ஆலிவ் தேசத்தின் மீதான நமது கடமைகள் என்ன? 

கடந்த பல தசாப்தங்களாக பலஸ்தீன் மக்கள் சியோனிச தீவிரவாதக் குழுக்களால் ஒடுக்கப்பட்டு பல்வேறு சொல்லொனா துன்பங்களை நாளுக்கு நாள் அனுபவித்து வருகிறார்கள் என்பதை நாம் அறிவோம்.

இத்தகைய ஓர் இக்கட்டான சூழலில் முஸ்லிம்கள் என்ற வகையில் நாம் அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் என்ன என்பதை நமது சிந்தனைக்கு எடுத்துக்கொள்ள வேண்டிய தேவையும் கடமையும் நமக்கு உள்ளது.

பல தசாப்தங்களாக பலஸ்தீன தேசம் ஒடுக்குமுறைக்கு உட்பட்ட போதிலும் கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி அன்று பலஸ்தீன் போராளிகள் இஸ்ரேல் மீது நடத்திய ‘தூஃபானுல் அக்ஸா’ (அக்ஸா பிரளயம்) என்ற தொணியிலான அதிரடி இராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து சியோனிச சக்திகள் அப்பாவி பலஸ்தீன மக்களை தனது ஒடுக்குமுறை மற்றும் ஆதிக்கப் பசிக்கு தீனியாக பயன்படுத்தி இனச்சுத்திகரிப்பு செய்து வருவதை நாம் ஊடகங்கள் வாயிலாக அறிந்து வருகிறோம்.

இந்த நெருக்கடியான சூழலில் உலக முஸ்லிம் சமூகம் என்ற வகையில் அவர்களுக்கு எவ்வாறு பங்களிப்புக்களை வழங்குவது என்ற கேள்வியும் மறுபுறம் நமது கடமைகளை வெறுமனே துஆக்கள் மூலம் நிறைவேற்றி விட்டால் போதுமானதாக ஆகிவிடுமா என்ற கேள்வியும் எம்மத்தியில் இருந்து வருகின்றது.

ஆனால் முன்னைய காலங்களோடு ஒப்பிடும் பொழுது இன்று நாம் பலஸ்தீன மக்களுக்கு நமது அபரிமிதமான ஒத்தாசைகளையும் பங்களிப்புக்களையும் வழங்க முடியும் என்பதே நிதர்சனமாகும். அதற்கான வழிகள் இன்று பல வழிகளில்‌‌ திறந்தே இருக்கின்றன.

கல்வி, ஊடகங்கள் வழியாகவோ அல்லது எதற்கும் இயலாத நிலையில் துஆவின் மூலமாகவோ உதவ இயலும். இவற்றில் ஒவ்வொருவரும் தங்களுக்கு இயலுமான வகையில் என்ன செய்ய முடியுமோ அதனை செய்து பலஸ்தீனர்களின் காலணிய எதிர்ப்பிற்கு வலுச்சேர்ப்பது மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.

பொதுவாக பலஸ்தீன் மக்களும் குறிப்பாக ஒடுக்கப்பட்டு காலணிய ஆதிக்கத்துக்கு உட்பட்ட பிரதேச மக்களும் தமது சுதந்திர தேசத்தை மீண்டும் பெற்றுக்கொள்வதற்காக சியோனிச சக்திகளின் இரும்புக் கரங்களை முறிப்பதற்கான முயற்சியில் சற்றும் சளைக்காமல் தொடர்ந்தும் முயற்சித்து வருகின்றார்கள்.
இவர்களின் இந்த தீராத வேட்கைகளுக்கு மேலும் உரம் சேர்ப்பதற்கு பௌதீக ரீதியான வலுச்சேர்த்தல் நடவடிக்கைகள் மிகவும் இன்றியமையாத ஒன்றாக காணப்படுகிறது. இதற்கு ஒரு முஸ்லிம் தனிமனிதன் என்ற வகையிலும் முஸ்லிம் நாடுகள் என்ற வகையிலும் தம்மால் இயன்ற பங்களிப்புக்களை வழங்கி அவர்களின் பாதங்களை பலப்படுத்துவது இன்றைய காலத்தின் தேவையாக இருக்கின்றது.

சியோனிச சக்திகள் இவ்வளவு தூரம் பலமடைவதற்கு மற்ற நாடுகளின் உடைமைகளை சுரண்டிச் சாப்பிடும் மேற்கத்திய பணமுதலைகளின் வாந்திகள் சியோனிஸ்ட்களின் வாய்களில் அமுதாக பருகப்படுவதே அவர்களின் கைகள் ஓங்குவதற்கு காரணமாக அமைகின்றது.

ஊடகங்கள் மூலமான காலணிய எதிர்ப்பு.

இன்றைய மின்னணு யுகத்தில் ஊடகங்கள் மூலமான போராட்டம் மிகமுக்கியமான இடத்தை வகிக்கிறது. ஆயுதப் போராட்டங்கள் ஏற்படுத்தும் உடைமைச் சேதங்களை விட ஊடகங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் சிந்தனை ரீதியான படையெடுப்புக்களின் தாக்கம் மிகவும் கடுமையானதாக இருக்கின்றது. இதன் யாதார்த்தத்தை இன்று நடைபெறுகின்ற காசா – இஸ்ரேல் யுத்தத்தில் வெகுவாக கவனிக்க முடியும்.

பல தசாப்த காலமாக பலஸ்தீன விவகாரத்தின் யதார்த்தங்களை மூடி மறைத்து இருட்டடிப்பு செய்து தம்மை ஜனநாயகவாதிகளாக காட்டி வந்த CNN, FoxNews, BBC போன்ற பல மேற்கத்திய ஊடகங்களின் போலித் திரைகள்‌ Al Jazeera , TRT, போன்ற ஊடகங்களால் கிழித்தெறியப்பட்டு பலஸ்தீன விவகாரத்தின் உண்மைத்தன்மை வெளிக்கொண்டு வரப்பட்டு இனம், மதம், நிறம், மொழிகளைக் கடந்து பலஸ்தீன் மக்களுக்கு இன்று உலகம்முழுவதும் மக்கள் ஆதரவாக இருப்பது ஊடகத்தின் மூலம் கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகும்.

குறிப்பாக Al Jazeera , TRT போன்ற ஊடகங்கள் மேற்கத்திய ஊடகங்களோடு மோதுவது என்பது ஆரம்பத்தில் அவற்றுக்கு ஒரு பலப்பரீட்சையாக இருந்த போதிலும் திட்டமிட்ட முறையில் அதன் இலக்குகளை அடைந்து பலஸ்தீன விவகாரத்தை உலக மக்கள் புதிய பரிமாணத்தில் பார்ப்பதற்கு செயல் வடிவம் கொடுத்ததை நாம் பாராட்டாமல் இருக்க முடியாது.

இது போன்ற முன்னெடுப்புகளை மேற்கொள்வதற்கும் நமக்கென்று தனித்துவமான ஊடக கலாச்சாரத்தை உருவாக்குவதற்கு முஸ்லிம்கள் என்ற வகையிலும் முஸ்லிம் நாடுகள் என்ற வகையிலும் முனைப்புடன் செயல்படுவது நாம் இந்த ஆலிவ் தேச மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய கடமையாகும்.

கல்வி மற்றும் அறிவியக்கம் மூலமான காலணிய எதிர்ப்பு :

பலஸ்தீன் மக்களுக்கு நாம் செய்யக்கூடிய மற்றுமொரு முக்கியமான விடயம் தான் கல்வி ரீதியான போராட்டமாகும்.
பலஸ்தீன விவகாரம் சம்பந்தமாக செய்திகள் ஒரு புறம் ஊடகங்கள் மூலமாகவும் மறுபுறம் எழுத்து ஆவணங்கள் மூலமாகவும் புனையப்பட்டும் யதார்த்தங்கள் இருட்டடிப்புச் செய்யப்பட்டும் அவ்வகையான ஆவணங்களை‌ துணை ஆதாரங்களாக பயன்படுத்தி ஆய்வுகள் வெளிவந்து கொண்டிருக்கும் சூழலில் முஸ்லிம் சமூகம் மற்றும் மானுட நலம் நாடும் அறிவுஜீவிகள் மற்றும் அறிஞர்களின் சிந்தனைகளுக்கும் கருத்துக்களுக்கும் செயல்வடிவம்‌ கொடுக்க வேண்டிய காலத்தில் நாம் இருந்து கொண்டிருக்கின்றோம்.

இதற்காக முஸ்லிம் சமூகம் என்ற வகையில் இந்த விவகாரம் சம்பந்தமாக கல்வி ரீதியான மாநாடுகள் பல நாடுகளை மையப்படுத்தி குறிப்பாக மேற்கை மையப்படுத்தி ஏற்பாடு செய்து இந்த பலஸ்தீன விவகாரத்தை பல்வேறு பரிமாணங்களில் ஆய்வு செய்து அது சம்பந்தமான ஆய்வுகளை பல மொழிகளில் வெளியிட்டு அதனை பொதுவெளியில் மக்களிடம் பேசுபொருளாக்கி பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக ஆக்குவதே நாம் அந்த ஆலிவ் தேச மக்களுக்குச் செய்யும் போதுமான பங்களிப்பாக கூட இருக்கலாம்.

காசா – இஸ்ரேல் யுத்தத்தை தொடர்ந்து ஆக்கிரமிப்பு இஸ்ரேலுக்கும், இஸ்ரேலிய மற்றும் மேற்கத்திய நிறுவனங்களுக்கு எதிரான புறக்கணிப்பு நாளுக்கு நாள் குறிப்பாக முஸ்லிம் சமுகங்களுக்கு மத்தியில் அதிகரித்து வருகின்றது. இதன் விளைவாக இஸ்ரேலின் வர்த்தகங்கள், வியாபாரங்கள் குறைந்து பொருளாதாரத்தில் பலவீனமாகும் நிலை உருவாகும்.

இந்த சூழலில் நாம் வெறுமனே பொருளாதார புறக்கணிப்புகளுடன் மாத்திரம் நிறுத்திக் கொள்ளாமல், நமது பொருளாதார நெறிமுறைகளை முறைப்படுத்தி புதிய வியூகங்களை முன்னிலைப்படுத்தி இவ்வுலகிலும் குறிப்பாக பலஸ்தீன் விவகாரத்திலும் மனிதம் வாழ்வதற்கு தோல் கொடுக்கக் கூடிய வர்த்தகங்களை வளர்ப்பது நமது தார்மீக கடமையாகும்.

எனவே பலஸ்தீன் மக்களின் இந்த பிரச்சினையை வெறுமனே அனுதாப செய்திகளாக மாத்திரம் தமக்கிடையே பகிர்ந்து கொள்வதோடு நிறுத்திக் கொள்ளாமல் செயல்படுவதே இந்த காலத்தின் தேவையாகும்.

M.S.இனாமுல் ஹஸன் 

மாணவன், நளீமிய்யா இஸ்லாமிய கலாபீடம், இலங்கை.