உலக முஸ்லிம்கள் பிள்ளைகளுக்கு பெயர் சூட்டுவதில் தங்களது இன மொழி கலாச்சார அடையாளங்கள் இடம்பெறுவதை பெரிதும் விரும்புகின்றனர். அதை பெருமையாகவும் கருதுகின்றனர்.
அரபுகள் ஆப்ரிக்கர்கள் ஐரோப்பியர்கள் மத்திய ஆசியர்கள் மலேசியா இந்தோனேஷியா சீனா ஜப்பான் உள்ளிட்ட ஏறக்குறைய எல்லா தனித்துவமிக்க முஸ்லிம் இனத்தவரும் அவரவரின் இன மொழி கலாச்சார அடையாளத்துடன் பெயர் சூட்டுவதை இன்றும் வழக்கமாக வைத்துள்ளனர்.
இந்திய முஸ்லிம்களில் கூட நபியின் பெயருடன் உருது மலையாளம் கன்னடம் தெலுங்கு பெங்காலி பஷ்துன் பஞ்சாபி கஷ்மீரி உள்ளிட்ட அவரவரின் இன மொழிப் பெயரையும் குடும்பப் பெயரையும் சேர்த்து பிள்ளைகளுக்கு சூட்டுகின்றர்.
அது தங்களுடைய குடும்பத்தின் மரபுகளை முன்னிறுத்துவதாகவும், தங்களது இன மொழி வழிச் சமூகங்களுடனான உறவுகள் அறுந்து விடாமல் பாதுகாப்பதாகவும் கருதுகின்றனர்.
கல்வி சமூக பொருளாதார அரசியல் அதிகாரங்களுக்கு இது இன்றியமையாததாகவும் கருதுகின்றனர். அதுபோலவே கடந்த காலங்களில் தமிழ்மணம் கமழும் இஸ்லாமியப் பெயர்களை பிள்ளைகளுக்கு சூட்டுவது பெருமைக்குரியதாக கருதப்பட்டது.
உதாரணத்திற்கு : ராஜா முஹம்மது, முத்து முஹம்மது, கனி ராவுத்தர், பாத்திமா நாச்சியார், ஆயிஷா அம்மாள்…
வெறும் தமிழ் பெயருடைய அதேநேரம் இஸ்லாமிய சமூக அடையாளத்தைக் கொண்டிருக்கும் பெயர்களும் புழக்கத்தில் இருந்தன.
உதாரணத்திற்கு : தம்பி மரைக்காயர், முத்து ராவுத்தர், செல்லக்கனி, செல்லாச்சி, முத்து நாச்சியார்….
அதேபோல பெருமானார் (ஸல்) அவர்களின் பெயருடன் அரபு பழங்குடிகளின் பெயரை வைத்திருந்தவர்களும் தமிழகத்தில் இருக்கத்தான் செய்கின்றனர்.
உதாரணத்திற்கு : ஹாஷிம், குரைஷி, மக்தூம், சவூது..
ஒரு முஸ்லிமுடைய பெயரின் பொருள் இஸ்லாமிய கொள்கையுடன் முரண்படக் கூடாது என்ற எச்சரிக்கையுடன் அவரவரின் இன மொழி கலாச்சார மரபுகளைத் தாங்கிய பெயர் வைத்துக் கொள்வது அந்தந்த நிலத்தில் அந்தந்த கண்டத்தில் வாழும் முஸ்லிம்களுக்கு அல்குர்ஆன் வழங்கியுள்ள “மூமினுரிமைச்” சட்டங்களில் ஒன்று.
இது உலகம் முழுவதும் பின்பற்றப்படும் முறைகளில் ஒன்று. இஸ்லாமிய மார்க்க அறிஞர்களும் இப்படி பெயர் சூட்டிக் கொள்கின்றனர்.
அரபி பெயர்களுடன் தமிழ்மணம் கமழும் பெயர்களை இணைத்து பிள்ளைகளுக்கு சூட்டுவதை இன்றைய படித்த தலைமுறை பெரிதும் விரும்ப வேண்டும்.
ஒரு மனிதனுடைய வாழ்வின் ஏற்ற இறக்கங்களில் அவனது பெயர் முக்கிய பங்காற்றுகிறது.
ராஜா முஹம்மது, மன்னர் முஹம்மது, கண்மணி முஹம்மது, அறிவழகர் அகமது, பேரரசர் மஹ்மூது…,
இறை நண்பர் இபுராஹிம், பேரழகர் யூஸுஃப், அகிலத்தின் அரசர் சுலைமான், ஆருயிர் நண்பர் அபுபக்கர், நீதி நெறியாளர் உமர், வீரத் தளபதி காலித், அன்பழகர் உஸ்மான், அறிவழகர் அலி…,
தாயின் தலைவி ஃபாத்திமா, சுவனத்தோழி ஆயிஷா, மாஹிரா மல்லிகை..,
பேரறிஞர் புகாரி, சட்டமேதை ஷாஃபிஈ, ஞானச்சுடர் கஸ்ஸாலி….,
இப்படி நபிமார்கள் நபித்தோழர்கள் தோழியர் இமாம்கள் ஆகியருடைய பெயர்களுடன் தமிழ் மணமிக்க உயர்ந்த பொருளுடைய முஸ்லிம் பெயர்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
பெயரை தேர்வு செய்யும் போது பொருளில் மட்டும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மற்றவை அனைத்தும் அல்லாஹ் நமக்கு வழங்கியுள்ள மூமினுரிமை அருட்கொடை.
-CMN SALEEM