இஸ்லாமியர்கள் எதிர்கொள்ளும் சங்கடமும் – சவாலும் ?

வாழ்க்கை முறை, நேர்வழி, சமத்துவம் இவ்வாறான சத்திய வார்த்தைகளின் வரிசை நீண்டு கொண்டே போனாலும் இவை யாவற்றையும் ஒரே சொல்லால் வர்ணிக்க, பிரதிபலிக்க “இஸ்லாம்” என்ற ஒரு சொல்லே போதுமானது.

உலகம் உருண்டோடி கொண்டிருக்கும் போது மனிதனோ மதத்தை விட்டு விரண்டோடிக் கொண்டிருக்கிறான், மேலை நாடுகளில் மதத்தை குறித்தான தவறான அபிப்பிராயங்களும் மதத்தை எதிர்க்கும் போக்கும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

இதற்கான காரணம், மதத்தை தங்கள் சவுகரியத்திற்காக திரித்து தங்கள் விருப்பத்திற்காக சிலர் மாற்றிக் கொண்டனர். இதன் மூலம் மக்களை தங்கள் ஆதிக்கத்திற்கு கீழ் கொண்டு வந்து அடக்குமுறை செய்ததால் மேலை நாடுகளில் மட்டுமல்ல பல நாடுகளில் மதத்திற்கு எதிரான போக்கை உலகம் எதிர்கொண்டது.

மதம் என்பது சிலர் சிலரை கையகப்படுத்த பயன்படுத்தும் கருவி என்று ஐரோப்பியர்கள் நம்பினர். மிகவும் வெறுக்கப்பட்ட எதிர்சொல்லாக ‘மதம்’ எனும் சொல் மாறியது.

மக்களிடையே மதத்தை வெறுக்கும் போக்கு வளர்க்கப்பட்ட சூழலில் இன்னொருபுறம் உலகம் முழுவதும் விஞ்ஞானிகளுக்கும் மதவாதிகளுக்குமான விரிசல் நீடித்துக் கொண்டே இருந்தது.

ஆளும் வர்க்கத்தினர் மதவாதிகளாக இருந்த நிலையில், தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி எதிர்ப்பவர்களை அடக்கினர். பூமி தட்டையானது என்று கூறிய விஞ்ஞானிகளை திருச்சபை தூக்கிலிட்டது.

மதம் மனிதர்களின் சிந்தனை சுதந்திரத்தை சிதைப்பதாக விஞ்ஞானிகள் கடுமையாக எதிர்த்தனர் மதம் மனிதர்களை மேம்பட்ட மாற்றத்தின் பக்கம் அழைத்துச் செல்வதற்கு மாறாக மனிதர்களை பழமைவாதிகளாக மதங்கள் மாற்றுகின்றன என்றும் விஞ்ஞானிகள் குற்றம் சாட்டினர்.

மதத்திற்கு எதிரான இந்த சிந்தனை போக்கு உலகின் பொதுப் போக்காக, பொதுக் கருத்தாக மாறி பொது வாழ்க்கையில் இருந்து மதம் வேறாக பிரிக்கப்பட்டு விட்டது.

மதத்திற்கு எதிரான இந்த பார்வை இஸ்லாத்தின் மீதும் வைக்கப்பட்டது. வைக்கப்படுகிறது. இஸ்லாம் என்பது மதம் அல்ல அது மார்க்கம், அது ஒரு வாழ்வியல், அறிவியல் ஆய்வுக்கோ, விஞ்ஞான வளர்ச்சிக்கோ இஸ்லாம் தடைபோடவில்லை என்று கூறிக் கொண்டாலும் இஸ்லாமும் வன்மையாக எதிர்க்கப்படுகிறது.

இஸ்லாத்திற்கு எதிரான முஸ்லிம்களுக்கு எதிரான இந்த போக்கும், சிந்தனையும், பார்வையும் மதத்திற்கு எதிரான பார்வையில் இருந்து மட்டும் உருவானதல்ல.

இஸ்லாம் எதிர்க்கப்படுவதற்கு, இஸ்லாத்தின் கொள்கை, வழிகாட்டுதல், வரலாறு, வளர்ச்சி ஆகியவற்றை விரும்பாதவர்கள் மிகமுக்கியமான காரணம். இவர்களின் வழியாக இஸ்லாமும் அதன் வழிமுறைகளும் அதன் வரலாறும் பொது வெளியில் தவறாக முன்வைக்கப்பட்டு, பொது மக்களிடம் இஸ்லாத்திற்கு எதிரான மனநிலை உருவாக்கப்படுகிறது.

இந்தியாவிலும் இந்த நிலை இருக்கிறது. ஏனென்றால் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னர் இருந்த நிலை வேறு. இப்போது இருக்கும் நிலைமை வேறு. இந்தியா பாகிஸ்தான் பிரிவினை இஸ்லாமிய சமூகத்திற்கு கடுமையான நெருக்கடியை கொடுத்தது.

ஒரு நாட்டின் எண்ணிக்கையில் மதம், இனம், மொழி அடிப்படையில் அதிகமாக இருக்கும் மக்கள் தாங்கள் தான் பெரும்பான்மை என்று நினைத்து, அந்த நிலத்தில் வாழும் சிறுபான்மையினரின் உரிமைகளை மிதித்து விட்டு மேலே வருவது இந்தியாவிலும் நிகழ்ந்து வருகிறது.
இந்தியா பாகிஸ்தான் பிரிவின் போது பெரும்பாலும் முஸ்லிம்கள் அதாவது இந்தியாவின் வடக்கு மேற்கு மாகாணங்களில் வாழ்ந்தவர்கள் பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்தார்கள். இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்கள் சிறுபான்மை சமூகமாக ஆகிவிடும் என்பதை குறித்து எல்லாம் அவர்கள் சிந்திக்கவே இல்லை.
ஆங்கிலேயர்கள் இந்தியாவில் விதைத்து விட்டுச்சென்ற மதவாத வெறுப்பு, பிரிவினை உணர்வு வளர ஆரம்பித்து இப்போது பெருகி வருகின்றது.

சுதந்திர இந்தியாவின் ஆரம்பகால ஆட்சியாளர்கள் தேசநல விரும்பிகளாக இருந்ததால் நெருக்கடிகள் குறைவாக இருந்தன.

காலப் போக்கில் தங்கள் பலத்தை அதிகரித்துக் கொண்ட அதிகார மனம் படைத்த மதவாதிகள் இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்களின் மீதும் தங்களது வெறுப்பை பல மடங்காக பெருக்கி மக்களிடம் விதைத்து விட்டனர்.

ஒரு தனிமனிதனின் தவறுகளை ஒட்டுமொத்த சமூகத்தின் தவறாகவும் ஊதி பெரிதாக உருவாக்குகிறார்கள்.

கடந்த மாதம் சமூக நீதி முரசு இதழில் வெளியான ‘இந்தியாவில் மக்கள் ஏன் முஸ்லிம்களாக நடிக்கிறார்கள்? என்ற கட்டுரையில் அதன் ஆசிரியர் அதை தெளிவாக விளக்கியிருந்தார்.

அதில் சுருக்கமாக, ‘ஒரு குற்றம் தொடர்பாக ஒரு முஸ்லிமின் பெயர் வெளிவந்தால் அந்த நபர் ஏதாவது தவறு செய்திருக்க வேண்டும் என்று நம்புவதற்கு தயாராக இருக்கும் நிலமாகவே இந்தியர்களின் மனம் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் “முஸ்லிம் என்ற அடையாளம் சமூகத்திற்கு எதிராக விரோதத்தை அதிகரிக்கும் நோக்கத்துடன் வேண்டுமென்றே பரவலாக்கப்படுகிறது” என்றும் மேலும் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் உண்மையில் முஸ்லிமாக இருக்கும் சந்தர்ப்பங்களில் தலைப்புச் செய்திகளில் அல்லது சமூக ஊடக பதிவுகளில் குற்றவாளி என்ற இடத்தில் மற்ற வழக்குகளுக்கு மாறாக முஸ்லிம்களின் பெயரை குறிப்பிடுகிற வழக்கம் இப்போது திணிக்கப்பட்டுள்ளது’ என்கிறார்.

அரசியல் களத்திலும் இஸ்லாமியர்கள் கைவிடப்பட்டவர்களாகவும் யாருக்கும் தேவைப்படாத ஒரு சமூகமாகவும் கருதும் நிலை இன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இதற்கு காரணம் “நாட்டில் மாமன் மச்சான்களாக வாழ்ந்து வரும் முஸ்லிம்களும் இந்துக்களும் இணக்கமாக வாழ்வது பாசிசவாதிகளுக்கு பெரும் தலைவலியாக இருக்கிறது.”

“இந்த உறவை சீர்குழைப்பதற்காகத்தான் ஒரு முஸ்லிம் குற்றச்செயலில் ஈடுபட்டால் அதை இஸ்லாத்தின் கொள்கை என்பது போல் திசை திருப்புகின்றனர். அதற்காக பாசிசவாதிகள் ஒரு முஸ்லிம் குற்றம் செய்வதை விரும்புகின்றனர் அல்லது செய்யாத குற்றத்தை செய்தது போன்ற தோற்றத்தை முஸ்லிம்கள் பெயரில் திணிக்கின்றனர். இது முஸ்லிம்கள் மேல் பெரும் சுமையாக அழுத்தத்தை ஏற்பட்டுத்தியுள்ளது.”

இதனால் ஒவ்வொரு தனி முஸ்லிமின் ஒவ்வொரு செயலும் கண்காணிக்கப்படுகிறது என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் உணர்ந்துகொள்ள வேண்டும். எனவே தனி ஒருவன் செய்யும் எந்தவொரு தவறும் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் களங்கம் விளைவிக்கும் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. நமது ஒவ்வொரு செயலையும் நாம் கவனமுடன் செய்ய வேண்டும்.

இந்துக்களுக்கு மத்தியில் இஸ்லாமியர்கள் குறித்தான தவறான கருத்தை பரப்பினால் இந்துக்களுக்கு இஸ்லாமியர்கள் மீது வெறுப்பு ஏற்படும். அப்போது இதை பயன்படுத்தி இஸ்லாமியர்களை ஓரங்கட்டி விடலாம் என்பது தான் அவர்களின் திட்டம். இதற்காகத்தான் முஸ்லிம்களின் ஒவ்வொரு செயலையும் நன்றாக கண்காணிக்கிறார்கள்.

வெறுப்புணர்வு பரப்பப்படும் சூழலில் நாம் அதைவிட அதிகமாக நம்மை குறித்தான விருப்ப உணர்வை பிறரிடத்தில் ஏற்படுத்த வேண்டும். இதற்காகவே அதில் ஈடுபட வேண்டும் என்பது பொருள் அல்ல.

அவரவர் இருக்கும் துறைகளில் பிறர் நலம் நாடுவது, இணக்கமான சூழலை ஏற்படுத்துவது, அனைவரையும் சமமாக நடத்துவது, அவரவர் உரிமைகளை வழங்குவது போன்ற இஸ்லாமிய வாழ்வியலை நடைமுறைப்படுத்துவது ஒருங்கிணைந்து வாழும் சூழலை உருவாக்குவதில் மிகப் பெரும் பங்களிப்பு செய்யும்.

முகமது நபி ஸல் அவர்கள் வாழ்வும் நடைமுறையும் இதை நமக்கு தெளிவாக உணர்த்துகிறது.

உலக வரலாறு எனும் நூலை எழுதிய நேரு “வெறும் 23 ஆண்டுகளில் முகது நபி அரபு சமூகத்தில் ஏற்படுத்திய மாற்றம் விந்தையிலும் விந்தை” என்கிறார்.
இதற்கெல்லாம் காரணம் பெருமானார் நபி தோழர்கள் ஒவ்வொருவரும் தங்கள் செயல்களில் கவனமாக இருந்தனர். இறை போதனைகளை தவறாமல் பின்பற்றினர். அவர்கள் செய்த தொழில், அவர்கள் செய்த வேலை ஆகியவற்றில் இறைவனின் வழிகாட்டுதலை நடைமுறைப்படுத்தி மக்களின் நன்மதிப்பை பெற்றனர்.

நாமும் சிந்திப்போம் வெல்வோம் இறைவன் உதவி செய்வான்.

எஸ்.முகமது யூசுப், மூன்றாம் ஜும்ராஹ் (எட்டாம் வகுப்பு) மாணவர், ஜாமிஅத்துல் ஹிக்மா அரபிக் கல்லூரி, பாண்டிச்சேரி