இளம் ஆலிம்களே! உங்களைத்தான்! 28

துறை சார்ந்த சாதனை

அ. முஹம்மது கான் பாகவி

அருமையான இளம் ஆலிம்களே! அரபிக் கல்லூரி மாணவக் கண்மணிகளே! கடந்த 27 மாதங்களாக – அதாவது இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக – சமூக நீதி முரசு மாத இதழில் இத்தொடர் வாயிலாக உங்களைச் சந்தித்துப் பல்துறை கருத்துகளையும் யோசனைகளையும் உங்களுடன் பகிர்ந்துகொண்டிருக்கிறேன். இது 28ஆவது தொடர்; இறுதித் தொடர் ஆகும்.

மார்க்கக் கல்வி, மார்க்கக் கல்லூரிப் பாடத் திட்டம், அதில் இடம்பெறும் பல்வேறு கலைகள், அவற்றைக் கற்பதால் கிடைக்கும் பலன்கள், அவற்றின் அவசியம் அல்லது அவசியமின்மை, கற்க வேண்டிய முறைகள், பாடத்திற்கு வெளியே கற்க வேண்டியவை, சுயமாகத் தேடிக்கொள்ள வேண்டிய சிறப்புத் தகுதிகள்… எனப் பல்வேறு கோணங்களில் உங்கள் சிந்தனைகளைத் தூண்டிவிட்டு, விழிப்பூட்ட முயன்றிருக்கிறேன்.

இந்த முயற்சிக்குக் காரணம் உண்டு. பிறந்த மண்ணிலிருந்து 12 வயதில் வெளியேறியவன், இந்த 67 வயதிலும் வெளியேதான் வாழ்நாளைக் கழித்துக்கொண்டிருக்கிறேன். பள்ளிப் படிப்பைக்கூட முடிக்காமல் புறப்பட்டவன், ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக மார்க்கக் கல்வி பயின்று, 23 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றி, 24 ஆண்டுகளாக முழுநேர மொழிபெயர்ப்புப் பணியில் என் வாழ்நாளைச் செலவிட்டு வருகிறேன்.

பல இயல்கள், பல நூல்கள், பல துறைகள், பல ஆசிரியர்கள், மாணவர்கள், அறிவுஜீவிகள், பொதுமக்கள் எனப் பன்முகச் சிந்தனைகள் மற்றும் சிந்தனையாளர்களுடன் தொடர்புகொண்டவன்; பழகியவன். இந்த நீண்ட கல்விப் பயணத்தில் நான் பெற்ற அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற ஆசைதான் அந்தக் காரணம். ஒருகால் உங்களுக்கு இது சிறிதளவேனும் பயனளிக்கலாம்; கைகொடுத்து வழி நடத்தலாம்; எதைத் தேர்வு செய்வது? எதைக் கைவிடுவது என்ற திகைப்பைப் போக்கிப் பாதை காட்டலாம்!

ஒருவரின் பட்டறிவு, மற்றவருக்குப் பாடமாக அமையக்கூடும்! அப்போது படிப்பறிவைவிடப் பட்டறிவே கை கொடுக்கக்கூடும். இன்ன கட்டத்தில் யாரேனும் எனக்கு இந்த வழியைக் காட்டியிருந்தால், என் எதிர்காலமே ஒளிமயமானதாக இருந்திருக்குமே என்று கைபிசைந்துகொண்டு உங்களில் யாரும் நிற்கக் கூடாது அல்லவா! அதற்காகத்தான் இத்தொடர்.

ஆனால், உங்களில் எத்தனை விழுக்காட்டினர் இத்தொடரை படித்தீர்கள்? பயனடைந்தீர்கள் என்பது எனக்கு தெரியாது. வெகுசிலர் நேரில் சந்தித்தபோது இதைப் பற்றிக் கதைத்துள்ளார்கள். இளம் ஆலிம்களல்லாத வெகுசிலர் வாசகர் கடிதம் வாயிலாகக் கருத்துத் தெரிவித்துள்ளார்கள். ஆயினும், யாருக்காக இத்தொடரை அக்கறையோடு எழுதினேனோ அவர்களை இது சென்றடைந்ததா என்பதில் பலத்த ஐயம் உண்டு எனக்கு!

சாதனை படையுங்கள்!

இறுதித் தொடரில் இளம் ஆலிம்களிடம் ஒன்றை வலியுறுத்த விரும்புகிறேன். மத்ரஸாக்களில், கல்லூரிகளில் நீங்கள் கல்வி கற்றது சரி! ஒரு மஸ்ஜிதில் இமாமாக, மக்தப் மத்ரஸா ஆசிரியராக, அரபிக் கல்லூரி பேராசிரியராக, சிறப்பு வகுப்புகள் நடத்துபவராக, மொழிபெயர்ப்பாளராக நீங்கள் பணியாற்றுவதும் சரி! ஒரு பேச்சாளராக, அல்லது எழுத்தாளராக, நூலாசிரியராகப் பவனிவருவதும் சரி!

ஏதேனும் ஒரு குறிப்பிட்ட துறையில், சுட்டிக்காட்டப்படும் விற்பன்னராகவும் சாதனையாளராகவும் நீங்கள் திகழ வேண்டுமென ஆசிக்கிறேன். அத்துறை தொடர்பாக யாருக்குச் சந்தேகம் வந்தாலும் அவர்கள் உங்களை அணுகினால் விடை கிடைக்கும்; தீர்வு காண முடியும் என்ற இடத்தை நீங்கள் எட்ட வேண்டும்.

இந்த எல்லையை அடைய நீங்கள் கடினமாக உழைக்க வேண்டியதிருக்கும். அத்துறையின் அரிச்சுவடி முதல் ஆராய்ச்சிவரை நீங்கள் எட்டிப்பிடித்திருக்க வேண்டும். நுனிப்புல் மேய்ந்தால் போதாது; நன்கு நுகர வேண்டும்; நுகர்ந்ததைச் செரிக்க வேண்டும்; பின்னர் தேவைப்படும் எந்த நொடியாக இருந்தாலும், ஏன் உறக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் எடுத்தியம்ப இயல வேண்டும்.

எடுத்துக்காட்டாக, இஸ்லாமிய அறநெறி, அரசியல், அறிவியல், பொருளியல், வரலாறு, சட்டவியல், சட்ட நோக்கவியல் (மகாஸிதுஷ் ஷரீஆ), உளவியல் (தஸ்கியா)… எனப் பல்லியலைக் குறிப்பிடலாம். இவற்றில் ஒன்றின் ஆழமான அறிவைப் பெற்று, ஆய்வு செய்து முனைவர் பட்டம் வாங்கி அதுகுறித்தே சிறப்பு வகுப்புகள் எடுத்து, குறிப்புகளும் புத்தகங்களும் எழுதி, அதன் நுணுக்கங்களை அக்குவேறு ஆணிவேராகப் பிரித்து மேயும் ஆற்றலை நீங்கள் பெற வேண்டியதிருக்கும்.

சாதனைக் களம் ஏராளம்

படிப்பு, கல்வி, நூல் என்றளவோடு முடிந்துவிடுவதில்லை சாதனைப் பட்டியல். நீங்கள் புரிகின்ற சமூக சேவைகள், சமுதாயத் தொண்டுகள், அறப்பணிகள், கல்வி மற்றும் நிதியுதவி அறக்கட்டளைகள், ஆதரவற்றோர் இல்லங்கள், ஏழைகள் குடியிருப்புகள்… என எல்லா உதவும் கரங்களாலும் சாதனை படைக்க முடியும்.

சிலருக்குக் கல்வியாற்றல் குறைவாக இருக்கும்; ஆனால், செயலாற்றல் வியக்கும் அளவிற்குப் பெரிதாக இருக்கும். இறைவன் அருளிய அந்த ஆற்றலைக் கொண்டு, பள்ளி, கல்லூரி, மத்ரஸா, மருத்துவமனை, நூலகம், வழிகாட்டும் மையங்கள், குடும்ப சமரச மையங்கள், குறு மற்றும் சிறு வணிகர்கள் உதவும் மையங்கள், வட்டியில்லா கூட்டுறவு நிலையங்கள், ஏழை விவசாயிகள் கடனுதவி, ஏழை மாணவர்கள் கல்வியுதவி, ஏழை மணமக்கள் திருமண உதவி ஆகிய மன்றங்கள்… என ஏகப்பட்ட துறைகளில் நீங்கள் சாதிக்கலாம்!

எல்லாவற்றும் மேலாக, நீங்கள் செய்ய வேண்டிய அதிமுக்கியமான சேவை ஒன்று உண்டு. அது ஒரு வகையில் உங்கள் கடமை என்றே சொல்லலாம்!

ஒரு மஹல்லாவில் இமாமாகப் பணியாற்றுகிறீர்கள். அந்த மஹல்லாவில் முஸ்லிம் குடும்பங்கள் எத்தனை? ஒவ்வொரு குடும்பத்தின் உறுப்பினர்கள் எத்தனைபேர்? அவர்களுக்கு வேண்டிய குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, பிறப்புப் பதிவு அட்டை, பாஸ்போர்ட்… போன்ற அடையாள அட்டைகளை சரியாகப் பிழையேதுமின்றி அவர்கள் வைத்துள்ளார்களா?

ஒவ்வொரு குடும்பத்திலும் படிக்கும் ஆண்-பெண்கள், வேலை செய்வோர், படிக்காதவர்கள், குழந்தைத் தொழிலாளர்கள், திருமணம் முடித்தவர்கள், முடிக்காதவர்கள், வெளிநாடுகளில் பணியாற்றுவோர், மாணவ-மாணவிகளின் பழக்கவழக்கங்கள், அவர்களுடைய நட்பு வட்டாரங்கள்… போன்ற அடிப்படைத் தகவல் திரட்டு உங்கள் வசம் இருக்க வேண்டும்.

யார் யாருக்கு என்ன தேவை? உங்களால் எந்த அளவுக்கு உதவ முடியும் என்பதைப் பரிசீலியுங்கள். வழிகாட்டல், விழிப்புணர்வு, நிதியுதவி, தன்னம்பிக்கை போன்ற சேவைகளை நீங்கள் முன்னெடுத்து, பள்ளிவாசல் நிர்வாகிகள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், முதலானோரின் ஒத்துழைப்புடன் ஒவ்வோர் இமாமும் செய்துவந்தாலே சமுதாயம் கல்வி, வேலைவாய்ப்பு, மார்க்கப் பற்று, நல்லொழுக்கம் முதலான எல்லா அம்சங்களிலும் முன்னணிக்கு வந்துவிடும்.

சாதனைகளுக்கு வயதும் இல்லை; தடையும் இல்லை. மக்களின் வரவேற்பும் கிடைக்கும்; இறைவனின் உதவியும் கிடைக்கும்!

ஆக, நாம் வாழ்ந்து மறையும்போது, அங்கே ஒரு வெற்றிடம் காணப்பட வேண்டும்; இழப்பு உணரப்பட வேண்டும். நம் குடும்பத்தாருக்கு மட்டுமல்ல; முகம் தெரியா மக்களுக்கும் சமுதாய ஆண்களுக்கும் பெண்களுக்கும்! இதுதான் சான்றோரின் வாழ்வும் சாவும்.

நம் சடலத்தை நான்கு பேர் தோளில் சுமந்து செல்லும்போது, மக்கள் அளிக்கும் வாக்குமூலமே அல்லாஹ்வின் தீர்ப்பாக அமைவதுண்டு. இம்மை மட்டும் நம் இலக்கு அல்ல; மறுமையும்தான். மறக்க வேண்டாம்!

நிறைவு