முதல் தலைமுறை மனிதர்கள் 13

– சேயன் இப்ராகிம்

இஸ்லாமிய மார்க்க அறிஞர்

மௌலவி M. அப்துல் வஹாப் சாகிப்

கத்தோலிக்க சமய பீடத்தின் தலைமையகமான வத்திகன் நகரில் 1985 ஆம் ஆண்டு மே மாதம் 6, 7 தேதிகளில் நடைபெற்ற ஒரு சமயக் கருத்தரங்கில் இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், அமெரிக்கா உள்ளிட்ட 10 நாடுகளைச் சார்ந்த கிருஸ்துவ மற்றும் இஸ்லாமிய அறிஞர்கள் கலந்து கொண்டனர். தமிழ் நாட்டிலிருந்து இந்தியப் பிரதிநிதிகளுடன் அம் மாநாட்டிற்குச் சென்ற மார்க்க அறிஞர்களில் அவரும் ஒருவர். மாநாட்டில் கலந்து கொண்ட கிறிஸ்துவ பாதிரியார்கள் “I am the father of London city church,” “I am the father of Paris Town city church,” “I am the father of Newyork city church,” என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டபோது, தமிழகத்திலிருந்து சென்ற இந்த மார்க்க அறிஞரோ தன்னை அறிமுகப்படுத்தும் போது “I am the father of Seven Children ,”என்று கூறவே ஒட்டு மொத்த மாநாட்டு அரங்கமும் சிரிப்பலைகளால் ஆர்ப்பரித்தது.

இம்மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய சில கிறிஸ்தவப் பாதிரியார்கள் முஸ்லிம் அறிஞர்களை நோக்கி ‘உங்களது நபியை அழகிய முன்மாதிரி என்று கூறுகிறீர்களே, நீங்களும் ஏன் அவர்களைப் போல் ஒன்பது, பத்து மனைவிகளை மணந்து கொள்ளக்கூடாது? என்று குதர்க்கமாகக் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளிக்கும் விதமாக அந்த இஸ்லாமிய மார்க்க அறிஞர் தனது உரையினூடே கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டார்.

‘எங்களது நபி அவர்கள் கொண்டு வந்து எங்களுக்கு வழிகாட்டித் தந்த அருள்மறை குர்ஆன் தான் நாங்கள் முதலாவதாகப் பின்பற்ற வேண்டிய சட்டநூலாகும். உண்மையில் அது ஒன்றுக்கு மேற்பட்ட வாழ்க்கைத் துணைவியரை திருமணம் செய்ய விழையும் போது எங்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதிப்பதோடு அதனைத் தவிர்க்க வேண்டுமென்ற நோக்கில் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியருடன் நீங்கள் நீதியாக நடப்பது இயலாத காரியம் என்றும் கூறுகின்றது. ஆனால் கிறிஸ்துவ மதத்தின் புனித ஏற்பாட்டில் (பைபிளில்) புனைந்துரைக்கப்பட்டிருக்கும் கதைகள் இல் வாழ்க்கைக்குப் புறம்பான சல்லாப நிகழ்வுகளை விவரிக்கின்றன. இன்று கிருஸ்துவ மதத்தைப் பின்பற்றும் மேலை நாடுகளிலுள்ள குடும்பங்களில் நடக்கும் கூத்துக்களை நான் கூறத் தொடங்கினால் இந்த அவை சினத்தைக் கக்கும். அல்லது சிரிப்பில் திளைக்கும். மேலை நாடுகளின் கேந்திரமான அமெரிக்காவில் நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கில் திருமணங்களும், திருமண முறிவுகளும், கற்பழிப்புகளும், காதல் களியாட்டங்களும் நடக்கின்றன. மேலை நாடுகளில் குடும்ப வாழ்க்கை முற்றிலும் சீர்குலைந்து போயிருப்பதாக அன்றாடம் செய்தித் தாள்கள் மற்றும் பிற ஊடகங்கள் மூலம் அறிய வருகிறோம். அவ்வாறெல்லாம் ஆகக்கூடாது என்பதற்காகத் தான் எங்கள் அருள்மறை குர்ஆனும், அண்ணல் நபி(ஸல்) அவர்களும் ஒன்று அல்லது இரண்டு அல்லது மூன்று அல்லது உச்சகட்டமாக நான்கு மனைவியரை மணமுடிக்கும்படி வரையறை செய்து வாழ்க்கையை இனிதாக வகுத்தளித்துத் தந்துள்ளது”

இப்படி அம்மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய அந்த தமிழக மார்க்க அறிஞர் வேறுயாருமல்ல. 1970, 1980, 1990 களில் தமிழக இஸ்லாமிய மேடைகளை தனது கருதாழமிக்க சொற்பொழிவுகளால் பொலிவுறச் செய்த மௌலவி எம்.அப்துல் வஹாப் M.A., B.Th அவர்கள்தான்.

இளமைப் பருவம்:

மௌலவி எம்.அப்துல் வஹாப் சாகிப் 29.5.1920 அன்று அன்றைய திருவாங்கூர் சமஸ்தானத்திற்கு உட்பட்டிருந்த செங்கோட்டையில் (இன்றைய திருநெல்வேலி மாவட்டம்) இஸ்மாயில் – மரியம் தம்பதியினரின் மகனாகப் பிறந்தார். தந்தையார் இஸ்மாயில் பர்மா சென்று அங்கு வணிகம் செய்து வந்தார். எனினும் இரண்டாம் உலகப்போரின் போது பர்மாவின் தலைநகரான ரங்கூனை ஜப்பானியப் படைகள் குண்டு வீசித் தாக்கி அதனைக் கைப்பற்றியபோது ஏராளமான தமிழர்கள் அந்நகரை விட்டு வெளியேறி கால்நடையாகவே கல்கத்தா வழியாக தாயகம் திரும்பினார். அப்படித் திரும்பியவர்களில் ஒருவர்தான் இஸ்மாயிலும் ஒருவர். நல்ல வருமானம் தந்த வணிகத்தை அப்படியே விட்டு விட்டு வந்ததால் அன்றாட வாழ்க்கையை ஓட்டுவதற்கே இஸ்மாயில் சாகிப் சிரமப்பட்டார். இந்நிலையில் அப்துல் வஹாப் சாகிபின் இளமைப் பருவம் வறுமையிலேயே கழிந்தது என்பதைச் சொல்லவும் வேண்டுமோ!

தனது தொடக்க மற்றும் இடைநிலைக் கல்வியை செங்கோட்டையிலிருந்த பள்ளிகளிலேயே கற்றுத் தேறிய அவர், திருவனந்தபுரத்திலுள்ள மகாராஜா கல்லூரியில் சேர்ந்து இன்டர் மீடியட் படித்தார். பின்னர் ஊரிலிருந்த சில நல்லெண்ணம் கொண்டோரின் உதவி பெற்று சென்னை சென்று அங்கிருந்த கவர்ன்மெண்ட் முகம்மதன் கல்லூரியில் சேர்ந்து இஸ்லாமிய இயலில் பட்டப் படிப்புப் படித்தார். பின்னர் உ.பி. மாநிலம் அலிகரிலுள்ள புகழ்பெற்ற முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து முதுகலை பட்டப்படிப்பையும் இஸ்லாமிய இறைமையியல் பட்டப்படிப்பையும் படித்து முடிந்தார்.

எழுத்துப்பணி:

மௌலவி அப்துல் வஹாப் சாகிப் இளமையிலேயே எழுதுவதில் ஆர்வம் கொண்டவராகத் திகழ்ந்தார். எழுத்தாளர் ஹஸன் ஆர்வமூட்டியதன் பேரில் முதன் முதலாக ஆனந்தவிகடன் வார இதழுக்கு சிறுகதை ஒன்று எழுதி அனுப்பினார். ‘மூன்றாம் கேள்வி’ என்ற தலைப்புக் கொண்ட அச்சிறுகதை அவ்விதழில் வெளியானது. பின்னர் தொடர்ந்து குமுதம் போன்ற இதழ்களிலும் கதை, கட்டுரைகள் எழுதினார். இவர் எழுதிய முதல் சரித்திரக் கதையினை நாராண. துரைக்கண்ணன் என்பவர் நடத்தி வந்த பிரசன்ட விகடன் என்ற இதழ் வெளியிட்டது. சுதேசமித்திரன் பத்திரிகையில் இஸ்லாமிய நூல்கள் குறித்த மதிப்புரைகளைத் தொடர்ந்து எழுதி வந்தார். திருப்பத்தூர் நூர்முகம்மது நடத்திய ‘கதிர்’ என்ற மாத ஏட்டின் ஆசிரியர் குழுவிலும் சில காலம் இருந்தார். ‘டெக்கான் ஹெரால்டு’ என்ற ஆங்கில நாளிதழில் “Talking Point” என்ற தலைப்பில் அப்போதைய நாட்டு நடப்புகளை எழுதினார். காயிதேமில்லத் அவர்களால் தொடங்கப்பட்ட ‘முஸ்லிம்’ நாளேட்டின் தலையங்க ஆசிரியராகச் சிலகாலம் பணியாற்றினார். சிராஜுல் மில்லத் அப்துஸ்ஸமது சாகிப் 1951 ஆம் ஆண்டு மணிவிளக்கு மாத இதழைத் தொடங்கிய போது அதன் ஆசிரியர் குழுவில் இவரும் இருந்தார். அந்த இதழில் திருக்குர்ஆனின் சிறப்புக்கள் குறித்து ‘தித்திக்கும் திருமறை’ என்ற தலைப்பில் தொடர் ஒன்று எழுதினார். அவரது சகோதரியின் புதல்வரான மீரான் 1956 ஆம் ஆண்டு ‘பிறை’ என்ற மாத இதழைத் தொடங்கிய போது அதன் பொறுப்பாசிரியராகப் பணியாற்றினார். அந்த இதழிலும் ‘தித்திக்கும் திருமறை’ த் தொடரை எழுதி வந்தார். இந்தத் தொடர் வாசகர்களிடையே பெருத்த வரவேற்பைப் பெற்றது. இது பின்னர் நூலாக வெளிவந்தது. இந்த நூலுக்குத் தமிழக அரசு சிறப்பு விருது வழங்கியது குறிப்பிடத்தக்கதாகும். நல்மணிகள் நால்வர், நவீன இப்னு பதூதா, சுவர்க்கத்துக் கவிஞன், மாநபியின் மகளார், Wisdom of Quran, இஸ்லாமிய மேதைகள் ஆகியன இவர் எழுதிய பிற நூல்களாகும்.

அல்லாமா இக்பாலின் ஷிக்வா ஜவாபே ஷிக்வா என்ற உருது நெடுங்கதையைத் தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டார். இவரது எழுத்துப் பணிகளுக்குச் சிகரம் வைத்தாற் போல் அமைந்திருப்பது இஸ்லாமியத் தத்துவ மேதை இமாம் கஸ்ஸாலியின் ‘இஹ்யாவு உலூமித்தீன்’ என்ற மாபெரும் நூலை இவர் தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டதாகும். பல்வேறு தலைப்புகளில் இது 26 நூல்களாக வெளி வந்து வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இன்றைக்கும் இந்த நூல்கள் பல பதிப்புகளைக் கண்டு சாதனைகள் நிகழ்த்தி வருகின்றன.

1980 ஆம் ஆண்டு குமுதம் வார இதழில் பேராசிரியர ஓக் என்ற இந்துத்துவ வரலாற்றாசிரியர் தாஜ்மகால் ஒரு இந்துக் கோயிலாக இருந்ததாகவும், மொகலாய மன்னர் ஷாஜஹான் அந்த கோயிலில் பெருமளவு மாற்றங்கள் செய்து அதனை தனது மனைவியின் கல்லறையாக்கி விட்டதாகவும் எழுதியிருந்தார். பேராசிரியர் ஓக்கின் இந்த வரலாற்றுத் திரிபு வாதங்களை மறுத்து மௌலவி அப்துல் வஹாப் சாகிப் அதே குமுதம் இதழில் அடுத்து எழுதிய கட்டுரையில் தாஜ்மகால் மாமன்னர் ஷாஜஹானால் கட்டப்பட்டதே என்பதை வரலாற்று ஆதாரங்களுடன் நிறுவியிருந்தார்.

திருக்குர்ஆனின் பதினான்காம் நூற்றாண்டு மலரையும் இவர் தொகுத்து வெளியிட்டார். இது ஒரு அரிய களஞ்சியமாக இன்றைக்கும் கருதப்படுகின்றது. பிற எழுத்தாளர்கள் எழுதிய பல நூல்களுக்கு மதிப்புரைகள் எழுதியுள்ளார்.

தோப்பில் முகம்மது மீரான், அதிரை அகமது, எம்.ஏ. அக்பர், ஆளூர் ஜலால், ஷேக்கோ போன்ற முஸ்லிம் எழுத்தாளர்களைப் பெரிதும் ஊக்குவித்தார். அவர்களது படைப்புகளை ‘மணிவிளக்கிலும்’, ‘பிறை’யிலும் இடம் பெறச் செய்து அவர்களது எழுத்துத் திறமையினை உலகறியச் செய்தார்.

சொற்பொழிவாளர்:

மேடையில் இவர் தான் ஏறின்

மிக்குயர் பேச்சாளர்கள்

தாடையில் கை வைக்கத்தான்

தடையில்லாதவராய் ஆவர்.

கூடையில் விரித்த பூக்கள்

கொடியிலே ஏறிக் கொள்ள

ஓடையில் இறங்கும் நீரும்

உயரேறும் இவரின் பேச்சால்

இப்படி மௌலவி அப்துல் வஹாப் சாகிபின் பேச்சாற்றலைப் புகழ்ந்தேத்துகின்றார் தத்துவக் கவிஞர் இ.பத்ருதீன்.

ஆம் மௌலவி அப்துல் வஹாப் ஒரு சிறந்த எழுத்தாளர் மட்டுமல்ல ஒரு மிகச் சிறந்த பேச்சாளராகவும் திகழ்ந்தார். முப்பது, நாற்பது ஆண்டுகளாக இவரது கருத்தாழமிக்க உரைகளால் இஸ்லாமிய மாநாடுகளும், கருத்தரங்குகளும், மீலாது நிகழ்ச்சிகளும் வலிவும் பொலிவும் அடைந்தன. தமிழகத்தின் எந்த ஒரு மூலை முடுக்கில் இஸ்லாமிய மாநாடுகள் நடந்தாலும் அங்கு இவர் இருப்பார். இவரது உரையினைக் கேட்பதற்கென்றே ஒரு ரசிகர் கூட்டம் இருந்தது என்றால் மிகையல்ல.

தமிழ் மட்டுமின்றி ஆங்கிலம், மலையாளம், உருது, அரபி ஆகிய மொழிகளிலும் எழுதவும் பேசவும் வல்லமை பெற்றிருந்தார். தமிழகம் மட்டுமின்றி மலேசியா, சிங்கப்பூர், பர்மா, அரபு நாடுகள், அமெரிக்கா என உலகின் பல பகுதிகளுக்கும் சென்று அங்கு நடைபெற்ற சமய மாநாடுகளிலும், மீலாதுக் கூட்டங்களிலும் கலந்து உரையாற்றியிருக்கிறார். இவர் கலந்து கொண்ட கூட்டங்களின் எண்ணிக்கை 3500யைத் தாண்டும்.

இவரது உரைகள் பெரும்பாலும் இஸ்லாமிய சமயம், இஸ்லாமிய அரசியல், பொருளியல் ஆகிய விஷயங்களைச் சுற்றியே இருக்கும். 2002 ஆம் ஆண்டு துபாயில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் ’Time and Distance’ என்ற தலைப்பில் இவர் ஆற்றிய உரை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். எல்லையற்ற காலம், பிரபஞ்ச அமைப்பில் அமைந்துள்ள தூரத்தின் பரிமாணம் ஆகிய இந்த இரண்டையும் இறைவனின் ஆற்றலுடன் இணைத்து இவர் ஆற்றிய உரை அனைவரையும் கவர்ந்திழுத்தது. (இதுவே இவரது இறுதி உரையாகவும் அமைந்தது)

சமயப் பணிகள்:

மௌலவி சாகிப் இஸ்லாமிய சமயப் பணிகளில் பெரும் ஆர்வம் கொண்டிருந்தார். சென்னை மண்ணடியிலுள்ள K.T.M. மன்ஸிலிலும், மஸ்ஜிதே மாமூர் பள்ளிவாசலிலும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் குர்ஆன் விரிவுரை வகுப்புகள் நடத்தி வந்தார். மௌலான மௌலவி K.M. நிஜாமுதீன் பாகவி ஹழ்ரத் அவர்களுடன் இணைந்து குர்ஆன் தர்ஜுமா வெளியிட்டார். திருக்குர்ஆன் அருளப் பெற்று 1400 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி தமிழகமெங்கும் குர்ஆன் மாநாடுகள் நடைபெற்றன. இம்மாநாடுகள் பலவற்றில் இவர் கலந்து கொண்டு திருக்குர்ஆனின் சிறப்புகளை விரிவாக எடுத்துரைத்தார். பேராசிரியர் திருவை. அப்துல் ரகுமானின் திருக்குர்ஆன் ஒலி நாடா வருவதற்குப் பெரிதும் துணைபுரிந்தார். தன்னுடன் பணியாற்றிய, தான் சந்திக்கின்ற பிற சமய நண்பர்களிடம் இஸ்லாமிய சிறப்பியல்புகளை எடுத்துக் கூறுவார். திருக்குர்ஆன் தற்காலத்திற்குப் பொருந்தாது என தி.மு.க தலைவர்களில் ஒருவரான நாவலர் நெடுஞ்செழியன் சென்னையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசியபோது அவரை நேரில் சந்தித்து விளக்கமளித்தார்.

இலக்கிய ஈடுபாடு:

இஸ்லாமிய இலக்கியத்தில் அவர் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். இஸ்லாமிய இலக்கியம் குறித்து சென்னை வானொலியில் இவர் ஆற்றிய உரை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். ஒருமணி நேரம் ஆற்றிய அவ்வுரையில் உலக, இந்திய, தமிழக முக்கிய இஸ்லாமிய இலக்கியங்கள் அனைத்தையும் கோடிட்டுக் காட்டியுள்ளார். இவ் உரையில் இமாம் கஸ்ஸாலி அவர்கள் குறித்து அவர் குறிப்பிட்டிருந்தாவது :-

”இஹ்யாவுல் உலூம் (கல்வி ஞானங்களின் உயிர்ப்பு) கீமியாயே ஸஆத்த (பேரின்ப ரசவாதம்) போன்ற அரும் பெரும் நூல்களை யாத்த இமாம் கஸ்ஸாலி அவர்களை “அல் கேஸில்” என்று பெயரிட்டுப் போற்றி அவர்களது தத்துவ விளக்கங்களால் மேலை நாடுகள் பெரிதும் பயனடைந்தன. மனுக்குலம் முழுவதும் தோற்றுவித்த இலக்கியத்தின் பட்டியலைத் தொகுத்துப் பார்த்தால், அதிலும் இமாம் கஸ்ஸாலியின் பங்கு கணிசமாயிருக்கும். அனைத்துலக அறிஞர் குழாம் போற்றிப் புகழுமாறு சீரருமைத் திறம் படைத்த சிந்தனைச் சிற்பியாக, பேரொளி அகத்தே பெற்ற பேச்சாளராக, அறிஞர்மொழி அரபியிலும், விந்தை மொழி பார்சியிலும் ஆயும் திறன் படைத்த ஆசிரியராக, ஒப்பாரும் மிக்காரும் இல்லாத எழுத்தாளராக, மக்களை மட்டுமல்லாமல் பிராணிகளையும், பறவைகளையும் கூட நேசித்த நெஞ்சுடையவராக, தூய வாழ்வு வாழ்வதற்காக துறவறம் பூணும் அளவுக்கு நெறி பிறழாத நிறை நீதராக, கற்றோரையும், மற்றோரையும் களிப்படையச் செய்யும் கருத்துக் கருவூலமாக, அறிவுலகத்தின் அணைந்திடாப் பேரொளியாக இன்றும் விளங்கும் இமாம் கஸ்ஸாலியின் அரபி மொழியிலான நூல்களை மொழி பெயர்த்து வெளியிடும் பணியில் ஐக்கிய நாடுகள் சபையின் கலாச்சாரப் பிரிவு முதல் நூலாக ‘யா அய்யுஹல் வலது’ (குழந்தையே) என்னும் புத்தகத்தின் மொழி பெயர்ப்பை வெளிக் கொணர்ந்துள்ளது.’

தமிழகத்தில் இயங்கி வரும் இஸ்லாமிய இலக்கியக் கழகத்திலும் அவர் ஈடுபாடு கொண்டிருந்தார். 1978ஆம் ஆண்டு ஜனவரி மாதம் காயல்பட்டினத்தில் நடைபெற்ற அனைத்துலக இஸ்லாமிய இலக்கிய மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

சமூக உறவு:

மௌலவி சாகிப் பட்டப் படிப்பு முடிந்ததும் இந்தியத் தபால் – தந்தித் துறையின் தணிக்கைப் பிரிவில் தணிக்கையாளராக 1943ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தார். அரசுப் பணியில் இருந்து கொண்டேதான் அவர் எழுத்துப் பணியையும், பேச்சுப் பணியையும், சமயப் பணியையும் தொடர்ந்தார். அரசுப் பணி, பொதுப்பணி என இந்த இரண்டு பணிகளுக்கும் பாதிப்பு இல்லாமல் தனது செயல்பாடுகளை கவனமாக வகுத்துக் கொண்டார். எனவே அவருக்கு அரசுப் பணியில் எந்தவிதமான பிரச்சனையும் ஏற்படவில்லை. முஸ்லிம் அரசியலில் அவருக்கு மிகுந்த நாட்டம் இருந்த போதிலும், வெளிப்படையான கட்சி அரசியலில் அவர் ஈடுபடவில்லை. எனினும் முஸ்லிம் லீக் தலைவர்களான கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் இஸ்மாயில் சாகிபு, சிராஜுல் மில்லத் அப்துல் சமது சாகிப் ஆகியோருடன் மிகுந்த நல்லுறவும் தோழமையும் கொண்டிருந்தார். மனத்தளவில் அவர் ஒரு முஸ்லிம் லீகராகவே இருந்தார். 1978ஆம் ஆண்டு இலாகா பணியிலிருந்து ஓய்வு பெற்ற உடன் அப்போதையத் தமிழ் மாநில முஸ்லிம் லீகின் தலைவர் சிராஜுல் மில்லத் அப்துல் சமது சாகிப் முன்னிலையில் அக்கட்சியில் உறுப்பினராகச் சேர்ந்தார். தனது ஆயுட் காலம் முடியும்வரை முஸ்லிம் லீக்கிலேயே தொடர்ந்து இருந்து வந்தார். கட்சியில் அவருக்குப் பதவிகள் வழங்கப்பட்ட போதும் அதனை ஏற்க மறுத்து ஒரு தொண்டராகவே இருந்தார்.

பள்ளப்பட்டி நகரில் பொதுக் கல்வியும், மார்க்கக் கல்வியும் இணைந்து கற்பிக்கும் வண்ணம் தொடங்கப்பட்ட உஸ்வத்துல் ஹஸனா மகளிர் ஓரியண்டல் பள்ளிக் கூடத்தின் ஆரம்ப கட்டச் செயல்பாடுகளில் மௌலவி சாகிப் வழிகாட்டியாக இருந்து உறுதுணை புரிந்ததாக அந்தப் பள்ளியில் 19 ஆண்டுகள் தலைமையாசிரியராகப் பணியாற்றிய பேராசிரியை கமருன்னிஸா பேகம் தெரிவிக்கின்றார்.

மாநில வக்ப் வாரியத்தின் உறுப்பினராகவும் சென்னையிலுள்ள சில பள்ளிவாசல்களின் பொறுப்பாளராகவும் பதவிகள் வகித்துள்ளார்.

ஆளுமைப் பண்புகள்:

அழகிய தொப்பி, வெளுத்த மீசை, தாடி, ஊதா நிறக்கோட்டு, வெள்ளைப் பேண்டு, கட்சூ – இவை தான் மௌலவி சாகிபின் தோற்றப் பொலிவாகும். எப்போதும் புன்னகையுடன் இருப்பார். அவர் மிகச் சிறந்த அறிஞராகத் திகழ்ந்தபோதிலும், மிகுந்த தன்னடக்கத்துடன் இருப்பார். தன்னுடைய பேச்சிலோ, எழுத்திலோ ஏதேனும் தவறு இருப்பதாக யாரேனும் சுட்டிக் காட்டினால் அதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுத் திருத்திக் கொள்வார். அதே நேரத்தில் யாரேனும் தவறான கருத்தை எழுதினால் அல்லது பேசினால் அதனைச் சுட்டிக் காட்டவும் தயக்க மாட்டார். பொது நிகழ்ச்சிகளிலும், மாநாடுகளிலும் மௌலவி சாகிப் கடைசிப் பேச்சாளராகத்தான் அழைக்கப்படுவார். இருப்பினும் ஆரம்பத்திலேயே மேடைக்கு வந்து அமர்ந்து மற்றவர்கள் பேசுவதையும் கவனமாகக் கேட்பார். உரையை நிறைவு செய்ததும் அவர்கள் தெரிவித்த நல்ல கருத்துக்களுக்குப் பாராட்டுத் தெரிவிப்பார். தவறான செய்திகளையும், விழாவுக்குப் பொருத்தமில்லாத தகவல்களையும் தெரிவிக்கின்ற பேச்சாளர்களிடம் அவற்றை நயமாகச் சுட்டிக் காட்டுவார். கொடுக்கப்பட்ட தலைப்பில் நின்று அது சம்பந்தமான ஆழ்ந்த கருத்துக்களைப் பேச வேண்டும் என விரும்புவார். இஸ்லாமியத் தத்துவ அறிஞர் இமாம் கஸ்ஸாலி அவர்கள் மீது மிகுந்த பற்றுக் கொண்டவராகத் திகழ்ந்தார்.

இஸ்லாமிய சமயக் கடமைகளைப் பேணுவதில் அவர் மிகுந்த கண்ணும் கதுத்துமாக இருப்பார். ஒரு முறை சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அப்போதைய ஜனாதிபதி ஜெயில்சிங் ஆற்றிய உரையை மொழிபெயர்க்கும் பணி மௌலவி சாகிப்பிற்கு வழங்கப்பட்டிருந்தது. மாலையில் நடைபெற்ற அந் நிகழ்ச்சியில் ஜனாதிபதி 10 நிமிடங்கள் மட்டுமே பேசுவர் என அவருக்குத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் பேசத் தொடங்கிய ஜனாதிபதி பத்து நிமிடங்களையும் தாண்டி உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தார். அப்போது மகரிப் தொழுகைக்கான நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. ஜனாதிபதியின் உரையை மொழி பெயர்த்துக் கொண்டிருந்த மௌலவி சாகிப் இடையிடையே தனது கைக்கடிகாரத்தையும் பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் ஜனாதிபதி பேச்சை நிறுத்துவதாகத் தெரியவில்லை. அப்போது மௌலவி சாகிப் ஜனாதிபதியிடம் ‘மாண்புமிகு ஜனாதிபதி அவர்களே, முஸ்லிம்களாகிய நாங்கள் கட்டாயமாகத் தொழ வேண்டிய குறைவான நேர இடைவெளியேயுள்ள மக்ரிப் தொழுகை தொழ வேண்டும். எனவே நான் இத்துடன் என் பொறுப்பிலிருந்து விடைபெற்றுக் கொள்கிறேன். மன்னிக்கவும் என்று கூறி விட்டு மேடையிலிருந்து இறங்கித் தொழுகைக்குச் சென்று விட்டார். எந்தச் சூழ்நிலையிலும் தொழுகையைத் தவற விட்டு விடக்கூடாது என்பதில் அவர் கண்ணும் கருத்துமாக இருந்தார் என்பதையே இந்நிகழ்ச்சி எடுத்துக் காட்டுகிறது.

ஒருமுறை ஒரு ஊரில் நடைபெற்ற மீலாது விழாவில் கலந்து கொண்ட அவருக்கு விழா முடிந்ததும் அவ்வூர் செல்வந்தர் ஒருவரின் வீட்டில் விருந்தளிக்கப்பட்டது. அப்போது அவருக்கு வெள்ளிக்கிண்ணம் ஒன்றில் மாதுளைச்சாறு வழங்கப்பட்டது. இதனைக் கண்ட அவர் வெள்ளிப் பாத்திரத்தில் பருகுவது நபிகளின் வழி முறைக்கு முரண்பட்டது என்று கூறி அதனை அருந்த மறுத்துவிட்டார். பின்னர் சாதாரணக் குவளையில் பழச்சாறு கொடுக்கப்பட்டபோது தான் அதனை அருந்தினார்.

பொறுப்புகள் – பதவிகள்:

மௌலவி சாகிப் சக எழுத்தாளர்களிடம் நல்லுறவு கொண்டிருந்தார். அவரது அலுவலகத்திலேயே பி.எஸ். கல்யாணராமன், பாலசுப்பிரமணியன், கோமதி சுவாமிநாதன், லூர்துநாதன் ஆகிய மிகச் சிறந்த எழுத்தாளர்கள் இருந்தனர். எழுத்தாளர் அமைப்புகளுடனும் அவர் தொடர்பு கொண்டிருந்தார். தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் துணைத் தலைவராகவும், இந்திய நூலாசிரியர் சங்கத்தின் துணைத் தலைவராகவும் பதவிகள் வகித்துள்ளார். 28.9.1992 அன்று இலங்கையின் தலைநகர் கொழும்புவில் நடைபெற்ற விழா ஒன்றில் இவருக்கு ‘செய்குத் தர்ஜுமா’ என்ற பட்டம் வழங்கப்பட்டது.

குடும்பம்: அப்துல் வஹாப் சாகிபிற்கு முகம்மது இஸ்மாயில் ஜின்னா, அப்துல் ஹக், தாஹா இப்ராகிம் புகாரி, கஸ்ஸாலி, முகம்மது சித்தீக் என ஐந்து மகன்களும் இரண்டு மகள்களும் உண்டு. மக்கள் அனைவரும் பல்வேறு பொறுப்புகளும் பதவிகளும் வகித்து வாழ்வாங்கு வாழ்ந்து வருகின்றனர்.

முடிவுரை:

சில நாட்கள் உடல் நலிவுற்றிருந்த அப்துல் வஹாப் சாகிப் தனது 82 வது வயதில் 26.12.2002 அன்று மரணமுற்றார். ‘நம்முடைய நேசத்திற்குரிய ஒவ்வொருவரின் பிரிவிலும் நம்மில் ஒரு பகுதியை இழந்து விடுவதாகவே தெரிகிறது. எனினும், மழை நின்ற பிறகும் இலைகளிலிருந்து சொட்டும் நீர்த்துளிகளைப் போல சிலரின் மறைவுக்குப் பின்னரும் நம் நெஞ்சங்களை நனைக்கும் நினைவுத் துளிகள் நம் வாழ்வை வளப்படுத்தவே செய்கின்றன. அத்தகைய மாமழை போன்று உலகைச் செழிக்கச் செய்த மவ்லானா அவர்களை நமக்குத் தந்த இறைவனுக்கே எல்லாம் புகழும்’ என்று அவரது நினைவைப் போற்றும் வண்ணம் குறிப்பிடுகின்றார் அவரது புதல்வர் அப்துல்ஹக். அவரது கருத்துக்களை நாமும் வழிமொழிகிறோம். மௌலவி அப்துல் வஹாப் சாகிப் தமிழகம் கண்ட மிகச் சிறந்த மார்க்க அறிஞர்களில் ஒருவர். பலருக்கும் அவர் வழி காட்டியாகத் திகழ்ந்தார். அவரது வாழ்க்கையில் அனைவருக்கும் ஒரு சிறந்த முன் மாதிரி இருக்கின்றது.

ஆதார நூல்: திரியெம் பப்ளிஷர்ஸ் வெளியிட்டுள்ள ‘அல்லாமா அப்துல் வஹாப் சாகிப் நினைவுத் தொகுப்பு’ என்ற நூல்.

கட்டுரையாளருடன் தொடர்பு கொள்ள … 99767 35561