வெறுப்பு தலை தூக்கும்போது மகாத்மா காந்தியின் தேடல்…

xr:d:DAF69gMZRq4:6,j:6243531703937988508,t:24012617

  • குர்பான் அலி, பத்திரிக்கையாளர்

—–மகாத்மா காந்தி ஜனவரி 27, 1948 அன்று மெஹ்ராலியில் உள்ள குத்புதீன் பக்தியார் காக்கி தர்காவிற்கு வருகை தந்தார்.—-

இன்றைக்கு ஒவ்வொரு மசூதியின் கீழும் கோவில்களை தேடும் சட்டத்திற்கு மாறான; கூட்டுச் சூழ்ச்சி நடக்கும்போது, தேசத்தந்தை மகாத்மா காந்தி, அவர் உயிரோடு இருந்திருந்தால் என்ன செய்திருப்பார், சுதந்திர இந்தியாவில் வாழ்ந்த ஐந்தரை மாத காலத்தில் அவர் என்ன செய்தார் என்பதை இந்தியச் சமூகம் அறிந்துகொள்ள வேண்டும்.

இந்தியா, இந்து-முஸ்லிம் ஒற்றுமையையும், பரஸ்பர நல்லிணக்கத்தையும் பேணுவதற்காக, அவர் தனது உயிரைப் பணயம் வைத்து, ஒரு இந்துத்துவ வெறியரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானார். இன்று, அந்த காலகட்டத்தை திரும்பிப்பார்ப்பது முக்கியம்.

காந்தியின் கடைசி நடவடிக்கைகளில் ஒன்று – அவர் படுகொலை செய்யப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு – டெல்லியின் தெற்குப் பதியி உள்ள மெஹ்ராலியில் உள்ள குத்புதீன் பக்தியார் காக்கியின் கல்லறைக்குச் சென்றது.

ஒரு பொது இடத்திற்கு மகாத்மா காந்தி செல்வது புனித யாத்திரை என்று அழைக்கப்படுகிறது. அவரது இந்த செயலுக்குப் பின்னால் இருக்கும் காரணத்தை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.

நாடு பிரிவிணையைச் சந்தித்த பிறகு, தலைநகர் தில்லியில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் நிலைநாட்டுவதற்காக ஜனவரி 18, 1948 அன்று தனது கடைசி உண்ணாவிரதத்தை முடித்து ஒன்பது நாட்களே ஆகியிருந்தது. 79 வயதான மகாத்மா காந்தி மிகவும் சோர்வாகவும் பலவீனமாகவும் இருந்த உடல்நிலையோடு, அவர் கொலை செய்யப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன், ஜனவரி 27 அன்று குத்புதீன் பக்தியார் காக்கி தர்காவுக்குச் புனிதப் பயணம் சென்றார்.

டெல்லியில் கடும் குளிர் நிலவிய காலச் சூழல் அது, பிரிவினைக்குப் பிறகு வகுப்புவாத கலவரத்தின் போது ஏற்பட்ட பாதிப்புகளைப் பார்க்க காலை 8 மணிக்கு முன்னதாகவே அங்கு சென்றடைந்தார். அவருடன் மௌலானா ஆசாத் மற்றும் ராஜ்குமாரி அம்ரித் கவுர் ஆகியோரும் அங்கு சென்றனர்.

அதுவரை நடைபெறாத அளவு வகுப்புவாத வன்முறை நிகழ்ந்த அந்தக் கலவரத்தின் போது பக்தியார் காக்கி தர்கா சேதப்படுத்தப்பட்டது. அதைச்சுற்றி வாழ்ந்தவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள்.

ஏன்…

சொந்த நாட்டிலேயே மதத்தின் பெயரால் முஸ்லிம்கள் தாக்கப்படுவதைக் கண்டு மிகவும் வருத்தப்பட்டார் காந்தி. அங்கு அவர் சென்ற நேரத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் உரூஸ் நடந்து கொண்டிருந்தாலும், சூழ்நிலை சோகமானதகாவும் இருள்படர்ந்ததாகவும் இருந்தது.

காக்கி தர்கா தாக்கப்பட்டு நாசப்படுத்தப்பட்ட பிறகு, பல உள்ளூர் முஸ்லிம்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். தர்கா ஊழியர்களும் கூட உயிருக்குப் பயந்து தர்காவை விட்டு வெளியேறினர். அவர்களும் வேறு இடங்களில் தஞ்சம் புகுந்தனர்.

தர்காவுக்குச் சென்ற காந்தி, அங்கிருந்த அனைவரையும் ஒருவருக்கொருவர் ஒருங்கிணைந்து நிம்மதியாக வாழுமாறு வேண்டுகோள் விடுத்தார். சேதமடைந்த பகுதியை புனரமைக்குமாறு அகதிகளைக் கேட்டுக் கொண்டார்.

மேலும், கலவரத்தின் போது தர்காவுக்கு ஏற்பட்ட சேதத்தை சீரமைக்கும்படியும், இழப்பீடாக ரூ. 50,000 ஒதுக்குமாறும் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் காந்தி கேட்டுக் கொண்டார். இது அக்காலத்தில் பெரும் தொகையாகக் கருதப்பட்டது.

தர்காவில் இருந்து புறப்படுவதற்கு முன், காந்தி அங்கு கூடியிருந்தவர்களிடம் கூறினார் :

“நான் இங்கு ஒரு புனித யாத்திரையாக வந்துள்ளேன்.”  “இங்கு வந்துள்ள முஸ்லிம்கள், இந்துக்கள் மற்றும் சீக்கியர்களாகிய நாங்கள் ஒருபோதும் சண்டை, சச்சரவுகள் ஏற்பட அனுமதிக்க மாட்டோம், மாறாக நட்பு, அமைதி மற்றும் சகோதரத்துவத்துடன் வாழ்வோம் என்று தூய்மையான மனதுடன் உறுதிமொழி எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நாம் நம்மைத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும், நம் எதிரிகளைக் கூட அன்புடன் சந்திக்க வேண்டும்’ என்றார்.

காந்திஜி மேலும் கூறினார் : “கும்பலின் கோபத்திற்கு இந்த தர்கா பலியாகி விட்டது. கடந்த 800 ஆண்டுகளாக அருகாமையில் வசிக்கும் முஸ்லிம்கள் அதை விட்டு வெளியேற வேண்டியதாயிற்று… முஸ்லிம்கள் இந்த தர்காவை விரும்பினாலும், இன்று அதைச் சுற்றி ஒரு முஸ்லிமும் இல்லை… இதை மீண்டும் திறக்க வேண்டியது இந்துக்கள், சீக்கியர்கள், அதிகாரிகள் மற்றும் அரசாங்கத்தின் கடமை. தர்காவை சீரமைத்து, நம் அனைவரின் மீதுள்ள கறையைக் கழுவுங்கள்.

.. இப்போது இந்தியாவும் பாகிஸ்தானும் தங்கள் நாடுகளின் பெரும்பான்மையான மக்களுக்கு, தங்கள் நாடுகளில் இருக்கும் மதத் தலங்கள், அவை சிறியதாக இருந்தாலும் சரி, பெரியதாக இருந்தாலும் சரி, அவமதிக்கப்படுவதைப் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்று தெளிவாக அறிவிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.
  – மகாத்மா காந்தியின் சேகரிக்கப்பட்ட படைப்புகள் (தொகுதி 98, பக். 98-99) 27 ஜனவரி 1948.

அவர் பக்தியார் காக்கி தர்காவுக்கு வந்து சென்ற பிறகு காந்தி எழுதினார் :

“அஜ்மீர் தர்காவிற்குப் பிறகு, இது நாட்டிலேயே இரண்டாவது மிகவும் மதிக்கப்படும் (குத்புதீன் பக்தியார் காக்கி) தர்காவாகும், மேலும் ஒவ்வொரு ஆண்டும் முஸ்லிம்கள் மட்டுமின்றி ஆயிரக்கணக்கான முஸ்லிம் அல்லாதவர்களும் வருகை தருகின்றனர்.”

ஒவ்வொரு ஆண்டும் டெல்லியின் இலையுதிர் காலத்தில் குத்புதீன் பக்தியார் காக்கி தர்காவில், “ஃபூல் வாலோன் கி சேர்” விழா நல்லிணக்கத்தைக் கொண்டாடும் வகையில் இங்கு உயிர்ப்புடன் கொண்டாடப்படுகிறது.

உண்மையில், “இந்தியா மதச்சார்பற்ற விழுமியங்களில் வாழ வேண்டும் என்று வலியுறுத்திய அதற்காக தன்னை அர்ப்பணித்த காந்திக்கு இது ஒரு நினைவு அஞ்சலி” என்கிறார் ஆசிரியரும் சமூக சேவகருமான மக்சூத் அகமது.

இந்து-முஸ்லிம் ஒற்றுமையின் அடையாளமாகவும் பாரம்பரியமாகவும் கொண்டாடப்பட்ட ஏழு நாள் திருவிழா, 1862 இல் பிரிட்டிஷ் ஆட்சியின் போது நிறுத்தப்பட்டது, அந்தக் நிகழ்வு சுதந்திரத்திற்குப் பிறகு 1961 இல் நேருவால் மீண்டும் புத்துயிர்ப்புடன் கொண்டாடப்பட்டது.

இந்த பண்டிகையின் போது, இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் இருவரும் சாதர் (தர்காக்களில் மரியாதைக்குரிய அடையாளமாக வழங்கப்படும் துணி) மற்றும் மின்விசிறிகளை வழங்குகிறார்கள்; மெஹ்ராலியில் உள்ள யோகமாயா தேவியின் அருகிலுள்ள பழமையான கோவிலிலும் மின்விசிறிகள் மற்றும் குடைகள் வழங்கப்படுகின்றன.

துரதிர்ஷ்டவசமாக, குத்புதீன் பக்தியார் காக்கி தர்காவுடன் காந்தியின் ஆழமான தொடர்பைக் குறிக்கும் பலகை எதுவும் இல்லை. சோகமான இன்னொரு விசயம் என்னவென்றால், தர்காவில் பணிபுரியும் மக்களுக்கு காந்தி இறப்பதற்கு முன் ஏன் இங்கு வந்தார் என்பதும் தெரியவில்லை.

டெல்லியின் மூத்த பத்திரிகையாளரும் வரலாற்று நிபுணருமான விவேக் சுக்லா கூறியதாவது : “காந்திஜி அவர் ஒரு தீவிர இந்துவாக இருப்பினும், 1915 ஏப்ரல் 12 முதல் 1948 ஜனவரி 30 வரை டெல்லியில் தங்கியிருந்த மொத்தம் 744 நாட்களில், டெல்லியில் உள்ள மதத் தலங்களுக்கு இரண்டு முறை மட்டுமே சென்றார்.

ஒன்று, தலித்துகள் நுழைவது தடை செய்யப்படாது என்ற நிபந்தனையுடன் 1939 செப்டம்பர் 22 அன்று அவர் திறந்து வைத்த ‘பிர்லா மந்திர்’. இரண்டாவதாக அவர் சென்ற இடம் ‘குத்புதீன் பக்தியார் தர்கா’வாகும்.

காந்திஜியின் தனிச் செயலாளர் பியாரேலால் நய்யார் தனது மகாத்மா காந்தி பூர்ணாஹுதி என்ற புத்தகத்தில் : “தர்காவின் சில பகுதிகள் சேதமடைந்ததைக் கண்டு பாபு மிகவும் மனமுடைந்து போனார். குத்புதீன் பக்தியார் காக்கி தர்காவிற்கு அருகில் அகதிகளுக்கு அரசாங்கத்தால் தற்காலிக தங்குமிடம் வழங்கப்பட்டது” என்று எழுதுகிறார்.

மெஹ்ராலியைச் சேர்ந்தவர் சமூக ஆர்வலர் ராஜிந்தர் குமார், அவரது குடும்பம் பல தலைமுறைகளாக மெஹ்ராலியில் வசித்து வருகிறது, காந்தி காக்கி தர்கா வந்து சென்றது பற்றி அவரது தந்தையிடமிருந்து அவர் அறிந்து கொண்டதை சொல்லும்போது :

“காந்திஜி உள்ளூர் முஸ்லிம்களை இந்தியாவை விட்டு பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். அவரது வேண்டுகோளை ஏற்று, மெஹ்ராலி முஸ்லிம்கள் தங்கள் மனதை மாற்றிக்கொண்டனர்” என்று குமார் தெரிவிக்கிறார்.

காந்தியார் 1921, 1922 மற்றும் 1934 ஆகிய ஆண்டுகளில் அஜ்மீர் ஷெரீஃபில் உள்ள காஜா மொய்னுதீன் சிஷ்தி தர்காவிற்கு மூன்று முறை சென்றுள்ளார், இது குறித்து இன்று ஒரு சர்ச்சை எழுப்பப்படுகிறது, அவரது பக்தி மற்றும் நம்பிக்கையின் அடையாளமாக பூக்கள் மற்றும் சதர் ஆகியவற்றை வழங்கினார்.

காந்தி முதன்முதலில் மார்ச் 8, 1921 அன்று அஜ்மீர் ஷெரீஃபிற்கு வந்து தர்பாரை (மசார்) ‘மனிதகுலத்தின் மையம்’ என்று விவரித்தார்.

அந்தக் காலத்தில் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் தலைவராக இருந்த குமாரானந்தின் அழைப்பின் பேரில் மார்ச் 8, 1922 அன்று அவர் இரண்டாவது முறையாக அஜ்மீருக்கு வந்தார்.

மூன்றாவது முறையாக, காந்திஜி ராஜ்புதானா ஹரிஜன் சேவா சங்கத்தின் அழைப்பின் பேரில் 1934 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் தேதி இரவு அஜ்மீருக்கு வந்தார்.

இன்று, இந்தியாவின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும், அதன் பண்டைய நாகரிகத்தையும், நல்லிணக்கத்தையும் அரித்து சிதைத்து வரும் தனிநபர்கள் கடந்த மூன்று முதல் நான்கு தசாப்தங்களாக “தீன் நஹி தோ தீன் ஹசார், நஹி பச்சேகி கோய் மசார் (மூன்று இல்லையென்றால், மூவாயிரம் மசூதிகள் இடிக்கப்படும், எந்த வழிபாட்டுத் தலமும் மிச்சமில்லை).” மேலும் “அயோத்தி டூ ஜாங்கி ஹை மதுரா காசி பாக்கி ஹை (அயோத்தி ஒரு பார்வை மட்டுமே, மதுரா காசி இன்னும் எஞ்சியுள்ளது)” என்று வெறுப்பை பரப்பி வருகிறார்கள்.

இந்தச் சூழலில், காந்தியின் வார்த்தைகளும், சமூக நல்லிணக்கச் செயல்பாடுகளும் முன்னெப்போதையும் விட இப்போது அதிகமாக நினைவுகூரப்பட வேண்டும்.