அபு அப்துல்லா முகமது இப்னு பதூதா (கி.பி. 1304 – கி.பி. 1369)

“அல்குர்ஆன் மனிதர்களை பூமியில் பயணம் செய்து அல்லாஹ்வின் ஆற்றல்களையும், அற்புதங்களையும் பார்க்குமாறு மனிதனுக்கு கட்டளை இடுகிறது”
இந்த கட்டளையை ஏற்று நாடுகாண் பயணத்தில் முறியடிக்க முடியாத சாதனையை நிலைநாட்டியவராக வரலாற்றில் இடம் பிடித்துள்ளார் இப்னு பதூதா.
இப்னு பதூதா வாழ்கைக் குறிப்பு
மத்திய காலத்தின் நாடுகாண் பயணியான இவர் 1304 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி மொரோக்கோ நாட்டின் டேன்ஜீர் நகரில் பிறந்தவர். சிறுவயதில் குர்ஆனை மனனம் செய்தவர். சட்டத்துறை மீது இருந்த ஆர்வத்தால் மாலிகி சட்டத்துறையில் நிபுணராக பட்டம் பெற்றவர் என மத்திய கால வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.
இப்னு பதூதா உலகில் அங்கீகரிக்கப்பட்ட சிறந்த நாடுகாண் பயணி என்று இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு “Glimpses of World History-க்லீம்செஸ் ஆப் வேர்ல்ட் ஹிஸ்டரி” என்ற புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

இப்னு பதூதா வடக்கு ஆப்பிரிக்கா, மேற்கு ஆப்பிரிக்கா, தெற்கு ஐரோப்பா. கிழக்கு ஐரோப்பா, இந்தியத் துணைக் கண்டம், ஆசியா, தென்கிழக்கு ஆசியா, சீனா ஆகிய நான்கு திசைகளிலும் பரந்திருந்த பகுதிகளுக்கு பயணம் செய்துள்ளார். இவர் 44 நாடுகள், 11000 நாட்கள், 75000 மைல்கள் என மிக நீண்ட பயணம் செய்துள்ளார். தான் சென்ற நாடுகளைப் பற்றிய தகவல்களை துல்லியமாக தனது புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார்.

புனித ஹஜ் பயணம்
இப்னு பதூதா தனது இருபதாவது வயதில் மக்கா நகரை நோக்கி புறப்பட்டார். இதுவே அவரது வாழ்வில் முதல் பயணமாக கருதப்படுகிறது. மக்காவுக்கான அவரது பயணம் ஆறு மாதமாக அமைந்திருந்தது. மொரோக்கோவில் இருந்து பயணத்தை ஆரம்பித்த அவர் துனிசியாவின் பிஜாஹியா நகரத்திற்கு வியாபாரக் கூட்டத்துடன் இணைந்து பயணமானார். 3500 கிலோமீட்டர் தூரம் பயணித்ததன் பின்னர் எகிப்தின் அலெக்ஸாண்ட்ரியா நகரைச் சென்றடைந்தார். இந்த சந்தர்ப்பத்தில் எகிப்தின் அலெக்ஸாண்ட்ரியா நகரம் மம்லுகிய ஆட்சியாளர்கள் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது.

எகிப்தின் பல்வேறு இடங்களுக்கு பயணித்த போது ஷேக் பக்ருதீன் மற்றும் இமாம் அபுல் ஹஸன் அலீ ஷாதுலி போன்ற பலதுறைகளைச் சேர்ந்த இஸ்லாமிய அறிஞர்களை சந்தித்தார். ஷேக் பக்ருதீன் அவர்களின் சந்திப்பு அவரின் நாடுகாண் பயணித்திற்கு தூண்டுதலாக அமைந்ததாக வரலாற்றுத்துறை பேராசிரியர் H.A.R. கிப் அவர்கள் TRAVELS OF IBNU BADUDA என்ற நூலில் குறிப்பிடுகிறார்.
கெய்ரோ நகரில் இருந்து இரண்டு வழிகளில் மக்கா நகரம் செல்வதற்கான வாய்ப்பு இருந்தது. முதலாவது செங்கடலின் வழியாக கப்பலில் பயணிப்பது, இரண்டாவது டமாஸ்கஸ் வழியாக ஜெருசலம் சென்று மக்காவை அடைவது.
இமாம் அபுல் ஹஸன் அலீ ஷாதுலி அவர்கள் கப்பல் மூலமாக மக்கா நகருக்குச் செல்ல வேண்டாம் என்றும் ஜெருசலம் வழியாக பயணிக்குமாறும் கேட்டுக் கொண்டார். இருப்பினும் இதனை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. கப்பல் மூலமாக பயணிப்பதையே இப்னு பதூதா விரும்பினார்.

இறுதியாக அலெக்சாண்டிரியாவில் இருந்து ஜித்தா செல்வதற்காக துறைமுகத்துக்குச் சென்ற போது புயல் காரணமாக அங்கிருந்த கப்பல்கள் அனைத்தும் உடைந்து காணப்பட்டன. அபுல் ஹஸன் அலீ ஷாதுலி அவர்களின் ஆலோசனையை தாம் ஏற்று கொள்ளாததை எண்ணி கவலை அடைந்தார்.
ஜெருசலம் வழியாக அவர் பயணிப்பதன் மூலம் இஸ்லாமிய சட்டத்துறை அறிஞர்களையும் பைத்துல் முகத்தசையும் தரிசிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்பதற்காகவே அபுல் ஹஸன் அலீ ஷாதுலி அவர்கள் ஜெருசலம் வழியாகச் செல்லுமாறு இப்னு பதூதாவை கேட்டுக் கொண்டிருக்க கூடும் என்று பேராசிரியர் H.A.R. கிப் கூறுகிறார்.


ஜெருசலம் வழியாக பயணம் தொடர்கிறது
தாத்தாரியர்கள் மற்றும் சிலுவை வீரர்களின் கடுமையான தொல்லைகளையும், தாக்குதல்களையும் தாண்டி ஜெருசலம் நகரை சென்றடைந்தார். பின்னர் அங்கிருந்து டமாஸ்கஸ் வழியாக புனித மதீனா நகரை சென்றடைந்தார். மதினா நகரில் நான்கு நாட்கள் தங்கி இருந்ததற்குப் பின்னர் மக்கா நகரை வந்தடைந்தார்.
உலகின் மற்ற நாடுகளைக் காணும் ஆர்வம்
ஹஜ் கடமையை பூர்த்தி செய்த பின்னர் அவருடன் வந்த பயணிகள் சொந்த ஊருக்குத் திரும்பினர். இப்னு பதூதா மட்டும் இரண்டு வருட காலம் அங்கேயே தங்கியிருந்து அங்கு வரும் மக்களைப் பற்றியும் மக்காவின் தினசரி வாழ்க்கை, அங்குள்ள மக்களின் கலாச்சாரக் கூறுகளைப் பற்றியும் அறியத் துவங்கினார்.
மக்காவின் கலாச்சார கூறுகளை கண்ட பின்னர் அவரின் ஆர்வம் உலகம் முழுவதும் இருந்த இஸ்லாமிய அரசுகளின் பக்கம் திரும்பியது. அனைத்து இஸ்லாமிய அரசுகளையும் நேரில் காண வேண்டும் என்ற ஆசை உருவாகவே மக்காவில் தன்னோடு நெருக்கமாக இருந்த வணிகர்கள் மற்றும் கடலோடிகளுடன் சேர்ந்து கிபி 1326 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 ஆம் தேதி சவுதி அரேபியாவின் நஜித் நகரில் இருந்து ஈராக்கின் நஜாப் நகருக்கான அவரின் இரண்டாவது பயணம் துவங்கியது.

வழி நெடுக இஸ்லாமிய அறிஞர்களையும், சஹாபாக்கள் வாழ்ந்த இடங்களையும் பார்வையிட்டுச் சென்றார். நஜாப் நகரில் இருந்து ஈராக்கின் பஸரா நகரை டைக்ரிஸ் நதி வழியாக கடந்து ஈரான் நாட்டின் இசுபஹான் மற்றும் சிராஸ் ஆகிய நகரங்களுக்கும் அவர் விஜயம் செய்தார்.

பாக்தாத் நகரின் பயணக்குறிப்பு
தாத்தாரியரின் படையெடுப்பினால் சிராஸ் நகரம் முழுவதுமாக அழிந்திருந்தது. இறுதியாக 1327ஆம் ஆண்டு பாக்தாத் நகரம் சென்றடைந்தார். பாக்தாத் நகரில் இப்னு பதூதா தங்கியிருந்த நாட்களில் அந்நகரைப் பற்றி தனது குறிப்புகளில் பதிவு செய்துள்ளார். அங்குள்ள குளியல் அறைகள் பற்றியும் பாக்தாத் நகரின் தெருக்கள், அங்காடிகள், இசைக் கூடங்கள், வீதிகள், அங்கு நிலவும் தட்பவெப்பம், அங்கு தயாரிக்கப்படும் உணவு, அங்குள்ள மக்களின் பேச்சுவழக்கு, என்ன வகையான உடையணிந்திருந்தார்கள், அன்று புழக்கத்தில் இருந்த நாணயம், அங்கிருந்த மரங்கள், மக்களிடம் இருந்த பொழுதுபோக்கு விருப்பங்கள், அங்கிருந்த மக்களின் மத ஈடுபாடுகள் போன்ற செய்திகளைக் குறிப்பிட்டுள்ளார்.

பாக்தாத் நகர மக்கள் குளியலை ஒரு கொண்டாட்டமாக மேற்கொண்டனர் என்றும். அங்கு இருந்த போது குளியல் அறைகளில் தான் குளித்த அனுபவம் குறித்தும் இப்படி சுத்தமானதும் சுகாதாரமானதுமான குளியல் முறை நாடெங்கும் ஒரே சீராக இருந்தது என்றும் தனது பயணக்குறிப்பில் குறிப்பிடுள்ளார்.

செர்பியாவை நோக்கிய பயணம்
இப்னு பதூதா பின்னர் செர்பியாவிற்கான பயணத்தை ஆரம்பித்தார். அவர் சென்ற சமயத்தில் அங்கு பனி பொலிந்து கொண்டிருந்தது. அவரின் புத்தக குறிப்பில் அந்த பகுதியை இருண்ட பிரதேசமாக அடையாளப்படுத்தி இருக்கிறார். செர்பியாவில் வாழ்ந்த மக்கள் உலகின் ஏனைய பிரதேசங்களில் இருந்த மக்களிடமிருந்து தொடர்பற்றவர்களாகவே இருந்தார்கள் என்றும் தனது புத்தகத்தில் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இந்தியப் பயணம்
இப்னு பதூதா செர்பியாவில் இருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகருக்குச் சென்றார். பின்னர் துருக்கியில் இருந்து ஆப்கானிஸ்தானுக்கான பயணத்தை ஸஹீஹுல் புகாரியை எழுதிய இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் பிறந்த சமர்கண்டின் வழியாக மேற்கொண்டு அந்நகரை பற்றிய தகவல்களையும் சேகரித்தார். பின்னர் பல்க் நகரின் வழியாக ஆப்கானிஸ்தான் சென்று இந்துகுஷ் மலையை கடந்து இந்தியாவை சென்றடைவது என்று திட்டமிட்டார். அதன் படி ஆப்கானிஸ்தானில் சில காலம் தங்கிய பின்னர் இந்தியா நோக்கி புறப்பட்டார்.

துக்ளகின் அரச சபையில் இப்னு பதூதா
இந்தியாவில் டெல்லி நகரை தலைமையகமாக கொண்டு ஆட்சி செய்த முஹம்மத் பின் துக்ளக் அவர்களை இப்னு பதூதா சந்தித்தார். அவருக்கு அரசபையில் மகத்தான வரவேற்பு கிடைத்தது. மாலிகி சட்டத்துறையில் நிபுணத்துவம் பெற்றிருந்தமையினால் அவர் டெல்லி நகரின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அவருக்கு வருடம் ஐயாயிரம் தினார்கள் ஊதியம் வழங்கப்பட்டது. அன்றைய கால கட்டத்தில் ஒரு சராசரிக் குடும்பத்தின் மாத வருமானம் ஐந்து தினார்கள்தான்.
இதுமட்டுமல்லாது சில கிராமங்களில் வரி வசூல் செய்து அவரே எடுத்துக் கொள்வதற்கு உரிமையும் வழங்கப்பட்டிருந்தது. அவர் ஏழு ஆண்டுகாலம் துக்ளக்கின் அரசபையில் பணியில் இருந்தார். முகமது பின் துக்ளக்கின் நிர்வாகச் சீர்கேடு இந்தியாவைச் சீர்குலையச் செய்தது. இதன் காரணமாக எதிர்ப்பு இயக்கங்கள் வலுக்கத் துவங்கின. துக்ளக் தனது எதிரிகளை ஒழிப்பதற்காக படையோடு டெல்லியை விட்டுச் சென்ற நாட்களில் மொத்த நீதி நிர்வாகமும் இவரிடமே ஒப்படைக்கப்பட்டது.

இப்னு பதூதாவின் தென்னிந்தியப் பயணம்
இப்னு பதூதா ஏழாண்டு காலம் அரசியல் பணிகளில் இருந்தபோது அவர் இந்தியா முழுவதும் பயணம் செய்தார். ஒருமுறை தனது கடற்பயணத்தின்போது அவரது கப்பல் சிதைந்து போய்விடவே அவர் மலபார்ப் பகுதியில் சில மாதங்கள் தங்கியிருந்து தென்னிந்திய மக்களின் வாழ்க்கை முறைகளைக் கண்டறிந்துள்ளார். அப்போது அவர் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பெரியபட்டினம் என்ற கடற்கரைத் துறைமுகத்திற்கு வந்து மூன்று மாதம் தங்கியிருந்ததாக ஒரு குறிப்பை எழுதியுள்ளார். தென்னிந்திய மக்கள் வெற்றிலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது பற்றி குறிப்பிட்டுள்ளார். விருந்தினர்களை வரவேற்று வெற்றிலைப்பாக்கு தருவது அவர்களுக்குத் தங்கமோ, வெள்ளியோ தருவதை விடவும் உயர்வானதாகக் கருதியதாகவும் அவருடைய குறிப்பில் தெரிவித்துள்ளார்.

சீன தேசம் நோக்கிய பயணம்

துக்ளக்கிற்கு எதிரான புரட்சி நடவடிக்கைகள் ஒடுக்கப்பட்டதும் துக்ளக் தனது எதிரிகளோடு தொடர்புள்ளவர்கள் யார் என்ற ஒரு பட்டியலைத் தயாரித்தார். அதில் எதிரி ஒருவரின் வீட்டில் இருந்த சூபி தத்துவவாதி ஒருவருக்கும் இவருக்கும் தொடர்பு இருந்தது துக்ளக்கிற்கு தெரிய வந்தது. எங்கே துக்ளக் தன்னையும் கொன்றுவிடக் கூடுமோ என்று அஞ்சிய இப்னு பதூதா ஒரு வார காலம் நோன்பு இருந்து, இரவும் பகலும் பிரார்த்தனை செய்தபடியிருந்தார். துக்ளக் எப்போது என்ன செய்வார் என்று அவரால் அறிந்துகொள்ள முடியவில்லை. சில நாட்கள் பிச்சைக்காரர் போல வேடமணிந்து டெல்லி தெருக்களில் சுற்றியலைந்துள்ளார்.


ஒரு நாள் அரசரிடம் இருந்து அழைப்பு வரவே அரசபை சென்ற அவர் தான் திரும்பவும் ஹஜ் பயணம் மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்தார். துக்ளக் அதை மறுத்து அவரை சீனாவிற்கான தூதுவராக நியமித்து, தேவையான பொருட்களும் வேலையாட்களும் கொடுத்து சீனாவிற்கு அனுப்பி வைத்தார்.
துக்ளக்கிடம் இருந்து தப்புவதற்காக அந்தப் பணியை ஒத்துக் கொண்டார் . சீனாவிற்குச் செல்வதற்காகப் புறப்பட்ட கடற்பயணத்தில் கப்பல் விபத்திற்குள்ளாகி மீனவர்களால் காப்பாற்றப்பட்டு மாலத்தீவு சென்றார். அங்கு ஒன்பது மாதம் தலைமை நீதிபதியாக பணியாற்றினார். ஆதம் (அலை) அவர்களின் கால் பாதம் இலங்கையில் சிவனொளி பாத மலையில் இருப்பதாக கேள்விப்பட்டு இலங்கைக்கு மன்னார், புத்தளம் வழியாக சென்றார். கண்டி ராஜ்யத்தின் மன்னன் ராஜசிங்கன் அவருக்கு பாதுகாப்பு வழங்கியதாக தனது ரிஹலா என்ற புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறார்.
கடுமையான தடைகளுக்கு பின்னர் மீண்டும் அவரின் சீன தேசம் நோக்கிய பயணம் துவங்கியது கி.பி.1345ஆம் ஆண்டு சீனாவின் புஜியான் நகருக்கான பயணத்தை ஆரம்பித்தார். புஜியான் பிரதேச மக்கள் உணவுக்காக பூசணி, திராட்சை போன்றவற்றை பயன்படுத்தியதாகவும் சீனாவின் மத்திய பிரதேசங்களில் வாழ்ந்த மக்கள் உணவுக்காக பன்றி, தவளை, நாய் போன்றவற்றை பயன்படுத்தியதாக தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இவற்றை விற்பனை செய்வதற்காக சந்தைகளை அமைத்து இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்

சொந்த நாடு திரும்புதல்
முப்பது ஆண்டுகள் பயணத்தில் பல நாடுகளில் நோயால் பீடிக்கப்பட்டும், சில அரசர்களினால் சிறைகளில் அடைக்கப்பட்டும், பயணம் செய்த கப்பல் விபத்திற்குள்ளாகியும் துன்புற்றார். மோசமான உடல்நலக் கேட்டிற்குள்ளான இப்னு பதூதா முடிவாக தனது சொந்த நாடு திரும்பினார். அவருக்கு சுல்தான் சிறப்பான வரவேற்பு கொடுத்து பாஸ் என்ற நகரில் வசிப்பதற்கான உதவிகள் செய்தார்.

இப்னு பதூதாவின் பயணக் குறிப்புகள்
இப்னு பதூதாவின் பயணக் குறிப்புகள் அனைத்தும் அவரது இறுதிக் காலத்தில் மொராக்கோவின் சுல்தான் ஆணையின்படி, அவர் சொல்லச் சொல்ல இப்னு சஜாயி என்ற கவிஞரால் எழுதப்பட்டது. தனது வயதான காலத்தில் தான் கண்டும் கேட்டும் அறிந்திருந்த விவரங்களை இரண்டு வருட காலம் தினமும் அரச சபையில் கூறுவார்.

இப்னு சுஜாயி அவற்றைக் குறிப்புகளாக எடுத்துத் தொகுத்து நீண்ட பயண நூலாக்கி அதற்கு புத்தக வடிவம் கொடுத்தார். ‘அறிவைத்தேடிச் செல்வது மனிதனின் முதற்கடமையாகும். எனது பயணம் முழுவதுமே அறிவைத்தேடி நான் மேற்கொண்ட முயற்சிகளே’ என்று குறிப்பிடும் இப்னு பதூதாவின் பயணக் குறிப்புகள் 14-ஆம் நூற்றாண்டின் இந்தியாவைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கும், அன்றைய அரசியல் மற்றும் சமூக நிகழ்வுகளைப் பதிவு செய்வதிலும் முக்கிய பங்கு வகித்திருக்கின்றன.

இப்னு பதூதாவின் பயணக் குறிப்புகள் மூன்று தொகுப்புகளாக வெளிவந்துள்ளன. இந்தத் தொகுப்புகளை வாசிக்கும் போது முன்னுக்குப் பின் முரணான சில விவரங்களும் இடம் காலம் பற்றிய குழப்பங்களும் ஏற்படுகின்றன. அத்தோடு இப்னு பதூதா எழுதியதற்கு மேலதிகமாக இடைச் செருகல்கள் இருந்திருக்கக்கூடும் எனவும் கருதப்படுகிறது.
எதுவாக இருபினும் ஜவஹர்லால் நேரு அவர்களின் கூற்றுப்படி மத்திய காலத்தின் மிகச் சிறந்த பயணி இப்னு பதூதாவே. இறுதியாக 1369ஆம் ஆண்டு தனது 65வது வயதில் 44 நாடுகளை நேரில் கண்ட மகிழ்ச்சியுடன் அவரின் உலகப் பயணம் நிறைவு பெற்றது.

  • R. முஹம்மது அனஸ், கீரனூர்