மருத்துவத்தில் இஸ்லாமிய முன்னோடி பெண்கள்.
– Dr. எம். நூருல் அமீன்,
இஸ்லாமிய கலாச்சாரத்தையும் அதன் நாகரிகத்தையும் உருவாக்குவதில் ஆண் பெண் என இரு பாலரும் தங்களின் பங்களிப்பை அளித்துள்ளனர்.
கதை, கவிதை, இலக்கியம், வானியல், புவியியல், விஞ்ஞானம், வணிகம், கணிதம் மற்றும் மருத்துவம் போன்ற அனைத்துத் துறைகளிலும் ஏக இறைவனின் கட்டளைப்படி பெண்களும் பங்களிப்புச் செய்து வாழ்ந்து காட்டியுள்ளனர்.
நபி (ஸல்) அவர்கள் மனித வாழ்வின் அனைத்திற்கும் வழி காட்டியது போல நோய்களுக்கு சிகிச்சை பெறுவதன் அவசியத்தையும் அறிவுறுத்தியுள்ளார்கள்.
நோய்களுக்கு மருத்துவம் செய்தும், நோயாளிகளுக்கு உதவிகள் செய்தும் அவர்களின் உடல் நலனை மேம்படுத்த தனியறைகள் அமைத்தும், நோயாளிகளை கவனிக்க மிக உயர்ந்த சேவைகளை இஸ்லாமியர்கள் செய்துள்ளனர் என்பதை வரலாற்றின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.
போர்களிலும் அந்தப் பணிகள் தொடர்ந்துள்ளது. போரில் காயமுற்றவர்களுக்கு மருந்திட்டு, உணவுகள் தயாரித்து, தண்ணீர் மற்றும் உணவுகளை வழங்கி, போரில் மரணித்தவர்களை அடக்கம் செய்ய குழிகள் தோண்டி, மரணித்தவர்களுக்கு கஃபனிட்டு அடக்கம் செய்வது என பெண்கள் நன்மையான பல பொதுக் காரியங்களை செய்துள்ளனர்.
அல்லாஹ்வின் அடியார்களே! மருத்துவம் செய்யுங்கள்! எந்த நோயையும் அதற்குரிய மருந்தில்லாமல் அல்லாஹ் இறக்கவில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். நூல்கள் : திர்மிதீ மற்றும் அபூதாவூத்.
நுஸைபா (உம்மு அம்மாரா) அவர்களும் அல்-ஷிஃபா அல்-அதாவிய்யா (அல்-ஷஃபா) போன்றோர் நபிகள் நாயகத்தின் காலத்திலும், இரண்டாம் கலீஃபா உமரின் காலத்திலும் போரில் பங்கேற்றதையும் அங்கு அவர்கள் முக்கிய பங்கு வகித்துள்ளதையும் இங்கு குறிப்பிடலாம்.
“உஹதுப் போரின் போது நுஸைபா பின்த் கஅப் அல்-மாஸினிய்யா, உம்மு சினான் அல் இஸ்லாமி ஆகியோர் போர்க்களத்திற்குச் சென்று காயமடைந்த வீரர்களுக்கு உதவுவதற்கும், வீரர்களுக்கு தண்ணீர் வழங்கிடவும் நபி (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டனர். நபி (ஸல்) அவர்களும் அனுமதித்தார்கள்” என்று செய்தி சஹீஹ் முஸ்லிமின் அறிவிப்பில் உள்ளது.
இப்னு மாஜாவில் வரும் அறிவிப்பில் “நபி (ஸல்) அவர்களின் மகள் ஃபாத்திமா தனது கணவர் ‘அலி{ரலி}’யுடன் சேர்ந்து, “போரில் காயம் பட்டவருக்கு காயத்தின் இரத்தப் போக்கை தடுக்க விரிக்கின்ற பாயின் ஒரு துண்டை எரித்து, அதன் சாம்பலை காயத்தில் தடவி இரத்தம் வெளியேறுவதைத் தடுத்துள்ளார்” என்ற செய்தியும் பதிவாகியுள்ளது.
நுசைபா பின்த் அல்-ஹாரித் {ரலி} அவர்கள் நபி {ஸல்} அவர்களின் காலத்தில் ஏழு யுத்தங்களில் கலந்து கொண்டார். இவர் நோயுற்றவர்களைக் கவனிப்பதிலும் தாகிப்போருக்கு தண்ணீர் புகட்டுவதிலும் காயப்பட்டோருக்கு மருந்து கட்டுவதிலும் ஈடுபட்டிருந்தார் என்ற செய்தியையும் இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்.
நபித்தோழியர்களில் ஒருவரான ருஃபைதா {ரலி} என்பவர்
வரலாற்றின் முதலாவது தாதியாகக் (செவிலியர்) கருதப்படுகின்றார். இறைத் தூதர் (ஸல்) கந்தக் யுத்தத்தில் காயப்பட்டவர்களை கவனிப்பதற்காக பெரிய கூடார மொன்றையே தனியாக (மருத்துவமனையை போல) அமைத்துக் கொடுத்திருந்தார்கள். ருஃபைதா (ரழி) அவர்களுக்கு உதவுவதற்காக பெண்கள் குழுவொன்றும் அவர்களுடன் பணியில் ஈடுபட்டது.
ருபைஃ பின்த் முஅவ்வித் (ரழி) அவர்கள் ‘நாங்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களோடு சேர்ந்து போராளிகளுக்கு நீர் புகட்டியும், காயம் பட்டவர்களுக்கு மருத்துவம் செய்தும், காயப்பட்டவர்களையும், கொல்லப்பட்டவர்களையும் மதீனாவுக்கு இடமாற்றிக் கொண்டு இருந்தோம்’ என அறிவித்த ஹதீஸ் புகாரியில் பதிவாகியுள்ளது
முதன் முதலில் மருத்துவ பராமரிப்பு மையம், நபிகள் நாயகத்தின் வாழ்நாளில் ருஃபைதா அல்-அஸ்லமியா{ரலி}வால் அமைக்கப்பட்டது.
கந்தக் (பள்ளப்) போரின் போது, காயமடைந்தவர்களுக்கு அமைக்கப்பட்ட தனி கூடாரத்தில் ருஃபைதா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளார்.
இன்றைய நாட்களில் இராணுவத்தில் செயல்படும் நடமாடும் இராணுவ மருத்துவமனைகளுக்கு முன் உதாரணமாக அதுவே இருந்துள்ளதாக வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
மதீனாவில் உள்ள பள்ளிவாசலில் கூடாரம் அமைத்து செவிலியர்களுடன் இணைந்து காயம் பட்டவர்களுக்கு அங்கு சிகிச்சையும் அளித்துள்ளார்.
நபிகள் நாயகத்தின் காலத்தில் பள்ளிவாசல் தொழும் இடமாக மட்டுமே இல்லாமல் மருத்துவமையமாகவும் செயல்பட்டுள்ளது என்பதை இந்த சம்பவத்தின் மூலம் தெரிந்து கொள்ளமுடிகிறது.
ருஃபைதா தனது மருத்துவத் திறன்களால் அனாதைகள், ஊனமுற்றோர் மற்றும் ஏழைகளை அரவணைத்தும், மற்ற பெண்களை செவிலியர்களாக சேர்த்து பயிற்சி கொடுத்தும், நடமாடும் மருத்துவ மனையையை அமைத்தும், காயமடைந்தவர்களை பகல், இரவு என நேரம் பாராமல் கவனித்துக் கொண்டு ஒரு கனிவான செவிலியராக சேவைகள் செய்துள்ளார்.
அயர்லாந்தில் உள்ள ராயல் காலேஜ் ஆஃப் சர்ஜன்ஸ், பஹ்ரைன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து தங்களின் தனித்துவமான மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ருஃபைதா அல்-அஸ்லமியாவின் பெயரில் ஒரு விருது வழங்கி கண்ணியப்படுத்தி வருகிறது. மேலும் அங்குள்ள தெருக்கள், பள்ளிகள் போன்ற பலவற்றுக்கு ருஃபைதா அவர்களின் பெயர் சூட்டபட்டுள்ளன.
அல் ஷிஃபா {குணப்படுத்துபவர்} என்னும் அல்-ஷிஃபா பின்த் அப்துல்லாஹ் அல்-குராஷியா அல்-அதாவியா என்ற நபித் தோழி, பெண் ஆளுமை, இஸ்லாமிய வரலாற்றில் முக்கியமானவர். ஏனெனில் அவர் மருத்துவத்தில் மட்டுமின்றி பொது நிர்வாகத்திலும் திறமையானவராகவும் இருந்துள்ளார்.
அவருக்கு பெற்றோர் வைத்த பெயர் லைலா. ஆனால் “அல்-ஷிஃபா” என்றே எல்லோராலும் அழைக்கப்பட்டார். காரணம் “எறும்புக் கடி, தோல் நோய்களுக்கு அல்-ஷிஃபா சிறப்பாக சிகிச்சையளித்துள்ளார்.
நபி (ஸல்) அவர்கள் இவரது மருத்துவ முறையை மற்ற பெண்களுக்கும் கற்றுத் தறுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். “குணப்படுத்துதல்” என்று பொருள்படும் படி இவரின் பெயரை அல்-ஷிஃபா என்றே எல்லோரும் அன்பாக அழைத்துள்ளனர் என்பதும் முக்கியமானது.
ஷிஃபா நபி (ஸல்) அவர்களின் காலத்தில் முதல் பெண் ஆசிரியராகவும், மருத்துவராகவும் இருந்து மற்றவர்களுக்கும் அவைகளை கற்றுத் தந்துள்ளார்.
நபியவர்களின் மனைவி ஹஃப்சா பின்த் அல்-கத்தாபுக்கு எழுதப் படிக்கவும், தோல் நோய்களுக்கு சிகிச்சையளிக்கவும் ஷிஃபா ரழி பயிற்சி அளித்துள்ளார்.
உம்மு அம்மாரா என்பவர் தனது கணவர் மற்றும் இரண்டு ஆண் குழந்தைகளுடனும் தனது 43 வயதில் உஹத் போரில் பங்கு கொண்டு போர் வீரர்களுக்கு தண்ணீர் அளித்தார். காயமுற்றோருக்கு தம் இடுப்பில் கட்டி வைத்திருந்த கந்தல் துணியை எரித்துச் சாம்பலாக்கி அந்தச் சாம்பலை காயங்களில் தடவி சிகிச்சையளித்துள்ளார். *(1)
15 ஆம் நூற்றாண்டில், பிரபலமான அறுவை சிகிச்சைக் கையேடான செர்ராஹியெதுல்-ஹானியேவின் ஆசிரியரான துருக்கிய அறுவை சிகிச்சை நிபுணர் செரெஃபுதீன் சாபுன்சோக்லு (1385-1468).
அவர் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ நடைமுறை விவரங்களை விளக்கியுள்ளார். பெண் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தும் பெண் அறுவை சிகிச்சை நிபுணர்களுடனும் பணியாற்றியும் உள்ளார்.
அனடோலியாவில் (துருக்கியின் பழைய பெயர்*2) இங்குள்ள பெண் அறுவை சிகிச்சை நிபுணர்கள் மகளிருக்கான மருத்துவ நடை முறைகளைச் செய்துள்ளனர்.
கருப்பை நோய்கள், அசாதாரண பிரசவம் மற்றும் அசாதாரண கரு அல்லது நஞ்சுக்கொடியை பிரித்தெடுத்தல் ஆகியவைகள் அதில் அடங்கும்.
கரு ஹைட்ரோகெபாலஸ்* மற்றும் மேக்ரோசெபாலி* போன்ற குழந்தை நரம்பியல் நோய்களுக்கு சிகிச்சையளிக்கும் பெண் அறுவை சிகிச்சை நிபுணர்களின் ஆரம்பகால பணிகளை அவைகள் பிரதிபலிக்கின்றன.
* கரு ஹைட்ரோகெபாலஸ் என்பது கருவின் மூளையில் செரிப்ரோஸ்பைனல் திரவம் (CSF) அதிக அளவில் சேர்வதால் ஏற்படும் ஒரு நிலை* மேக்ரோசெபாலி என்பது குழந்தையின் தலை வழக்கத்தை விடப் பெரியதாக இருப்பது போன்ற அசாதாரண சூழ்நிலைகளை குறிப்பதாகும்.
பெண் சிகிச்சை நிபுணர்கள் பொதுவாக பெண்களின் அந்தரங்க (உறுப்புகளில் ஏற்படும்) நோய்களுக்கும், மருக்கள், கொப்புளங்கள், கருப்பையின் நோய்கள், ஆபத்தான பிரசவம் மற்றும் நஞ்சுக்கொடியை பிரித்தெடுத்தல் போன்ற மருத்துவ நடைமுறைகளைச் செய்துள்ளனர்.
“காட்டரைசேஷன், இரத்தப்போக்கை நிறுத்துவது, காயங்களை குணப்படுத்த கையால் செய்யப்பட்ட மருந்துகள் தயாரிப்பது, ஹிஜாமா என்னும் இரத்தம் குத்தி எடுத்தல் ஆகியவைகளுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டன.”
*காட்டரைசேஷன் (Cauterization) என்பது மரு போன்ற திசுக்களை அகற்றுவது, உடல் பகுதிகளை சீராக்கும் {அழகுபடுத்துதல்} சிகிச்சையாகும்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தமது மனைவியரில் சிலரை மகப்பேற்று மருத்துவம் பார்ப்பதற்காக பல பிரசவ வீடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளார்கள் என்பதையும் நாம் அறிய முடிகிறது.
ஸைனப் பின்த் அவத் என்பவர் தோலில் உண்டாகும் புண்களுக்கு சிகிச்சை அளிப்பவராகவும், மேற்பூச்சு மருந்துகளை தயாரிப்பவராகவும் இருந்துள்ளார்
இரண்டாவது கலீஃபா உமர் ரழி அவர்கள் இவரை மருந்துகளின் கலவை உட்பட பல்வேறு வணிகங்களை ஒழுங்குபடுத்தும் அமைப்பான ஹுஸ்பாவுக்கு தலைவராக நியமிக்கப்பட்டவர் ஆவார்.
பெண் மருத்துவர்கள் மருத்துவமனைகளில் பணிபுரிந்ததோடு தங்கள் வீடுகளிலும் நோயாளிகளுக்கு சிகிச்சையளித்துள்ளார்கள். அவர்களில் ஸ்பெயினைச் சேர்ந்த அல் அபீத் என்பவரின் மகளும், சகோதரியும் குறிப்பிடத்தக்கவர்கள்.
இவர்கள் மருத்துவத் துறையில் தலைசிறந்து விளங்கியதுடன் ஸ்பெயின் கலீபா மன்சூரின் குடும்பப் பெண்களுக்கும் மருத்துவம் செய்துள்ளனர்.
அல்-தபரி தனது “தரீக் அல் ருசுல் வல் முலூக்” என்ற புத்தகத்தில், அல்-ஹசன் என்ற மருத்துவரிடம், தோளில் தொற்று ஏற்பட்ட காயத்துடன் சிகிச்சைக்கு வந்ததவரிடம், “நான் ஒரு கண் மருத்துவர். உங்களுக்கு சிகிச்சை அளிக்க எங்களிடம் ஒரு பெண் மருத்துவர் இருக்கிறார்” என்று கூறி அவரின் மூலமாக மருத்துவம் செய்த செய்தி உள்ளது.

13 மற்றும் 14 ஆம் நூற்றாண்டுகளில் கெய்ரோவில் பெண்களுக்கு பெண்களே பிரசவம் பார்த்து, பிறந்த குழந்தைகளைப் பராமரிப்பதற்கான வசதி இருந்தது என இப்னு அல்-ஹஜ் தனது புத்தகத்தில் (அல்-மத்கல்) விவரித்துள்ளார்.
ஜைனப் (8 ஆம் நூற்றாண்டு), பனு அவதை இனத்தைச் சேர்ந்த ஒரு மருத்துவர், கண் வலி சிகிச்சை, அறுவை சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்றவர்.
உம்மு ஆசியா (9 ஆம் நூற்றாண்டு), துலுனிட் வம்ச ஆட்சி காலத்தில் வாழ்ந்த பக்தியுள்ள மருத்துவச்சி.
பிரசவத்தை வலியைக் குறைப்பதற்கும், எளிதாக்குவதற்கும் புதுமையான நுட்பங்களைக் கண்டறிந்து பிரபலமானவர்.
பனூ ஜுஹ்ர் பெண்கள் (11 முதல் 13 ஆம் நூற்றாண்டுகள்), ஐபீரிய தீபகற்பத்தில் இருந்த அந்தலூசியா {இன்றைய ஸ்பெயின்} தலைநகர் செவில்லில் வசித்த ஒரு கற்றறிந்த குடும்பம் பனூ ஜுஹ்ர். அவர்கள் 11 முதல் 13 ஆம் நூற்றாண்டு வரை மருத்துவர்களாகவும், அறிஞர்களாகவும் சிறந்து விளங்கினார்கள்.
சாரா அல்-ஹலபியா (13 ஆம் நூற்றாண்டு):
மருத்துவர், கவிஞர், அவரது காலத்து மன்னர்கள் முன்னிலையில் அவரது படைப்புகள் வாசிக்கப்பட்டன. முதலில் அலெப்போவிலும், துனிசியாவிலும் வாழ்ந்தவர்.

இது போல பலர்..
….மேலும் ஒருவர் உயிரைக் காப்பாற்றினால், அவர் அனைத்து மனிதர்களின் உயிரையும் காப்பாற்றியவராவார்.”** (அல் மாயிதா 5:32) என்ற இறைவசனத்தை ஏற்று முஸ்லிம் பெண்களும் மருத்துவத்திற்கு பங்களிப்பு செய்த வரலாற்றுக் குறிப்புகள் அதிகமாகவே உள்ளன.
உதவியவைகள்
journal of theBritish Islamic medical அஸோஸியேஷன்
*1.இஸ்லாமிய கலைக் களஞ்சியம் 2ஆம் பாகம் பக்கம் 474.
*2.இஸ்லாமிய கலைக் களஞ்சியம் பக்கம் 506.