– சேயன் இப்ராகிம்
‘இன்றைக்கு மைனாரிட்டி சமூகத்திற்குப் பல இடங்களில் பாதுகாப்பற்ற நிலைமை ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது. உதாரணமாக, சென்னையில் இந்து மத விழா ஒன்று நடைபெற்றது. நல்லது தான். வரவேற்கிறேன். பாராட்டுகிறேன் பலரும் கலந்து கொண்டு அதிலே பேசினார்கள். எல்லாம் சரி. இந்து மதம் ஒரு உயர்வான மதம்தான். மனுதர்ம ஆட்சி பற்றி அவர்கள் புகழ்ந்து பேசுவது பற்றி எங்களுக்கு ஆட்சேபனை இல்லை.
ஆனால் அதற்கு முன்னர் நடைபெற்ற ஊர்வலத்தில் ‘பத்து பைசா முறுக்கு, பள்ளிவாசலை நொறுக்கு’ என்று கோஷங்களை எழுப்பிக் கொண்டு சென்றார்கள். இது தேவையா? இது இந்து மத விழாவா அல்லது இஸ்லாமிய மதத்தைத் துவேசிக்கும் விழாவா என்று சந்தேகம் ஏற்பட்டு விடுகிறது. பெரியவர் சங்கராச்சாரியார் இந்து மதத்தைப் பரப்பட்டும், அதிலே எங்களுக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை.
ஆனால் அந்த ஊர்வலத்தில் இஸ்லாமிய மதத்தைப் பற்றி துவேஷமான முழக்கஙக்ள் எழுப்பப்படுவதை அவர் அனுமதித்திருக்கிறாரா? ஊர்வலத்தில் பாதுகாவலாகச் சென்ற போலீசாரும் அதனை அனுமதித்திருக்கிறார்களா? அரசும் அனுமதிக்கிறதா? என்று தான் கேட்க விரும்பகிறேன்.’
இந்த பேச்சு : 8.3.1983 அன்று தமிழக சட்டமன்றத்தில் காவல்துறை மானியக் கோரிக்கை மீது நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகின்ற போது தான் இந்து முன்னணி போன்ற இந்துத்துவ அமைப்புகள் முஸ்லிம்களுக்கு எதிராகத் தமிழகத்தில் செய்து வருகின்ற வெறுப்புப் பிரச்சாரம் குறித்து கடையநல்லூர் சட்ட மன்ற உறுப்பினரான முஸ்லிம் லீகைச் சார்ந்த தென்காசி ஏ.சாகுல் கமீது சாகிப் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
முஸ்லிம் லீகின் முன்னணித் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்த அவரைப் பற்றித்தான் இந்த இதழில் பார்க்க விருக்கிறோம்.
இளமைப் பருவம்:
‘தென்காசி மேடை முதலாளி’ என தென் தமிழக முஸ்லிம்களால் அன்புடன் அழைக்கப்பட்ட மு.ந. அப்துல் ரகுமான் சாகிபின் இரண்டாவது புதல்வர் தான் சாகுல் கமீது. இவர் முஸ்லிம் லீகின் முன்னணித் தலைவராகவும் மாநிலங்களவை உறுப்பினராகவுமிருந்த பன்னூலாசிரியர் ஏ.கே. ரிபாயி சாகிபின் தம்பியாவார். தென்காசி மேடை முதலாளி மு.ந.அப்துல் ரகுமானும், காயிதே மில்லத்தும் சகலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மு.ந.அ – பாத்திமா பீவி தம்பதியினரின் மகனாக சாகுல் கமீது 8.4.1927 அன்று ஆடுதுறையில் பிறந்தார்.
தனது குழந்தைப் பருவத்தை ஆடுதுறையிலேயே கழித்த அவர் பின்னர் தென்காசியிலும், திருநெல்வேலியிலும் தொடக்கக் கல்வியையும், இடைநிலைக் கல்வியையும் கற்றுத் தேறினார். பாரம்பர்யமிக்க முஸ்லிம் லீக் குடும்பத்தில் பிறந்த அவர் இளமையிலேயே அக்கட்சியின் செயல்பாடுகளில் தன்னையும் இணைத்துக் கொண்டார். தென்காசி நகரில் மட்டுமின்றி மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் நடைபெற்ற முஸ்லிம் லீக் கூட்டங்களிலும், மாநாடுகளிலும், ஊர்வலங்களிலும் ஆர்வமாகக் கலந்து கொண்டார். படிப்படியாக கட்சியில் பல பொறுப்புகள் இவரைத் தேடி வந்தன.

1969ஆம் ஆண்டு இவரது தந்தையார் மு.ந.அ மாவட்ட முஸ்லிம் லீக் தலைவர் பொறுப்பிலிருந்து விலகியதும், இவரே மாவட்டத் தலைவராகத் தேர்ந்தெடுக்கபட்டார். மாவட்டமெங்கும் சுற்றுப் பயணங்கள் மேற்கொண்டு கட்சியை வலுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டார். 1983ஆம் ஆண்டு ஜுலை மாதம் 4, 5 தேதிகளில் மாவட்ட முஸ்லிம் லீகின் மாநாட்டை மேலப்பாளையம் நகரில் வெற்றிகரமாக நடத்தினார்.
இம் மாநாட்டின் போது காயிதேமில்லத் அவர்களின் பாராளுமன்ற உரைகளைத் தொகுத்து ‘காயிதே மில்லத் பேசுகிறார்’ என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டார். மாவட்ட முஸ்லிம் லீகில் மட்டுமின்றி மாநில லீகிலும் துணைத்தலைவராகவும், பொருளாளராகவும் பொறுப்பு வகித்தார்.
1945ஆம் ஆண்டு இவரது தந்தையாரால் தொடங்கப்பட்ட தென்னிந்திய இஷாஅத்துல் இஸ்லாம் சபையின் தலைவராகவும் 1969ஆம் ஆண்டு இவர் பொறுப்பேற்றார். 1986ஆம் ஆண்டு வரை அப்பொறுப்பில் நீடித்தார்.
நகர் மன்றத் தலைவர் : 2
1968ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் இவர் முஸ்லிம் லீக் வேட்பாளராக தென்காசியில் தனது சொந்த வார்டில் நின்று வெற்றி பெற்றார். இத் தேர்தலில் தி.மு.கவும், முஸ்லிம்லீகும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. தென்காசி நகர் மன்றத்தில் பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றிய தி.மு.க மற்றும் முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் சாகுல் கமீது சாகிபை நகர் மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர். நகரப் பஞ்சாயத்தாக இருந்த தென்காசி 1966ஆம் ஆண்டு நகர சபையாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று இவர் நகரசபைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதால், தென்காசி நகர சபையின் முதல் தலைவர் என்ற சிறப்பினைப் பெற்றார். (தென்காசிப் பஞ்சாயத்தின் முதல் தலைவராக இவரது தந்தையார் மு.ந.அ. 1923ஆம் ஆண்டு முதல் 1926ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது)
சாகுல் கமீது சாகிப் தனது பதவிக்காலத்தில் தென்காசி நகரில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றினார். தென்காசி நகரப் பேருந்து நிலையத்தைப் புதுப்பித்துக் கட்டியது, புகை வண்டி நிலையத்திற்கு செல்லும் சாலையை தரம் வாய்ந்ததாக அமைத்துக் கொடுத்தது ஆகியன இவரது பதவிக் காலத்தில் நடைபெற்ற குறிப்பிடத்தக்க பணிகளாகும்.
சட்டமன்ற உறுப்பினர் :
1979ஆம் ஆண்டு மத்தியில் மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதாக் கட்சி ஆட்சி கவிழ்ந்து அதன் பின்னர் பொறுப்பேற்ற சரண்சிங் ஆட்சியும் சில மாதங்களிலேயே கவிழ்ந்து அதன் பின்னர் அடுத்த ஆண்டு(1980) ஜனவரி மாதம் பாராளுமன்றத்திற்கு நடைபெற்ற பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியைப் பிடித்தது. இந்திரா காந்தி மீண்டும் பிரதமரானார்.
இந்தத் தேர்தலில், தமிழகத்தில் தி.மு.க, காங்கிரஸ், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு 39 பாராளுமன்றத் தொகுதிகளில் 37 ஐக் கைப்பற்றின. எம்.ஜி.ஆர் தலைமையில் அப்போது தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பிலிருந்த அ.தி.மு.கவுக்கு இரண்டு இடங்களே கிடைத்தன.
1980 பொதுத் தேர்தலின் போது பல மாநிலங்களில் ஆட்சிப் பொறுப்பிலிருந்த ஜனதாக் கட்சியும், தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பிலிருந்த அ.தி.மு.கவும் பெரும் தோல்வியைச் சந்தித்த காரணத்தால் அவை மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டன என்று கூறி மத்திய அரசு அரசியல் சட்டத்தில் 356வது பிரிவைப் பயன்படுத்தி தமிழகம் உள்ளிட்ட ஒன்பது மாநில அரசுகளைக் கலைத்து உத்தரவிட்டது. (1977ஆம் ஆண்டு மத்தியில் ஜனதாக் கட்சி கூட்டணி வெற்றி பெற்று மொரார்ஜி தேசாய் பிரதமரானதும் பல மாநிலங்களில் ஆட்சிப் பொறுப்பிலிருந்த காங்கிர° கட்சி பெரும் தோல்வியைச் சந்தித்ததைக் காரணம் காட்டி அந்த அரசுகளைக் கலைத்து உத்தரவிட்டார். அதற்குப் பதிலடி கொடுக்கும் விதத்திலேயே இந்திராகாந்தியும் செயல்பட்டார்) கலைக்கபட்ட தமிழக சட்டமன்றத்திற்கு 1980ம் ஆண்டு மே மாதம் தேர்தல் நடைபெற்றது.
இத் தேர்தலிலும் தி.மு.க, காங்கிரஸ் கூட்டணியில் முஸ்லிம் லீகும் இடம் பெற்றிருந்தது. லீகிற்கு ஒதுக்கப்பட்ட எட்டுத் தொகுதிகளில் ஒன்றான கடையநல்லூரில் அக்கட்சியின் வேட்பாளராக சாகுல் கமீது சாகிப் நிறுத்தப்பட்டார். அ.தி.மு.க சார்பில் எம்.கனி என்ற முஸ்லிம் வேட்பாளர் களத்தில் இருந்தார். கடும் போட்டியில் லீகின் வேட்பாளரான சாகுல் கமீது சாகிப் அ.தி.மு.க வேட்பாளரை விட 1880 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார். (வாக்குகள் விபரம் சாகுல் கமீது சாகிப் 38,225 – எம் கனி 36,345) இத் தேர்தலில் எட்டு தொகுதிகளில் போட்டியிட்ட முஸ்லிம் லீக் கடையநல்லூர் தொகுதியில் மட்டுமே வெற்றிபெற்றது.
முஸ்லிம் லீகின் முக்கியத் தலைவர்களான லத்தீப் சாகிப், பேரா. காதர் முகையதின் சாகிப், வந்தவாசி கே.ஏ. வகாப் சாகிப் ஆகியோர் வெற்றி வாய்ப்பை இழந்தனர். (அனைவரும் எதிர்பார்த்ததற்கு மாறாக, இத் தேர்தலில் தி.மு.க காங்கிரஸ் கூட்டணி பெரும் தோல்வியைச் சந்தித்து அ.தி.மு.க கூட்டணி வெற்றி பெற்று எம்.ஜி.ஆர் மீண்டும் தமிழக முதல்வரானார்) சட்டமன்றத்தில் முஸ்லிம் லீகின் ஒற்றை உறுப்பினராகயிருந்த சாகுல் கமீது சாகிப் சமுதாயப் பிரச்னைகளுக்காக உரக்கக் குரல் கொடுத்தார்.
அநேகமாக அனைத்து மானியக் கோரிக்கைகளிலும் கலந்து கொண்டு உரையாற்றுகின்ற வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அந்த வாய்ப்பை நன்முறையில் பயன்படுத்தி முஸ்லிம்களின் பிரச்னைகளுக்காக மட்டுமின்றி பட்டியலின மக்களின் பிரச்னைகளுக்காகவும் குரல் கொடுத்தார்.
அவர் பதவிப் பொறுப்பிலிருந்த போது தான் மீனாட்சிபுரம் மதமாற்றமும், புளியங்குடி கலவரமும் ஏற்பட்டன. அவை குறித்தும் சட்டசபையில் உரையாற்றினார். குறிப்பாகப் புளியங்குடி கலவரத்தில் பெரிதும் பாதிக்கபட்ட பட்டியலின மக்களுக்கு ஆதரவாகச் சட்டமன்றத்தில் பேசினார். ஏழை எளிய மக்களுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்குதல், குடிநீர்ப் பிரச்னை, கடையநல்லூர் நெசவாளர்கள் பிரச்னை, இலங்கைத் தமிழர் பிரச்னை எனப் பல்வேறு பிரச்னைகள் குறித்தும் சட்ட சபையில் மிக விரிவாகப் பேசியுள்ளார். அவரது சட்ட மன்றப் பணி அனைத்துத் தரப்பு மக்களாலும் பாராட்டப்பட்டது.
மீனாட்சிபுரம் மதமாற்றம்:
19.02.1981 அன்று திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டைத் தாலுகாவிலுள்ள மீனாட்சிபுரம் என்ற கிராமத்தைச் சார்ந்த நூற்றுக்கணக்கான பட்டியலின மக்கள் (180 குடும்பத்தினர்) ஆதிக்க சாதியினரின் கொடுமைகளைத் தாங்கவொண்ணாது இஸ்லாத்தில் இணைந்தனர். இம் மக்கள் அப் போது தென்னிந்திய இஷா அத்துல் இஸ்லாம்சபையின் தலைவராக இருந்த சாகுல் கமீது சாகிப்பை அணுகித்தான் தாங்கள் இஸ்லாத்தில் இணைவதற்கான நடைமுறைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனர். ஆனால், இதன் காரணமாக பிரச்னைகள் ஏற்படக் கூடும் எனக் கருதிய அவர் முதலில் அம்மக்களின் வேண்டுகோளை ஏற்கத் தயங்கினார். எனினும் அம்மக்கள் தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கவே, அவர்களை இஸ்லாத்தில் சேர்த்துக் கொள்வதற்குரிய நடைமுறைகளை நிறைவேற்றினார். அம்மக்கள் முஸ்லிம்களாயினர்.
எனினும் அவர் எதிர்பார்த்தது போவே இந்துத்துவ அமைப்புகள் இந்த மதமாற்றத்தை ‘இந்து மதத்தை அழிக்கும் சதி’ என்ற ரீதியில் தமிழகமெங்கும் பிரச்சாரத்தை மேற்கொண்டு சட்டம், ஒழுங்குப் பிரச்னையை ஏற்படுத்தின. முஸ்லிம் அமைப்புகள் பட்டியலின மக்களை வற்புறுத்தியும், பணம் கொடுத்தும், வெளிநாட்டு வேலை வாய்ப்புக் கிடைக்கும் என்ற ஆசை வார்த்தைகளைக் கூறியும் மதம் மாற்றியதாகப் பிரச்சாரம் செய்தனர்.
பிஜேபியின் அகில இந்தியத் தலைவர்கள், தமிழக பிஜேபி மற்றும் இந்து முன்னணித் தலைவர்கள் என அனைவரும் மீனாட்சிபுரம் கிராமத்திற்கு வருகை தந்து பரபரப்பான அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டிருந்தனர். இதனால் இது ஒரு தேசியப் பிரச்னையாக உருவெடுத்தது. தமிழகத்தில் அப்போதிருந்த எம்.ஜி.ஆர் தலைமையிலான அ.தி.மு.க அரசும் இந்த மதமாற்றத்தைக் கட்டாய மதமாற்றம் என்றும், இந்து மதத்தை அழிக்கும் சதி என்றும் கருதியது.
எனவே இந்த மதம் மாறிய மக்களுக்குப் பல்வேறு வழிகளிலும் உதவி செய்து கொண்டிருந்த தென்னிந்திய இஷா அத்துல் இஸ்லாம் சபையின் நடவடிக்கைகளையும் அதன் தலைவர் சாகுல் கமீது சாகிபையும் கண்காணிக்கத் தொடங்கியது. இந்துத்துவா அமைப்புகளைத் திருப்திப்படுத்த அவரைத் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யவும் தமிழக அரசு திட்டமிட்டிருந்தது.
இதனை முன்கூட்டியே அறிந்து கொண்ட மாநில முஸ்லிம் லீக் தலைவர் அப்துஸ்ஸமது சாகிப் கேரளத் தலைவர் சி.ஹெச்.முகம்மது கோயா சாகிபை அழைத்துக் கொண்டு அப்போதையப் பிரதமர் இந்திரா காந்தியை நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுத்து தமிழக அரசின் கைது முயற்சியைத் தடுத்து நிறுத்தினார். இந்த நெருக்கடிகளுக்கு மத்தியிலும்
சாகுல் கமீது சாகிப் தனது சகோதரர் ரிபாய் சாகிபுடன் இணைந்து மீனாட்சிபுரத்தில் இஸ்லாத்தில் இணைந்த மக்கள் மார்க்கக் கல்விபெறவும். அங்கு மதரஸா, பள்ளிவாசல் கட்டப்படவும், வேறு பல இஸ்லாமியப் பணிகள் நடைபெறவும் தொடர்ந்து துணை நின்றார்.
சமத்துவ சகோதரத்துவ சங்கம் (எஸ்.எஸ்.எஸ்)
மீனாட்சிபுரம் மதமாற்ற நிகழ்வுக்குப் பின்னர், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் சமூகப் பதற்றம் அதிகரித்தது. இந்துத்துவா அமைப்புளின் தூண்டுதல் காரணமாக சாதி இந்து அமைப்புகள் முஸ்லிம்கள் மீதும், பட்டியலின மக்கள் மீதும் வெறுப்பும் பகைமையும் கொள்ள ஆரம்பித்தன. இந்து முன்னணித் தலைவரான இராம கோபாலன் அந்தக் காலகட்டத்தில் தமிழகமெங்கும் பிரச்சாரம் மேற்கொண்டு ‘இந்துக்களே முஸ்லிம்கள் நடத்தும் வணிக நிறுவனங்களில் பொருட்களை வாங்காதீர்கள், அவர்களை புறக்கணியுங்கள்’ என்று பிரச்சாரம் செய்து வந்தார்.
இந்து முன்னணியின் ‘ஞானரதம் தென் தமிழகத்தை வலம் வரப்போவதாகவும் செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில் முஸ்லிம்களும், பட்டியலின மக்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியதன் தேவையை உணர்ந்த இரு தரப்பைச் சார்ந்த இளைஞர்களும், படித்தவர்களும் சாகுல் கமீது சாகிபை அணுகி ஒரு பொது அமைப்புத் தொடங்க வேண்டுமென வலியுறுத்தினர். இது சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் அவரின் தலைமையின் கீழ் 10.01.1982அன்று கடையநல்லூர் கலந்தர் மஸ்தான் தெருவிலுள்ள ஜக்கரியா முஸ்லிம் சங்கத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் இருதரப்பு மக்களும் இணைந்த ‘சமத்துவ சகோதரத்துவ சங்கம்’ தொடங்குவதென முடிவு செய்யப்பட்டது. இதன் அமைப்பாளராக சாகுல் கமீது சாகிபும், தலைவராக முஸ்லிம் லீக் பிரமுகர் வி.எஸ். கமருத்தீனும், செயலாளராகப் பட்டியலின வகுப்பைச் சார்ந்த இராமநாதனும் கொள்கை பரப்பு செயலாளராக அதே வகுப்பைச் சார்ந்த இராஜாவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த அமைப்பு சிறப்பான முறையில் செயல்படத் தொடங்கியது. எனினும் இந்துத்துவா அமைப்புகளால் இதனைப் பொறுத்துக் கொள்ள இயலவில்லை. ஏதாவது ஒரு பிரச்னையைக் கிளப்பிக் கலவரத்தைத் தூண்டுவதற்கு தக்க தருணத்தை அவர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.
8.06.1982 அன்று சமத்துவ சகோதரத்துவச் சங்கத்தின் சார்பில் கடையநல்லூரில் நடந்த சிறப்பு கூட்டத்தில் முஸ்லிம்லீகின் தமிழ் மாநிலத் தலைவர் சிராஜுல் மில்லத் அப்துல் ஸமது சாகிப், அகில இந்தியத் தலைவர் இப்ராகிம் சுலைமான் சேட் சாகிப் மற்றும் சாகுல் கமீது சாகிப் ஆகியோர் உரையாற்றினார். இதில் கலந்து கொள்வதற்காக புளியங்குடி பகுதியிலிருந்து வேன்கள் மூலம் கடையநல்லூர் வந்து கொண்டிருந்த பட்டியலின மக்கள் மீது சொக்கம்பட்டி என்ற ஊரில் கூடியிருந்த தேவரின இளைஞர்கள் கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். இதில் பட்டியலின மக்கள் பலருக்குக் காயமேற்பட்டது. இங்கு தான் கலவரத்திற்கான வித்து ஊன்றப்பட்டது. இக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய முஸ்லிம்லீக் தலைவர் இப்ராகிம் சுலைமான் சேட் சாகிப் ‘ முஸ்லிம்களும் பட்டியலின மக்களும் அரசியல் ரீதியில் ஒன்றுபட்டுச் செயல்பட்டால் இந்த நாட்டின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிவிடமுடியும்’ என்று கூறியிருந்தார்.
இந்தக் கூட்டம் நடந்த மறு நாள் 9.6.82 அன்று புளியங்குடியில் பட்டியலின மக்களுக்கும், தேவரின மக்களுக்குமிடையே மோதல்கள் ஏற்பட்டன. இதில் தேவரின மக்கள் பாதிக்கப்பட்டனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அதற்கு மறுநாள் 10.06.1982 அன்று புளியங்குடி சுற்று வட்டாரப் பகுதிகளைச் சார்ந்த தேவரின மக்கள் ஒன்று திரண்டு அருகிலிருந்த அய்யாபுரம் என்ற பட்டியலின மக்கள் நிறைந்து வாழ்கின்ற கிராமத்திற்குச் சென்று திடீர்த் தாக்குதலில் ஈடுபட்டனர். இத்தாக்குதலில் எட்டு பட்டியலின மக்கள் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து புளியங்குடிசுற்றுவட்டாரப் பகுதிகளுக்கும் கலவரம் பரவியது. புளியங்குடியில் பட்டியின மக்கள் மீது காவல்துறையின் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் இருவர் உயிரிழந்தனர். புளியங்குடியிலும் வாசுதேவநல்லூரிலும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான வணிக நிறுவனங்கள் தாக்கப்பட்டுச் சேதமுற்றன. வாசுதேவநல்லூரில் ஒரு முஸ்லிம் கொல்லப்பட்டார்.
கடையநல்லூர் பொதுக் கூட்டத்தில் சுலைமான் சேட் பேசியது தான் கலவரத்திற்குக் காரணம் என இந்துத்துவ அமைப்புகள் குற்றம் சாட்டின. குமுதம், துக்ளக் ஆகிய இதழ்களும் இதே ரீதியில் கருத்துக்களைத் தெரிவித்திருந்தன. கலவரம் நடந்து கொண்டிருக்கும்போதே சாகுல் கமீது சாகிப் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மூன்றுமாதகால சிறை வாசத்திற்குப் பின் அவர் விடுதலை செய்யப்பட்டார்.
இதன் பின்னர் இச்சங்கத்தின் செயல்பாடுகள் படிப்படியாகக் குறைந்து ஒரு கட்டத்தில் நின்று போனது.
இஸ்லாமியப் பேரவை:
1983ஆம் ஆண்டு சாகுல் கமீது சாகிப் சென்னையில் தமிழ் நாடு இஸ்லாமியப் பேரவை என்ற புதிய அமைப்பு ஒன்றைத் தொடங்கினார். இது கட்சி சார்பற்ற தொண்டு இயக்கம் என்றும் இதில் முஸ்லிம்கள் அனைவரும் சேர்ந்து பணியாற்றலாம் என்று அறிவித்தார்.
முஸ்லிம்லீகின் சட்டமன்ற உறுப்பினராகவும், மாவட்ட முஸ்லிம் லீக் தலைவராகவும் இருக்கும் அவர், இது போன்ற தனி அமைப்பு ஒன்றைத் தொடங்கியதை முஸ்லிம் லீகின் மாநிலத் தலைமை ஏற்கவில்லை. அதனை ஒழுங்கீனமான செயலாகக் கருதியது. முஸ்லிம்களுக்காக முஸ்லிம் லீக் இருக்கும் போது இன்னொரு அமைப்பு ஏன் என்று கேள்வி எழுப்பிது. இந்த அமைப்பைக் கலைத்து விடவேண்டுமென்றும் இல்லையெனில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மாநிலத் தலைமை அவரை எச்சரித்தது. ஆனால் அவர் இந்த அமைப்பைக் கலைக்க மறுத்து விட்டார்.
இதன் காரணமாக 1984ஆம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற கட்சியின் மாநில பொதுக் அவரை முஸ்லிம் லீகின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கியது. அப்போது அவர் சட்டமன்ற உறுப்பினராகவும், நெல்லை மாவட்ட முஸ்லிம் லீக் தலைவராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுப்பணிகள்:
கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பின்பு, அவர் பல்வேறு பொதுப்பணிகளில் ஈடுபட்டார். ‘இஸ்லாமிய இதயக்குரல்’என்ற மாத இதழைத் தொடங்கி அதில் தனது எண்ணங்களையும், கருத்துக்களையும் எழுதி வந்தார். நாட்டு நடப்புகளை விமர்சிக்கும் கேலிச் சித்திரங்களையும் அதில் இடம்பெறச் செய்தார். 1993 ஆம் ஆண்டு ‘இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு’ என்ற அமைப்பு ஒன்றைத் தொடங்கினார். அவ்வமைப்பின் தலைவராக அவரும், செயலாளர் பேராசியர் ஏ.அஷ்ரப் அலியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பாபரி மஸ்ஜித் இடிப்பிற்குப் பின்னர் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு முஸ்லிம்களிடையே அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சித்தது. அவர் மாவட்டமெங்கும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பல ஊர்களில் இதன் கிளைகளை நிறுவினார். இந்த அமைப்பின் சார்பாக ‘இஸ்லாமிய சகோதரத்துவக் குரல்’என்ற மாத இதழைத் தொடங்கி நடத்தி வந்தார். அதில் பெரும்பாலான அரசியல் சார்ந்த கட்டுரைகளை அவரே எழுதினார்.
24.09.1994, 25.09.1994 ஆகிய நாட்களில் முஸ்லிம் அனாதை நிலைய ஆதரவில் பாளையங்கோட்டையில் கல்வி விழிப்புணர்வு மாநாடு ஒன்று நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்த கல்வியாளர்கள் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர். இம் மாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவராக இருந்த அவர் மாநாடு வெற்றிகரமாக நடைபெறப் பாடுபட்டார்.
மேலும் சிறுபான்மையினர் கல்வி விழிப்புணர்வுக் கூட்டங்களை சென்னை, திருச்சி, மதுரை, கோவை, பாளையங்கோட்டை ஆகிய நகரங்களில் நடத்தினார். தனது சிறிய தந்தையாரால் தென்காசியில் தொடங்கப்பட்டு செயல்பட்டு வந்த காட்டுபாவா நடுநிலைப் பள்ளியின் தாளாளராகவும் பொறுப்புவகித்தார். நெல்லை மாவட்டத்திலுள்ள சில முஸ்லிம் ஜமாஅத்துகளில் பிரச்னைகள் ஏற்பட்டபோது அதில் தலையிட்டு சுமூகமாகத் தீர்த்து வைத்தார். இளமையிலேயே அவர் கவிதை எழுதும் ஆற்றல் பெற்றிருந்தார். நினைத்த மாத்திரத்தில் கவிதை எழுதி விடுவார். பொதிகைக் கவிஞர் என்ற சிறப்புப் பெயரும் அவருக்குண்டு.
அவரது கவிதைகள் இஸ்லாமிய இதயக்குரல் இதழிலும். பிற இஸ்லாமிய இதழ்களிலும் வெளிவந்தன. எனினும் அவை நூல் வடிவம் பெறவில்லை.
பண்பு நலன்கள்:
சாகுல் கமீது சாகிப் மிகுந்த நெஞ்சுரம் மிக்கவராகத் திகழ்ந்தார். யாருக்கும் அஞ்சாமல் தனது கருத்துக்களை எடுத்துரைத்து வந்தார். அவரது சில செயல்பாடுகள் விமர்சனங்களுக்கு உள்ளான போதிலும் அதனைப் பொருட்படுத்தாது தனது வழியில் சென்றார். எப்போதும் பச்சை நிற ஆடைகளையே உடுத்துவார். பச்சை நிறத் தொப்பி, பச்சைத் துண்டு, பச்சைப் பேனா என இஸ்லாமிய நிறமான பச்சை மீது இச்சை கொண்டிருந்தார்.
முடிவுரை:
சாகுல் கமீது சாகிப்பிற்கு 1951 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. துணைவியார் பெயர் சாராபீவி.
இத்தம்பதியினருக்கு முகம்மது இப்ராகிம், முகம்மது இஸ்மாயில் ஆகிய இரு புதல்வர்களும், ரபக் ஜமால் பாத்திமா, ஜமால் ஹமீதா பானு ஆகிய இரு மகள்களும் உண்டு. மூத்த புதல்வர் இப்ராகிம் பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரியில் பணியாற்றுகிறார். தென்காசி காட்டுபாவா உயர்நிலைப் பள்ளியின் தாளாளராகவும் பொறுப்பு வகிக்கிறார். இளையவர் அப்பள்ளியின் தலைமை ஆசிரியராகப் தற்போது பணியாற்றி வருகிறார்.
தனது வாழ்க்கையின் பிந்தியக் காலகட்டத்தில் சாகுல் கமீது சாகிப் தென்காசியிலேயே வசித்து வந்தார். அந்நகரில் பல்வேறு பொதுப்பணிகளிலும் ஈடுபட்டு வந்தார். சில காலம் உடல் நலிவுற்றிருந்த அவர் 14.04.2002 அன்று மரணமுற்றார். அவரது வாழ்க்கையே போராட்டமாக இருந்தது. அவரை ஒரு சமுதாயப் போராளி என்று அழைப்பதே பொருத்தமானது.
நன்றி: தகவல்கள் அளித்திட்ட சாகுல் கமீது சாகிபின் புதல்வர் முகம்மது இப்ராகிம் மற்றும் சமத்துவ சகோதரத்துவ சங்கத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளராயிருந்த கடையநல்லூர் இராஜா ஆகியோருக்கு.
கட்டுரையாளருடன் தொடர்பு கொள்ள … 99767 35561