கலை இலக்கிய ஆளுமைகள்

சேயன் இப்றாஹீம்

  • கவிக்கோ அப்துல் ரகுமான்

தமிழ் இலக்கியத்திற்கு முஸ்லிம்கள் மிகப்பெரும் பங்காற்றியுள்ளனர். கடந்த 300 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 375குறிப்பிடத்தக்க முஸ்லிம் புலவர்களும், கவிஞர்களும் இருந்திருக்கின்றனர்.

தமிழில் ஞான இலக்கியங்கள் தொடங்கி சிற்றிலக்கியங்கள் வரை இவர்கள் படைத்துள்ளனர்.

இந்த புலவர்கள், கவிஞர்களின் வரிசையில் வந்தவர் தான் கவிக்கோ அப்துல் ரகுமான். புதுக்கவிதையினை பெருமளவு மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்த பெருமை இவருக்குண்டு.

இதனாலேயே இவரைப் புதுக்கவிதையின் பிதாமகன் என்று அழைக்கின்றனர்.

9.11.1937 அன்று மதுரையில் உருதுவை தாய் மொழியாகக் கொண்ட ஒரு குடும்பத்தில் பிறந்தார்.

கவிக்கோ அப்துல் ரகுமானின் தந்தையார் மஹதி அவர்களும் ஒரு மிகச் சிறந்த எழுத்தாளராகவும், இதழாசிரியராகவும், நாவலாசிரியராகவும், வரலாற்று ஆய்வாளராகவும் விளங்கியவர்.

அந்தப் புலிக்குப் பிறந்தது பூனையாகவில்லை. அதைவிடவும் வேகமும் வீரியமும் கொண்ட புலியாகவே இருந்தது.

கவிக்கோ எட்டாம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கும் போதே கவிதைகள் எழுதத் தொடங்கிவிட்டார். உங்களுக்குள் இருந்த கவித்துவத்தை எப்போது கண்டு கொண்டீர்கள்? என்ற கேள்விக்கு

“உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த நேரம்

சொற்களில் எல்லாம் அவள் சந்தச் சலங்கையின் சாராய சப்தம் கேட்கத் தொடங்கியது.

பூச்சரங்களிலெல்லாம் அவள் புன்னகையின் போதை என்னை விரகத்தோடு அழைத்தது.

எனக்குப் பைத்தியம் பிடித்தது. உளற ஆரம்பித்தேன்.

கேட்டவர்கள் கவிதை என்றார்கள்.
இப்படித்தான் நான் காணாமல் போய் அவளைக் கண்டு கொண்டேன்” என்று குறிப்பிடுகின்றார்.

மதுரை தியாகராயர் கல்லூரியில பயின்று கொண்டிருந்த போது அவர் முழுக் கவிஞராக ஆகிவிட்டார். பின்னர், வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிய போது அவர் தமிழ் கூறும் நல்லுகம் அறிந்த மிகப்பெரும் கவிஞராக உருவெடுத்தார்.

அக்கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது உருது “முஸாயிரா” பாணியில் “கவிராத்திரி” என்ற கவியரங்கத்தை மாதந்தோறும் நடத்தினார். அதில் பல மாணவர்களும், இளைஞர்களும் புதுக்கவிதை பாடிட வாய்ப்பு அளித்தார்.

இந்தக் கவியரங்குகளில் வறட்டுத் தலைப்புகளில் யாப்புக் கவிதைகளை வாசிக்கும் பழக்கத்தை மாற்றி புதுமையான தலைப்புகளில் கவிஞர்கள் கவிதை வாசிக்க ஊக்குவித்தார்.

இந்த கவிராத்தி மூலம் ஏராளமான கவிஞர்களை அவர் உருவாக்கினார். இது குறித்து கவிஞர் வாலி குறிப்பிடுவதாவது…

”அரும்பும் கவிஞர்களை நீ

ஊக்குவிக்கின்றாய்

உன் போல் ஊக்குவிக்க

ஒருவன் இருந்தால்

ஊக்கு விற்கும் ஆள் கூடத்

தேக்கு விற்பான்”

இந்தக் காலகட்டத்தில் ஜுனியர் விகடன், முத்தாரம், பாக்யா, சாவி, குங்குமம், ராணி, குமுதம் போன்ற பல்வேறு இதழ்களில் பல்வேறு தலைப்புகளில் புதுக் கவிதைகளையும் வசன கவிதைகளையும் அவர் எழுதினார்.

இது தமிழ் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அவரது கவிதைகளை வாசிக்கின்ற, நேசிக்கின்ற பெரும் இலக்கிய ஆர்வலர்கள் கொண்ட ஒரு கூட்டம் உருவாகியது.

அதிலும் குறிப்பாக ஜுனியர் விகடன் வார இதழில் “இது சிறகுகளின் நேரம்” என்ற தலைப்பில் 100 வாரங்கள் தொடர்ந்து அவர் எழுதிய கட்டுரைகள் அவருக்குப் புகழை மட்டுமல்ல, புதுக் கவிதைக்கே ஒரு அங்கீகாரத்தையும் மரியாதையையும் பெற்றுத்தந்தது.

“அக்கட்டுரைகளில் அவர் புதுக் கவிதையின் பல்வேறு வடிவங்களையும் விளக்கியதோடு, புகழ்பெற்ற உருது, பாரசீக, அரபுக் கவிஞர்களின் சிறந்த கவிதைகளை மொழி பெயர்த்து அதில் இடம் பெறச் செய்தார். சர்ரியலிசம், கஜல், ஹைகூ ஆகிய புதிய கவிதை வடிவங்களை தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

1959ஆம் ஆண்டு தியாகராயர் கல்லூரியிலும் பின்னர் வாணியம்பாடி இஸ்லாமியா கல்லூரியிலும் தனது கவியரங்கப் பணியைத் தொடர்ந்த அவர், பல ஆண்டுகள் கவியரங்கக் கதாநாயகனாகத் திகழ்ந்தார்.

1967ஆம் ஆண்டு முத்தமிழ் அறிஞர் கலைஞர் தலைமையில் நடைபெற்ற கவியரங்கம் ஒன்றில் அவர் கலந்து கொண்டது ஒரு பெரிய திருப்பு முனையாக அமைந்தது. அதில் தொடங்கி பல கவியரங்குகளில் கலைஞருடன் கலந்து கொண்டார். இந்தக் கவியரங்குகளுக்கு மிகப் பெரிய அங்கீகாரம் கிடைத்தது. கலைஞர்-கவிக்கோ கூட்டணி தோல்வியடையாத வெற்றிக் கூட்டணியாகவே திகழ்ந்தது.

கவிக்கோவின் உரைநடையும் ஈர்ப்பு மிக்க வசன நடையாகவே இருந்தது. இது குறித்து முனைவர் தெ.ஞானசுந்தரம் “நாம் அப்துல் ரகுமானின் கட்டுரைகளைப் பலமுறை படித்திருக்கிறோம். அவை உண்மையில் கட்டுரைகள் அல்ல. கட்டுரைகள் எனும் விலாசம் தாங்கிய கவிதைகள். உரை என்னும் திரைக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் கவிதை முகங்கள்” என்று குறிப்பிடுகின்றார்.

“தமிழ்ப் புதுக்கவிதை வரலாற்றில் எழுத்துக் காலம்,

வனம்பாடிக் காலம், அடுத்து அப்துல் ரகுமான் காலம்

என்று ஓன்று பதிவாக வேண்டுமென கவிஞர் ”தமிழ் நாடன்” குறிப்பிடுகின்றார்.

பல்வேறு இதழ்களில் அவர் எழுதிய கவிதைகளும் கவியரங்குகளில் அவர் வாசித்த கவிதைகளும் நூல்களாக வெளிவந்துள்ளன. அவையாவன.

1. பால் வீதி – 1974

2. நேயர் விருப்பம் – 1978

3. சுட்டு விரல் – 1989

4. ஆலாபனை -1995

5. பித்தன் – 1998

6. விதைபோல் விழுந்தவன் – 1998

7. முத்தமிழின் முகவரி – 1998

8. மின் மினிகளால் ஒரு கடிதம் – 2004

9. ரகசியப்பூ – 2005

10. பறவையின் பாதை – 2006

11. இறந்ததால் பிறந்தவன் – 2007

12. தேவகானம் – 2011

13. கண்ணீர்த் துளிகளுக்கு முகவரி இல்லை – 2012

14. கவிக்கோ கவிதைகள் – 2013

15. கவிதை ஒரு ஆராதனை – 2014

இவற்றுள் “ஆலாபனை” என்ற புதுக் கவிதைத் தொகுப்பிற்கு 1999 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது அவருக்கு வழங்கப்பட்டது.

இனி, கவிக்கோவின் கவிதைகள் சிவற்றைப் பார்ப்போம்…

அவரது முதல் நூலான “பால் வீதி” யில் சர்ரியலிசம் என்ற கவிதை வடிவத்தில் பெரும்பாலான கவிதைகள் அமைந்துள்ளன.

“மின்னல்” என்ற கவிதையில் அவர் கையாண்டிருக்கும் படிமத்தின் அழகு நம் நெஞ்சை அள்ளுகிறது. “மின்னல்” குறித்து அவர்

வான உற்சவத்தின்
வாண வேடிக்கை

முகிற்புற்று கக்கும்

நெருப்புப் பாம்புகள்

கருப்பு உதட்டின்

வெளிச்ச உதறல்

இடிச் சொற்பொழிவின்

சுருக்கெழுத்து – என்று கூறுகின்றார்.

“முதுமை” குறித்து நேயர் விருப்பம் நூலில்” அவர்

“யெளவன வெள்ளம்
வடிந்து போன பின்

எஞ்சியுள்ள நுரை

மூச்சுக் குதிரை

ஒடிக் களைத்துத்

தள்ளிய நுரை” என்றும்

“நிமிஷக் கரையான்

அரித்த ஏடு

ஞாபகங்களின்

குப்பைக் கூடை

இறந்த காலத்தையே பாடும்

கீறல் விழுந்த இசைத்தட்டு

வியாதிகளின்

மேய்ச்சல் நிலம்” என்று குறிப்பிடுகின்றார்.

காதல் ஆணவக் கொலைகள் மலிந்திருக்கும் இந்நாளில் கவிக்கோவின் இக்கவிதை காதலின் எதிரிகளுக்குத் தக்கதொரு கேள்வியை எழுப்புகின்றது.

வேலிக்கு வெளியே

தலை நீட்டிய என்

கிளைகளை வெட்டிய

தோட்டக்காரனே

வேலிக்கு அடியில்

நழுவும் என் வேர்களை

என்ன செய்வாய் ? (பால் வீதி)

மென்மை

மென்மையாகப் பேசுங்கள். மக்களை வார்த்தைகளால் காயப்படுத்தாதீர்கள். எப்போதும் புன்முறுவலுடன் இருங்கள். இதனால் நீங்களும் பலன் பெறுவீர்கள் மற்றவர்களும் பலனடைவார்கள் என்கிறார் கவிக்கோ இந்தப் பாடலில்

உன் வார்த்தையும்

ஒருவனுக்கு

தாகம் தணிக்கலாம்

உன் புன்னகையும்

ஒருவன் உள்ளத்தில்

விளக்கேற்றலாம் (ஆலாபனை)

ஊக்கமே உயர்வு

வாழ்க்கையில் துயரங்களைச் சந்திக்கின்ற போது சோர்வடையக் கூடாது. தோல்வியை எண்ணித் துவண்டு விடாமல் வெற்றியை நோக்கித் தொடர்ந்து முன்னேற வேண்டும். அதற்கு கவிக்கோ கூறும் ஆலோசனை என்ன?

காயம்படும் ஓலைதான்

சுவடியாகிறது.

காயம் படும் கல்தான் சிலையாகிறது

காயம் படும் மூங்கில் தான்

கானம் பாடுகிறது (பித்தன்)

பற்று வரவு

மானுட வாழ்வில் பிறப்பும், இறப்பும் இயல்பாக வருவன. வாழுகின்ற காலத்தில் நம்மால் முடிந்த அளவுக்கு பிறருக்கு உதவி வாழ வேண்டும். இறக்கின்ற போது நாம் எந்ந நினைவையும் கொண்டு செல்வதில்லை.

ஆனால் நம்மைப் பற்றிய நல்ல நினைவுகளை நாம் பிறரிடம் விட்டுச் செல்ல வேண்டும். கவிக்கோவின் இந்தக் கவிதை இறக்கின்ற ஒரு மனிதன் எதை விட்டுச் செல்ல வேண்டும் என்பதை விவரிக்கிறது.

மரணக் காற்றில்

ஒரு விளக்கைப் போல்

அணைந்து போகாதே!

ஒரு ஊது வத்தியைப் போல்

கொஞ்சம் நறு மணமாவது

விட்டு விட்டுப் போ!

உன் சாவில் சாம்பலை அல்ல

நெருப்பை விட்டுச் செல்

மண்ணில் ஒரு காயத்தை அல்ல

ஒரு மருந்தை விட்டுச் செல் (ஆலாபனை)

கவியரங்குகள்

கவிக்கோவின் கவிதை வாழ்க்கையில் கவியரங்குகளின் பணி மிக முக்கியமானது. மதுரை தியாகராயர் கல்லூரியில் தொடங்கிய அவரது கவியரங்க வாழ்க்கை அவரது மரணத்தோடு தான் முற்றுப் பெற்றது.

சன் தொலைக்காட்சி, விண் தொலைக்காட்சி உள்ளிட்ட பல தொலைக்காட்சிகளில் அவர் “கவியரங்குகள்” நடத்தி ஏராளமான இளம் கவிஞர்களை கவிதை பாட வைத்துள்ளார். அவரது கவியரங்குக் கவிதைகள் மிகவும் புகழ் பெற்றவை. அதில் சில துளிகளைத் தற்போது பார்ப்போம்.

காரைக்குடியில் ஆண்டு தோறும் நடைபெறுகின்ற கம்பன் விழாவிலே அவர் ஒரு முறை கலந்து கொண்டு “அனுமன்” என்ற தலைப்பில் கவிதை பாடினார்.

சீதையை மீட்பதற்காக இராமனுடன் சென்ற அனுமன்,
போரின் முடிவில் இலங்கையைத் தீவைத்து எரித்து அழித்தான் என்பது புராணம்.

இராவணன் ஒரு மிகச் சிறந்த சிவ பக்தன். நெற்றியில் தினந்தோறம் திருநீறு பூசுகின்ற பழக்கம் உடையவன்.

இந்தப் பின்னணியில் கீழ்க்கண்ட கவிக்கோவின் கவிதை வரிகளை வாசிக்க வேண்டும்.

“தென் இலங்கை வேந்தன்

திரு நீற்று பக்தனென்று

பொன் இலங்கை

தனை எரித்துப்

பொடியாக்கிக் தந்து விட்டேன்”

அனுமனே, தன்னைப் பற்றிப் பாடுவதாக அவர் புனைந்திருந்த இக்கவிதையில் இலங்கையை எரித்ததற்காக அவன் கூறுகின்ற காரணம் கற்பனையின் உச்ச பட்ச நிலையாகும்.

இராவணனைப் போரில் கொன்றாகி விட்டது. சீதையையும் மீட்டாகி விட்டது. பின் ஏன் இலங்கையை எரிக்க வேண்டும் என்று கேள்வி கேட்பவர்களுக்கு அனுமன் தருகின்ற பதில் இது தான் என்று கூறுகின்றார் கவிக்கோ! என்னே கற்பனை நயம்!

பல இஸ்லாமிய மேடைகளில் கவிக்கோ கலந்து கொண்டு கவிதைகள் பாடியுள்ளார். இஸ்லாம் குறித்தும், நபிகளாரின் சிறப்புகள் குறித்தும் அவர் புனைந்தளித்த கவிதைகள் முஸ்லிம்களை மட்டுமல்ல, அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறைஷியர்களின் கொடுமைகளைத் தாங்கவொண்ணாது மக்கா நகரிலிருந்து மதினா நகருக்குப் பயணம் புறப்பட்டுச் சென்றார்கள். இஸ்லாமிய ஆண்டான ஹிஜ்ரி இந்த நிகழ்விலிருந்து தான் தொடங்குகிறது. இதனைக் கவிக்கோ எப்படிப் பார்க்கிறார்.

“ஹிஜ்ரத் என்ன அற்புதம்

பயணம் போக காலம் பார்ப்பார்கள்

ஆனால் ஒரு பயணமே

புதிய காலத்தை உருவாக்கிய அதிசயத்தை

வானமே நீ பார்த்ததுண்டா? என்று கூறுகின்றார்.

இதற்கு முன்னர் ஒரு சமயம் மக்கா நகர் குறைஷியர்களின் கொடுமையிலிருந்து விடுபட நபிகளார் தாயிப் எனும் நகருக்குச் செல்கிறார்கள். ஆனால், அங்கும் அவர்களுக்கு வரவேற்பு இல்லை. கடும் எதிர்ப்புத் தான்.

அந்த நகரின் வழியே சென்ற போது அங்கிருந்த மக்கள் அவர்கள் மீது கற்களை எறிகிறார்கள். நபிகளாரின் உடலெங்கும் இரத்தம் வழிந்தோடுகிறது. அவர்களுக்கு இழைக்கப்பட்ட இந்தக் கொடுமை குறித்து கவிக்கோ ஒரு கவியரங்கில் பாடிய கவிதை இது…

தாயிப் வாசிகளே விந்தை மனிதர் நீவிர்,

அன்று ஒரு பூவின் மீதல்லவா

கல்லைச் சொரிந்தீர்,

வெல்வதாக நினைத்து

தோற்றுப் போனது நீங்களே

நீங்கள் வணங்கும் கற்களை அல்லவா

கருணை நபியின் காலில் பணிய வைத்தீர்?

சுருங்கக் கூறின் கவியரங்குகளை இலக்கியத் தரத்திற்கு உயர்த்திய பெருமை கவிக்கோவுக்கு உண்டு. அதனால் தான் கலைஞர் கருணாநிதி அவர்கள்

“கவிக்கோ அப்துல் ரகுமான்

கவியரங்கின் கலகலப்பு மனிதர்

பளபளப்பு இருக்கும் போது மட்டும்

நம் பக்கத்திலும்

பரபரப்பான நேரத்தில்

பலகாத தூரத்திலும்

இருப்பவரல்ல இந்த

எஃகுக் கவிஞர்” என்று புகழாரம் சூட்டினார்.

கவிக்கோவின் பாணி “புதுக்கவிதை என்றால் யாப்பிலிருந்து விடுபட்டு எழுதுவது” என்று தான் தமிழ்ச் சமுதாயத்தின் பொதுப்புத்தியில் போய்ச் சேர்ந்திருக்கிறது. ஆனால் உண்மை அதுவல்ல.

இது குறித்துப் புதுக்கவிதைக்காக வாதாடிய பல கவிஞர்கள் நிறையவே எழுதியிருக்கின்றனர். அவை எல்லாம் இன்றையத் தலைமுறைக்குத் தெரியவே இல்லை. எனவே, உரைநடைகளை மடக்கி எழுதி விட்டால் அது புதுக்கவிதை என்று ஒரு பிழையான கருத்தைக் கொண்டிருக்கின்றனர்.
கவிதைக்கு எதுகை, மோனையால் வந்து சேரும் சந்தம் (Rhyme) முக்கியமல்ல. ஆனால் மொழிக்கென்று ஒரு ஒலி நயம் (Rhythm) இருக்கிறது. அது புதுக்கவிதையில் இருக்கிறது” என்று விளக்குகின்றார். சி.சு.செல்லப்பா.
இந்த நுட்பமான வேறுபாட்டை அறிந்து கவிதைகள் எழுதியவர் கவிக்கோ.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அவர் புதுக்கவிதை வடிவில் எழுதத் திட்டமிட்டிருந்தார். அந்தக் கவிதை நூலுக்குப் “பாலை நிலா” என்று பெயரிட்டு அதனை எழுதுகின்ற முயற்சியிலும் ஈடுபட்டிருந்தார். எனினும் மரணம் அவரது முயற்சிக்கு முற்றுப் புள்ளி வைத்துவிட்டது கவிதை உலகிற்கு இது ஒரு பெரிய நட்டம் எனலாம்.

கவிதை உலகிற்குத் தான் ஆற்றிய தொண்டைப் பற்றி மிகப் பெருமிதத்துடன் குறிப்பிடும் கவிக்கோ

“இலட்சிய உலகத்தைச் சுட்டிக் காட்டும் திசை காட்டியாக,
பாதையின் வெளிச்சமாக,
உற்சாக மூட்டும் வழித்துணையாக,
இளைப்பாறும் சத்திரமாக,
பாதங்களின் காயத்தை ஆற்றும் மருந்தாக,
கண்ணீர் துடைக்கும் கையாக என் கவிதைகள் இருக்கின்றன. இருக்கும்” என்று எழுதியுள்ளார்.

கவிக்கோவுக்கு ஒரு மகன், ஒரு மகள் என இரு மக்கள் உள்ளனர். மகன் டாக்டர் அஷ்ரப் லண்டனில் இருக்கிறார். மகள் வஹிதா திருமணமாகி சென்னையில் வசித்து வருகிறார்.

கவிதையுலகில் முடிசூடா மன்னராக கவிக்கோ வலம் வந்தார். அவரது கவிதைகள் காலத்தையும் கடந்து நிற்கும் என்பது உறுதி.

மரணம்
சில நாட்கள் உடல் நலிவுற்றிருந்த கவிக்கோ 2.6.2017 வெள்ளிக்கிழமையன்று அதிகாலை 2 மணிக்கு மரணமுற்றார். அவரது ஜனாஸா 3.6.2017 அன்று சென்னை பனையூரிலுள்ள பள்ளிவாசலில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது துணைவியார் அவருக்கு முன்னரே மரணமடைந்து விட்டார்.