குண்டவனாகவே இருக்கின்றாய். எனவே, மரணத்திற்குப் பின்னரேனும் எவருக்கும் சிறைப்படாமல் சுதந்திரமாக வாழ அல்லாஹ்விடம் கையேந்தி பிரார்த்தனை செய்…” (இமாம் இப்னுல் ஜவ்ஸி)

நான் : இது எவ்வளவு அழகான வர்ணனை! இப்போது எனக்கு புரிந்து விட்டது. என்றாலும், ஏன் உனக்கு உலகம் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது?

உலகம் : எனது பெயருக்கான அர்த்தத்தை மக்கள் அறிந்திருந்தால் என் அலங்காரத்தில் ஒரு போதும் மயங்க மாட்டார்கள். எனது பெயருக்கு இரண்டு கருத்துக்கள் உள்ளன.

முதலாவது – விரைவில் அழியக் கூடியது.

இரண்டாவது – மறுமையுடன் ஒப்பிடுகையில் மிகவும் அசிங்கமானது.

நான் : அப்படியெனில், உனது அலங்காரத்தில் மயங்காமல் இருப்பதற்கு நான் உன்னுடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்?

உலகம் : இது மிக முக்கியமான ஒரு கேள்வியாகும். நீ எனது ஒருசில இரகசியங்களை சொல்ல வைக்கிறாயே. பரவாயில்லை. நான் பல விதங்களில் மனிதர்களை வேட்டையாடுகின்றேன். சில போது பணத்தைக் கொண்டு, சில போது பெண்களைக் கொண்டு, இன்னும் சில சந்தர்ப்பங்களில் பட்டம், பதவிகளைக் கொண்டு மனிதர்களுடன் நான் விளையாடுகின்றேன். இவை அனைத்தும் எனது அலங்காரங்களாகும். அவ்வாறே இவை அனைத்தும் தற்காலிகமானவையாகும். உதாரணமாக, திருமண நாளன்று இருக்கும் மணமகன் மற்றும் மணமகளின் அழகு தொடர்ந்தும் இருப்பதை நீ கண்டதுண்டா?

நான் : உலகமே நான் கேட்ட கேள்விக்கு பதில் கூறு. உன்னில் மயங்காமல் எப்படி உன்னோடு நடந்து கொள்ள வேண்டும் என்று கடும் தொனியில் கேட்டேன்.

உலகம் : ஏய் நண்பா என்ன? அவசரப்படாதே, கொஞ்சம் பொறுமையாக இரு. என்று கூறிவிட்டு…

பின்னர் பின்வருமாறு கூறியது :

என்னோடு பழகுபவர்கள் கைக்கொள்ள வேண்டிய இரண்டு அம்சங்கள் உள்ளன. ஒன்று எந்நேரமும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அடுத்து எந்நேரமும் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள வேண்டும்.

நான் இன்பங்களையும், இச்சைகளையும் கொண்டவன். யார் என்னை மறுமை வாழ்வுக்கான பாதையாக ஆக்கிக் கொண்டாரோ அவர் வெற்றியடைந்து விட்டார். யார் என்னை நிரந்தர தங்குமிடமாக ஆக்கிக் கொண்டாரோ அவர் நஷ்டமடைந்து விட்டார். நான் ஒரு சோதனைக் களமே ஒழிய இன்பங்களை தருபவன் கிடையாது.

நான் : அப்படியெனில், நான் உன்னை முழுமையாகவே துறந்து வாழ்வேன்.

உலகம் : நான் சொல்ல வரும் விடயம் இதுவல்ல. ஆனாலும், நீ என்னோடு எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும். இந்த உலகத்திலிருந்து உனக்கு ஒரு கதவு திறக்கப்படும்போதெல்லாம், நீ மறுமைக்கான ஒரு கதவைத் திறந்து கொள். எனவே, இவ்வுலகில் உனது பங்கை மறந்து விடாதே. அல்லாஹ் ஏவியுள்ள படி சமநிலை தவறாமல், நிதானமாக வாழ முயற்சி செய்.

நான் : என்றாலும் கூட எனக்குப் பயமாக இருக்கிறது.

உலகம் : பயப்படாதே நண்பா! என்னுடன், என் அலங்காரங்களுடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை புரிந்து கொள். அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் கூறியது போன்று மட்டும் இருந்து விடாதே.

நான் : இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் அப்படி என்ன கூறினார்கள்?

உலகம் : “உங்களில் எவரும் இரவில் ஒரு செத்த பிணத்தை போன்றும், பகலில் உழைத்து உழைத்து களைப்புற்ற ஒரு மிருகத்தை போன்றும் இருப்பதை நான் ஒரு போதும் விரும்ப மாட்டேன்”.  (மௌலானா கான்திஹ்லவி)

நண்பா! இது போன்ற சில மனிதர்களும் இருக்கின்றனர். உலக விவகாரங்களில் இரவு பகலாக மூழ்கிக் கிடக்கின்றனர். மறுமை பற்றிய எந்த கவலையுமின்றி இருக்கின்றனர்.

“ஏழைகளான ஆதமின் சந்ததியினர் வறுமையை அஞ்சுவது போன்று நரக நெருப்பையும் அஞ்சுவோரானால், அவர்கள் சுவனம் நுழைவர்” என்று ஒரு கூற்றும் இருப்பதை நினைவிற் கொள்.

நான் : நீ எனக்கு எதனை உபதேசிக்கிறாய்?

உலகம் : பின்வரும் அல் குர்ஆன் வசனத்தை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்.

“மேலும், இவ்வுலக வாழ்க்கைக்கு ஓர் உதாரணம், அவர்களுக்கு (நபியே!) நீர் கூறுவீராக! “அது நாம் வானத்திலிருந்து இறக்கி வைத்த நீரைப் போலிருக்கிறது. பூமியிலுள்ள தாவரங்கள் அதனுடன் கலந்து செழித்தன. ஆனால் அவை காய்ந்து, பதராகி அவற்றைக் காற்று அடித்துக் கொண்டு போய் விடுகிறது – மேலும், எல்லாப் பொருளின் மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவனாக இருக்கின்றான்”. (அல் கஹ்ப் : 45)

நீ ஒரு முறை என்னை எச்சரித்தால், இன்றிலிருந்து ஆயிரம் முறை என்னை எச்சரி.

நான் : நீ அனைத்தையும் வெளிப்படையாகவே சொன்ன பிறகு மீண்டும் என்னை உன்னில் மயங்க வைக்க மாட்டாய் என்று நம்புகிறேன்.

உலகம் : ஒரு சிலர் காகத்திடம், “ஏன் நீ சவர்க்காரத்தை திருடுகின்றாய்?” என்று வினவியதற்கு காகம், “குற்றம் செய்வது எனது இயல்பே…” என்று பதிலளித்ததாம். (இமாம் இப்ஷீஹீ)

எனவே, நண்பா… நான் உனக்கு சொல்வது என்னவென்றால், மனிதர்களை கவர்ந்து என்னில் மயங்க வைப்பது எனது இயல்பு. நீயோ இந்த உலகத்தை அளவுக்கதிகமாக நேசிப்பவனாக இருக்காதே.

மேலும், இரவு பகலாக உலக விவகாரங்களில் மூழ்கி விடாதே.

பின்னர் திடீரென உலகம் மறைந்து விட்டது.

நானோ உலகமே… உலகமே… என்று அழைத்தேன். எந்த மறுமொழியும் கிடைக்கவில்லை. பின்னர் தலையை தாழ்த்திக் கொண்டு அல்லாஹ்வை புகழ்ந்து பிரார்த்தித்தேன்.

“இவ் உலகின் யதார்த்தத்தை புரிய வைத்த அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தாகட்டும்”.

✍️ அரபு மூலம்கலாநிதி ஜாஸிம் அல் முதவ்வஃ

✍️ தமிழில்அஸீம் நிஸ்தார்