நண்பனே!

அஸ்ஸலாமு அலைக்கும்

நண்பனே!

ஆறுதல் அடைந்துகொள்… அனைத்துமே அல்லாஹ்வின் நியதியின் படியே நடக்கிறது.

உனக்கு வலிப்பதாக இருப்பினும் அல்லாஹ்வின் அனைத்து நியதிகளிலும் நலவிருக்கின்றன.

நீ ஒன்றை விடாப்பிடியாகப் பிரார்த்தித்திருப்பாய்..

ஆனால், அவன் உனக்கு அதனைத் தரமாட்டான். அதுஉனக்குள் கவலையை ஏற்படுத்தும்

நீயும் ஒரு சிறுபிள்ளையைப் போலத்தான் அதுஉனக்குத் தெரியாமல் இருக்கலாம்

அப்பிள்ளை பல நிறங்களிலான மருந்து வில்லைகளைக் கண்டால் அவற்றைக் கேட்டு அழும்.

என்றாலும், தாய் தடுத்து விடுவாள். ஏனெனில், தாய்க்கு நன்றாகவே தெரியும். குழந்தை விரும்புகின்றவற்றில் தீங்கு இருக்கின்றது என்பது.

அல்லாஹ் தடுப்பவற்றிலும் பெறுகை (பலன் – நன்மை) இருக்கிறது.

உனக்கு நெருக்கமான ஒருவரை நீ இழக்கலாம். அல்லாஹ் ஒன்றை எடுப்பது இன்னுமொன்றைத் தருவதற்காக என்பதை நீ அறியாதிருக்கலாம்.

ஹிழ்ர், ஒரு சிறுவனைக் கொன்றார். வெளிப்படையில் பார்க்கும்போது இதுவொரு பாரிய குற்றம். இப்படித்தான் மூஸா (அலை) அவர்களும் நினைத்தார்கள்.

அச்சிறுவனின் பெற்றோர்கள் நிச்சயம் கவலைப்பட்டிருப்பார்கள். பிறகுதான் இதற்குப் பின்னாலுள்ள சூட்சுமம் வெளிப்பட்டது. அவர் கொல்லப்பட்டதில் மிகப் பெரும் அருள் இருந்தது.

அல்லாஹ் உனதுஉலகத்திலிருந்து உனதான ஏதோ ஒன்றை எடுப்பான். அதன் மூலம் உனது மார்க்கத்தைப் பாதுகாக்க.

நண்பனே!

அல்லாஹ் அனைத்தையுமே ஞானத்துடனும் அருளுடனுமே திட்டமிடுகிறான். அது எப்படி என்பத எமக்குக் கற்பனை கூட பண்ண முடியாது

ஏனெனில், நாம் குறும்பார்வை கொண்டவர்கள். எமது சிந்தனை, யோசனைகளுக்கு ஒரு அளவுதான் செல்ல முடியும். அனைத்திலும் ஒரு சிறு பகுதியை மாத்திரம் தான் நாம் காண்கிறோம்.

அல்லாஹ்வைப் பொருத்தவரை அவன் அனைத்தையும் முழுமையாகப் பார்க்கிறான்.

கப்பல் துளையிடப்பட்ட போது அந்த ஏழைகளுடன் நீயும் இருந்திருந்தால், ‘எமது கஷ்டத்துக்கு வறுமை போதாதா?! வாழ்வாதாரமாக இருந்த கப்பலும் துளையிடப்பட வேண்டுமா?!” என்று நீயும் கேட்டிருப்பாய்.

ஆனாலும், துளையிடப்பட்டதால் மன்னன் கப்பலைக் கொள்ளையிடாமல் விட்டதையும் நீ கண்டிருப்பாய்.

அப்போதுதான் அல்லாஹ்வின் அருளை நீ உணர்வாய். கப்பலை முழுமையாக இழப்பதை விட அதில் துளையிடப்பட்டது ஒப்பீட்டளவில் பிரச்சினையில்லை.

பெரியதிலிருந்து காக்க சிறியவற்றின் மூலம் சோதித்த அல்லாஹ் தூய்மையானவன்.

நண்பனே!

ஏதேனும் ஒன்று அல்லாஹ்வோடு தொடர்புபட்டதாக இருப்பின் அதில் ஒழுக்கத்துடன் நடந்துகொள்.

நீ தாயின் கருவறையில் இருக்கும்போது உனக்கு உணவைக்கொண்டு வந்து சேர்த்தது யார் என்பதை மறந்துவிட்டாயா ?

நீ கைக் குழந்தையாக இருக்கும் போது உன் மீது தாயின் இரக்கத்தை ஏற்படுத்தியது யார் என்பதை மறந்து விட்டாயா ?

அரசனுக்கு பணிவிடை செய்யும் ஒரு பணிப் பெண்ணாகவல்லவா தாய் உன்னைப் பார்த்துக்கொண்டாள்.

நீ வளர்ந்து பெரியவனாவதற்காக எப்படி உனது தந்தை உழைத்தார் என்பதை நீ மறந்து விட்டாயா? அவரது ஈரக்குலையாக உன்னை ஆக்கியது யார்?
உனக்காக உழைக்க தனது இரத்தத்தை வியர்வையாக மாற்ற பூரண தயார் நிலையில் அவரை வைத்தவன் யார்? என்பதை நீ உன்னையே கேட்டுப் பார்க்கவில்லையா ?

அல்லாஹ்தான் அனைத்துக்கும் காரணம் அவன் உன்னை விட்டும் தேவையற்றவன். ஆனால், உன்னில் பொடுபோக்கானவன் அல்ல.

உன்னில் தேவையற்ற பலமானவன். என்றாலும், உன்னை எப்போதும் தன் பக்கம் அழைப்பு விடுப்பவன். இவையனைத்தையும் நீ மறந்துவிட்டாயா? நிலைமை இப்படியிருக்க நீ விரும்பாத ஏதேனும் ஒரு விடயம் உனக்கு நேர்ந்துவிட்டால், அலுத்துக்கொள்கிறாயே!

காலத்தின் சுழற்சியைப் பார். நேர காலத்துடன் உனக்கு விளங்காதவைகள் பலதும் பின்னர் உனக்கு விளங்கும்.

உன்னிடமிருந்து எடுத்தது உனக்குத் தருவதற்காக, உன்னைச் சோதனைக்குள்ளாக்கியது உன்னில் சில விடயங்களைத் திருத்துவதற்காகத்தான், ஒரு விடயத்திலிருந்து உன்னை இன்னுமொரு விடயத்தை நோக்கித் திருப்பியது முதலாவதை விட இரண்டாவது சிறந்தது என்பதற்காகத்தான் என்பதைப் புரிந்துகொள்வாய்.

உன்னிதயத்திற்கு சாந்தி உண்டாகட்டும்!!

அறபு : அத்ஹம் ஷர்காவி

தமிழ் : இம்தியாஸ்