உலகக்கோப்பை கால்பந்தாட்ட போட்டி 2034 இல் சவூதி அரேபியாவில் நடைபெற உள்ளது. இந்த வாய்ப்பை பெருமைமிக்கதாக கருதும் சவூதி அரசாங்கம் 21 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய நிகழ்வாக இதை நடத்திக் காட்ட வேண்டும் என்ற சூளுரையுடன் ஏற்பாடுகளை துவங்கியுள்ளனர்.
அடுத்த பத்தாவது ஆண்டில் நடைபெற உள்ள இந்த உலகத் திருவிழாவுக்கான கட்டமைப்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஏற்கனவே உள்ள 15 கால்பந்தாட்ட மைதானங்களின் புனரமைப்புப் பணிகள் துவங்கப்பட்டு புதிதாக 11 உலகத்தரமான மைதானங்களும் கட்டப்படவுள்ளன.
ரியாத், ஜித்தா, அபஹா, கோபர், நியோம் ஆகிய நகரங்களில் 48 நாடுகள் பங்கேற்கும் 104 போட்டிகள் நடைபெற உள்ளன.
2022 இல் கத்தார் நாடு சுமார் ரூ.20 இலட்சம் கோடி செலவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன. நிச்சயமாக அதைவிட கூடுதலாகத் தான் சவூதி அரசாங்கம் செலவு செய்யும்.
கட்டுமானம், பொறியாளர்கள், வடிவமைப்பாளர்கள், தகவல் தொழில்நுட்பம், ரியல் எஸ்டேட், தனியார் தங்குமிடங்கள், கஃபே, உணவகம், போக்குவரத்து, பாலைவனப் பயணங்கள் உள்ளிட்ட எண்ணற்ற துறைகளில் ஏராளமான தொழில் வாய்ப்புகள் உருவாகி வருகின்றன.
குறிப்பாக MSME என்ற சிறு குறு நடுத்தர வகை தொழில்களில் கணிக்க இயலாத வாய்ப்புகள் உருவாகியுள்ளன.
இந்த சந்தர்ப்பத்தை திறமையானவர்கள் துணிச்சலாக முடிவெடுப்பவர்கள் தளராத உழைப்பாளிகள் தொழில் சாம்ராஜ்யங்களை கட்டமைக்கும் வேட்கையுடையவர்கள் மிகச்சரியாக பயன்படுத்திக் கொள்வார்கள்.
அதேநேரம் எந்தெந்த துறைகளில் நமக்கான தொழில் முதலீட்டு வாய்ப்புகள் உருவாகி வருகிறது என்பதை வல்லுநர்கள் மூலம் கண்டறிந்து அந்த துறைசார்ந்தவர்களுக்கு பயிற்றுவிக்கும் வேலைகளை முஸ்லிம் சமுதாய அமைப்புகள் முன்னெடுக்க வேண்டும்.
சமுதாய அமைப்புகள் அடுத்த பத்தாண்டுகளுக்கு இதையே முழு ஈடுபாட்டுடன் செய்தால் சவூதியில் வாழும் தமிழக முஸ்லிம்களிலிருந்து மிகச்சிறந்த தொழில் ஆளுமைகள் உருவாகி வருவார்கள்.
எதிர்காலத்தில் அவர்கள் அரபுலக ஆட்சியாளர்களுடன் இணைந்து தொழில் செய்யும் சூழல் உருவாகலாம்.
சிந்தனை மாற்றமே சமூக மாற்றம்.
-CMN SALEEM